மன்னார் மின்சார சபையிடம் கையளிக்கப்பட்டுள்ள மக்கள் சார்பான மகஜர்

மன்னார் அமுதன் @
(ஜோசப் அமுதன் டானியல்)
இல: 23, வயல் வீதி,
சின்னக் கடை, மன்னார்
19.08.2015

சேரல்:
திரு.மிஸ்ரக்
மின் அத்தியட்சகர்
இலங்கை மின்சார சபை – மன்னார்.

தொடர் மின்தடையால் அவதியுறும் மன்னார் மாவட்ட மக்கள், மாணவர்களின் பிரச்சினைகளை மின்சார சபையின் கவனத்திற்கு கொண்டுவருதல் மற்றும் உரிய தீர்வினைப் பெற்றுத்தருமாறு கோருதல்

வணக்கம். தொடர் மின் தடையால் மன்னார் மக்கள் பெரும் துன்பத்திற்கு ஆளாகி வருவது அனைவரும் அறிந்த ஒரு விடயமாகும். குறிப்பாக ஒவ்வொரு ஆண்டும் புலமைப்பரிசில் தேர்வு, க.பொ.த. உயர்தரப் பரிட்சைகள் நடைபெறும் ஆகஸ்ட் மாதத்தில் மின்தடைப் பிரச்சினை உச்சமடைந்து மக்களின் பொறுமையை சோதிக்கும் ஒரு பாரிய விடயமாக உருவெடுத்து வருகிறது. எனவே மன்னார் மாவட்ட சகல மக்களும் அனுபவித்து வரும் இத்துன்பத்தை பொதுமைப்படுத்துவதற்கும் தீர்வு காண்பதற்கும் எவராவது முன்வரவேண்டும் எனும் நன்நோக்கில் இக்கடிதம் எழுதப்படுகிறது.

அதிகபட்ச வெப்பநிலையாக (சராசரி) 32 பாகை செல்சியஸ் பதிவுசெய்யப்படும் மன்னாரில் ஒவ்வொருவரும் மின்சாரவசதியையும், மின்உபகரணங்களின் தேவையையும் நாடியவர்களாக உள்ளனர். குறிப்பாக குழந்தைகள், வயோதிபர், நோயாளிகளுக்கு மின்சாதனங்களின் தேவை இன்றியமையாததாக உள்ளது. மன்னார் மக்கள் தொடர் மின்தடையால் எதிர்நோக்கும் பாரிய பிரச்சினைகளாவன:

1. கல்வி ஒன்றையே வாழ்வின் மூலாதாரமாகக் கருதி கல்வி கற்றுவரும் எம்மாணவர்களின் கற்றல் செயற்பாட்டிற்கு மின்சார தடையானது பெரும் இடையூறாக உள்ளது. அடிக்கடி ஏற்படும் மின்தடையின் விளைவாக மாணவர்கள் கற்றலில் முழுமையாக ஈடுபட முடியாமல் இருப்பதுடன், எதிர்பார்க்கும் பெறுபேறுகளைப் பெற முடியாமல் பல்வேறு உளவியல் தாக்கத்திற்கும் உள்ளாகுகிறார்கள். இந்த உளவியல் தாக்கத்தின் விளைவாக பரிட்சை பெறுபேறுகள் வெளியிடப்படும் காலத்தில் பல்வேறு விபரீத சம்பவங்களும் இடம்பெறுகின்றன. இதற்கு மின்தடையும் ஒரு மறைமுகக் காரணம் என்பதை மறுக்கவோ, மறைக்கவோ முடியாது.

2. மன்னார் மாவட்ட அரச பொது வைத்தியசாலையானது மாவட்டத்தின் பிரதான வைத்தியசாலையாகும். ஏலவே பல (போதிய மருத்துவர்கள் இன்மை, மருந்து வசதியின்மை, ஆளணியின்மை, கருவிகளின்மை,) குறைபாடுகளோடு செயற்பட்டு வரும் இவ்வைத்தியசாலை குறித்து சில கவனயீர்புப் போராட்டங்கள் நடந்தன என்பது நாம் அறிந்ததே. இந்நிலையில் தொடர்ந்து ஏற்படும் மின்தடையினால் அங்குள்ள நோயாளிகளுக்கு ஏற்படும் அசெளகரியங்கள் குறித்து நாம் கரிசனை கொள்ள வேண்டும். அவசர சிகிச்சைப் பிரிவிலும், அறுவை சிகிச்சைக்காகவும், கதிரியக்கப் படம் எடுப்பதற்காகவும் இன்னும் பல அதிமுக்கிய தேவைகளுக்காகவும் எத்தனை நோயாளிகள் நாள்தோறும் காத்திருக்கின்றனர். குறைந்தபட்ச மனிதாபிமானமுள்ள மனிதர்கள் கூட இது பற்றி சிந்திப்பார்கள்.
3. அரச, தனியார்துறை ஊழியர்களும், ஆசிரியர்களும், உடலுழைப்பை முதலாகக் கொண்டவர்களும் அதிகாலையில் எழுந்து சமைத்து தமக்குரிய காலை, மதிய உணவுகளை எடுத்துச் செல்வது மன்னாரில் வழமையாகும். தொடர் மின்தடையால் மக்கள் தங்கள் அன்றாடப் பணிகளை முன்னெடுக்க முடியாமல் இருப்பதுடன், புழுக்கம், நுழம்பு பிரச்சினைகளால் இரவுத்தூக்கத்தை தொலைப்பவர்கள் அதிகாலையில் எழுவதிலும், தூக்கத்தை இழப்பதால் ஏற்படும் மனச்சோர்வால் பணியிடங்களில் கடமையைச் சீராகச் செய்யமுடியாமலும் பல பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள்.

4. பொருளாதாரத்தில் வளர்ந்து வரும் மாவட்டமாகிய மன்னாரில் உள்ள சுயதொழில் முயற்சியாளர்களுக்கும், அரச நிறுவனங்களுக்கும் மின்தடையானது அன்றாடச் செயற்பாடுகளை முன்னெடுப்பதில் ஒரு பாரிய சவாலாக உள்ளது. விதவைகள் மற்றும் சுயதொழில் முயற்சியாளர்களுக்கென கடந்த காலங்களில் ரூ.40 மில்லியன் செலவில் மின்சாரத்தில் இயங்கும் தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக அறிகிறோம். இது தவிர மேலும் நூற்றுக்கணக்கானவர்கள் தமது வாழ்வாதாரத்திற்காக தையல் தொழிலை செய்துவருகின்றனர். சுற்றுலாத் துறையோடு தொடர்புடைய உல்லாச விடுதிகளையும், உணவகங்களையும், மின்சாரத்தோடு நேரடித் தொடர்புடைய சுயதொழில்முயற்சிகளையும் வங்கிகளில் கடன் பெற்று பலர் செய்து வருகின்றனர். தொடர் மின்வெட்டால் இவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதுடன் மின் உபகரணங்களும், உணவுப்பண்டங்களும் பழுதடைகின்றன. இதனால் நட்டத்தை எதிர்நோக்கும் இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாவதுடன் பெரும் பொருளாதார நெருக்கடிகளையும் எதிர்நோக்க நேரிடுகிறது.

5. ஒரு மணித்தியாளத்திற்கு 15 முதல் 20 தரம் வரை மின்னிணைப்பு கொடுக்கப்பட்டு உடனடியாகத் துண்டிக்கப்படுகிறது. கிறிஸ்மஸ் காலத்தில் வீடுகளில் பயன்படுத்தும் அலங்கார விளக்குகள் விட்டு விட்டு ஒளிர்வதை போன்ற மின் வழங்கலினால் வீட்டிலுள்ள சிறுவர்களுக்கு “இது கிறிஸ்மஸ் காலமோ” எனும் மயக்கத்தை மன்னார் மின்சார சபை ஏற்படுத்தியுள்ளது இந்நடைமுறை நாள்தோறும் நடைபெற்றுக்கொண்டே இருக்கிறது. இதனால் ஒரு சாதாரண குடிமகனின் வீட்டில் பயன்படுத்தப்படும் மின்விசிறி தொடக்கம் தொலைக்காட்சி, கணணி, குளிர்சாதனப் பெட்டி, ரைஸ் குக்கர் என அனைத்து மின் உபகரணங்களும் பழுதடையும் நிலையில் உள்ளன. பல பழுதடைந்தும் உள்ளன. சீரான மின்வழங்கலின்மையால் பழுதடையும் பொருட்களை திருத்துவதற்கோ, புதிதாகக் கொள்முதல் செய்வதற்கோ நாம் தயக்கம் காட்டவேண்டியுள்ளது.

6. மாதம் முடியும் போது மின்பட்டியலில் உள்ள தொகையை முழுவதுமாக செலுத்தும் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் நற்பிரஜைகளும், நுகர்வோருமாகிய எமக்கு நாட்டின் ஏணைய பகுதிகளில் உள்ள பிரஜைகளைப் போல சகல வளங்களையும் பெற்று வாழுவதற்கான உரிமை உள்ளது. அவ்வுரிமைகளில் ஒன்றை மன்னார் மின்சார சபை பறித்துள்ளதா எனும் எண்ணம் மேலிடுகிறது. மின் தடை குறித்து கேட்பதற்கு மின்சாரசபையின் தொலைபேசி இலக்கங்கள் வேலைசெய்வதில்லை. முறையான பதில் சொல்வதில்லை. அறிவியல் வளர்ச்சியில் பல உச்சங்களை தொட்டுள்ள இந்நவீன யுகத்தில் மின்தடைக்காக மின்சாரசபை கூறும் காரணங்கள் (மின்சார கம்பிகளில் தூசிபடிதல், பனி, உப்புக்காற்று, கம்பிகள் உடைதல்) ஏற்றுக்கொள்ளக் கூடியவையாக இல்லை. மன்னாரின் நிலஅமைப்பையும், காலநிலையையும் கொண்ட நாட்டின் பிறபகுதிகளிலும் இதே போன்றதொரு பிரச்சினை இருக்கிறதா? கொழும்பில் இல்லாத தூசியும், உப்புக் காற்றும், கடலும், வெயிலுமா மன்னாரில் உள்ளது. பின் ஏன் எமக்கிந்த நிலை…?

மேற்குறிப்பிட்டுள்ள சில பாரிய பிரச்சினைகள் மேலும் பல உபபிரச்சினைகளை உருவாக்கி வாழ்க்கையை சிக்கலும், குழப்பமும் நிறைந்த ஒன்றாக மாற்றியுள்ளது. மின் ஊடகங்கள் நிறைந்த அறிவியல் யுகத்தில் மன்னார் மக்கள் (மின்தடையால்) இன்னும் செவிவழிச் செய்திகளையே கேட்டுக்கொண்டிருக்கின்றனர் என்பது வருத்தத்திற்குரிய விடயம் அல்லவா?

ஆகவே நல்லாட்சி உறுதிப்படுத்தப்பட்டுள்ள இக்காலத்தில் தொடர்மின்வெட்டு குறித்து துறைசார்ந்த வல்லுநர்களோடு ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுப்பதன் மூலமும், எமது மக்கள் இனியும் இது போன்ற துன்பத்தை அனுபவிக்காமல் பாதுகாக்குமாறும் இதுகுறித்து மின்சார சபை எடுக்கும் நடவடிக்கைகளை ஊடகங்கள் வாயிலாக பொதுமக்களுக்கு அறியத்தருமாறும் தயவுடன் கேட்டுக்கொள்கின்றோம். தவறும்பட்சத்தில் மாவட்டத்தின் சகல மக்களையும் ஒருங்கிணைத்து இலங்கை மின்சார சபை –மன்னார் பிரிவுக்கு எதிராக சாத்வீக போராட்டங்களை மேற்கொள்ளும் நிலைக்கு நாம் தள்ளப்படுவோம் என்பதை மிகத் தெளிவாகவும் தாழ்மையுடனும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

மன்னார் அமுதன் @
(ஜோசப் அமுதன் டானியல்)
மன்னார் மக்கள் சார்பாக

குறிப்பு: (நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்களின் கையெழுத்து பிரதி, அடையாள அட்டை இலக்கத்துடன் இணைக்கப்பட்டுள்ளது)

பிரதி:
1. திரு.பிரபாகரன் – பிரதான மின் அத்தியட்சகர், இ.மி.ச, பூங்கா வீதி, வவுனியா
2. திரு.குணதிலக்க – பிரதிப் பொதுமுகாமையாளர், இ.மி.ச, (வடக்கு மாகாணம்), கே.கே.எஸ். வீதி, யாழ்.
3. மன்னார் பிரஜைகள் குழு
4. கெளரவ.சாள்ஸ் நிர்மலநாதன் – பா.உ
5. கெளரவ.ரிசாட் பதியுதீன் – பா,உ
6. கெளரவ. செல்வம் அடைக்கலநாதன் – பா.உ
7. கெளரவ. சிவசக்தி ஆனந்தன் – பா.உ
8. கெளரவ.பா.டெனிஸ்வரன் – வடமாகாண போக்குவரத்துதுறை அமைச்சர்

கையெழுத்துப் பிரதிகள்: