கோகுலாஷ்டமி கவிதை

கால்கள் பதிக்க
மாக்கரைத்தாயிற்று

விரல் மடக்கி
அடிக்கையை மாவில் முக்கி
சிறுவிரல் நிலத்தில் பட
ஒரு குத்து

ஆட்காட்டி விரலால்
கரைசலைத் தொட்டு
சுவடின் முன்
பெரிதும் சிறிதுமாய்
ஐந்து புள்ளி

விரல்கள் பதிப்பதும்
கால்கள் வரைவதும்
ஒரு கலையாகிவிட்டது

செய்வதறியாமல்
குட்டிக் கால்களோடு
வீடு முழுவதும்
ஓடித் திரிகிறது
குழந்தை

— மன்னார் அமுதன்