காலத்தின் தேவையாகிவரும் தனியார் பல்கலைக்கழகங்கள் – இலங்கை

15.11.2015 ஆம் திகதிய தீபம் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ள எனது கட்டுரை: ஆக்கம் – மன்னார் அமுதன்

தனியார் மயமாக்கபடும் கல்வித்துறை எனும் கோசத்தோடு இன்று பல போராட்டங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.  கல்வித்துறையை முற்றுமுழுதாக தனியார் மயமாக்குவதோ அல்லது உயர் கல்வி வரை அரச இலவசக் கல்வியை மட்டுமே அமுலில் வைத்திருக்க வேண்டும் எனும் கருத்துகளுக்கு மாற்றாக அரச இலவசக் கல்வியோடு, தனியார் பல்கலைக்கழகங்களும் (or private affiliated colleges) கலை, அறிவியல் பீடங்களை அமைக்க அனுமதிக்கப்பட வேண்டும் எனும் கருத்தை முன்வைத்து இக்கட்டுரை எழுதப்படுகிறது.

கல்வி என்பது அறிவை விருத்தி செய்வதற்கான மூலவழி. கல்வி ஒருவருடைய அடிப்படை உரிமை. அடித்தட்டு மக்கள் முன்னேறுவதற்கான ஒரே வழி கல்வி தான் எனும் கருத்திற்கு அமைவாக நாட்டின் பிரஜைகள் ஒவ்வொருவரிற்கும் கல்வியை வழங்கவேண்டியது ஒரு அரசின் தலையாய கடமையாகும். இலவசக் கல்வியை சில நாடுகள் ஆரம்பக் கல்வியோடு மட்டுப்படுத்தியுள்ள நிலையில் இலங்கை போன்ற நாடுகள் பல்கலைக்கழக கல்வி வரை நீட்சிப்படுத்தியுள்ளது வரவேற்கவேண்டிய விடயமாகும்.

இலவசக் கல்வி மூலம் ஒவ்வொரு வருடமும் கிட்டத்தட்ட 125,000 மாணவர்கள் க.பொ.த உயர்தரத்தில் சித்திபெற்று பல்கலைகழகங்களுக்கு செல்வதற்கான தகுதியைப் பெறுகின்றனர். அவர்களில் 25,000 பேர் மட்டுமே (20%) பல்கலைக்கழகங்களில் உள்வாங்கப்படுகின்றனர்.

பல்கலைக்கழகங்களிற்கு மாணவர்களை உள்வாங்குவதற்கென வழங்கப்படும் வெட்டுப்புள்ளிகள் எதனடிப்படையில் தீர்மானிக்கபடுகின்றன எனும் கேள்விக்கு பலர் கூறும் பதில் திறமை அடிப்படையில் என்பதாகும்.

வெட்டுப்புள்ளியானது  பல்கலைக்கழகங்களில் ஒரு துறையில் இருக்கும் கற்றல், கற்பித்தலிற்கான (இடம் உட்பட) வசதியின் அடிப்படையில் தான்  தீர்மானிக்கப்படுகிறது.

அதாவது இலங்கையில் பட்டப்படிப்பை வழங்கும் 14 தேசியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் 4 நிறுவனங்களில் 20விகித மாணவர்கள் படிப்பதற்கான வசதியே தற்போது உள்ளது என்பதே இன்றைய நிலை.

பல்கலைக்கழகங்களில் கற்றல், கற்பித்தல் வசதிகளைப் பெருக்கும் போது உள்ளூர் தராதரங்களுடன் அதிகமான மாணவர்களை ஒரு துறையில் உள்வாங்க முடியும். துரதிஷ்டவசமாக அதை உடனடியாக நடைமுறைப்படுத்துவதற்கான பெருந்தொகையான பணமும், உட்கட்டுமானமும் அரசிடம் இல்லை என்பதே உண்மையான நிலைப்பாடாகும். அது அரசின் குறைபாடாகும்.

ஒரு அரசின் குறைபாடு 80 வீதமான மாணவர்களின் வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்குகிறதே என கோபம் கொள்ள வேண்டியதும் இல்லை. ஏனென்றால் நாடு எமக்கு என்ன செய்தது என்று கேட்பதைவிட, இலவசக் கல்வியைப் பெற்றுக்கொண்ட நாம் நம் சமுதாயத்திற்கு என்ன கைமாறு செய்திருக்கிறோம் என்று சிந்திப்பதே நற்குடிமகனின் கடமையாகும். சகல குடிமக்களுக்கும் இலவசக் கல்வியை பல்கலைக்கழகம் வரை வழங்குவது என்பது ஒரு அரசின் தூரநோக்காக மட்டுமே இருக்கமுடியும்.

எனவே கற்றல், கற்பித்தல் வசதிகளுடன் கூடிய தனியார் பல்கலைக்கழகங்களை இலங்கையில் அனுமதிப்பதன் மூலம் இலவசக் கல்விக்கு உள்வாங்கப்படாத மாணவர்கள் பல்கலைக்கழகக் கல்வியைப் பெறுவதற்கு வழிசமைக்க முடியும்.

பணமுள்ளவர்களும், அரசியல் பலமுள்ளவர்களும் அரச புலமைப்பரிசில்களைப் (Scholarship) பெற்றுக்கொண்டு வெளிநாடுகளில் உயர்க்லவியைக் கற்கிறார்கள். எனக்கு தெரிந்த ஒருவரின் மகன் இரண்டுவருடங்களாய் தொடர்ந்த வெளிநாட்டு புலமைப்பரிசிலை (IT) இடைநிறுத்தி மற்றுமொரு அரச புலமைப்பரிசிலை பெற்று மருத்துவரானார்.

சில கல்வி நிறுவனங்கள் தற்போதும் வெளிநாட்டு கல்விநிறுவனங்களுக்கு இடைத்தரகர்களாக செயற்படுகின்றன. தனியாரில் சட்டம் படிப்பதற்கு (LLB) 13 இலட்சம் ரூபாய் தேவைபடுகிறது. எத்தனையோ மாணவர்கள் வெளிநாடுகளில் படிக்கிறார்கள். இதற்கு ஆகும் செலவை விட இலங்கையில் அமையும் தனியார் பல்கலைக்கழகங்களில் கற்பதற்கு குறைந்த செலவே ஆகும்.

மேலும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஆசிய நாடான இலங்கையை நோக்கி மாலத்தீவு, பாகிஸ்தான் போன்றநாடுகளில் இருந்து மாணவர்கள் வந்து கற்கிறார்கள். தனியார் பல்கலைக்கழகங்கள் உருவாகும் போது அது நாட்டிற்கு அன்னியச்செலாவணியை அதிகரிக்கும் ஒருவழியாகவும் அமையும்.

தனியார் கல்லூரி/ பல்கலைக்கழகங்களை ஊக்குவிக்கும் அதே நேரம் அவர்கள் கல்விக்காக வசூலிக்கும் தொகைக்கான உச்சவரம்பையும் அரசு நிர்ணயிக்க வேண்டும். உட்கட்டுமான வசதிகளையும், தர நிர்ணயங்களையும் மேற்கொண்டு கல்விநிலையங்களை அமைப்பதற்கான அனுமதிகளைக் கொடுக்க வேண்டும்.

கல்வியின் தரம் என்பது சிரத்தையோடு கற்கும் மாணவர்களையும், கல்வியை வழங்கும் நிறுவனத்தின் கற்பித்தல் வளங்களையும் சார்ந்ததாகவே அமையும். இன்றைய இலவச பல்கலைக்கழக கல்வியில் கல்வியின் தரம், தொழிற்துறையுடனான தொடர்பு, ஆங்கில மொழியறிவு ஆகியவற்றின் போதாமையை பல்கலைக்கழக கல்வி தொடர்பான இராஜாங்க அமைச்சர் மொஹான்லால் கிரேரு சுட்டிக்காட்டியிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இவ்வாண்டு வரவுசெலவுத்திட்டத்தில் உயர்கல்விக்கென 65,000 பில்லியன் ரூபாய்களை ஒதுக்க திட்டமிட்டுள்ள அரசு இனிவரும் ஆண்டுகளில் பல்கலைக்கழக உள்வாங்கலை ஆண்டுதோறும் 2500 மாணவர்கள் வீதம் அதிகரித்து 2020 ஆம் ஆண்டில் பல்கலைக்கழகம் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கையை 35,000 மாக உயர்த்த தீர்மானித்துள்ளது.

இத்தகைய செயல் வரவேற்கக்கூடியதாக இருந்தாலும் இலவசக் கல்வியை ஒரு நாட்டிலுள்ள எல்லோரும், எல்லாக் காலத்திலும் சமமாக பெறுகிறார்கள் எனும் கூற்று பிழையாகிவிடுகிறது. 2015 ஆம் ஆண்டில் மறுக்கப்பட்ட பத்தாயிரம் மாணவர்களுக்கான கல்வி 2020 அதிகப்படியாக வழங்கப்படும் போது அரச பல்கலைக்கழக நுழைவிற்கான தரம் கேள்விக்குறியாகிவிடவில்லையா? அதாவது நிர்வாக மாவட்டங்களுக்கு வழங்கப்படும் குறைந்த வெட்டுப்புள்ளிகளை இன்னும் குறைத்து மாணவர்களை உள்ளீர்க்கும் போது 2015 மற்றும் 2020 ஆம் ஆண்டிற்கு இடையேயான கல்வித் தரம், மாணவர்களின் திறமை மாறுபடாதா? ஆகவே அரச பல்கலைக்கழகங்களில் கல்வி கற்பதற்கும், திறமைக்கும் ஒரு தொடர்புமில்லை.

இன்று இலவச பல்கலைக்கழக கல்வி என்பது இலங்கையில் சமூக அந்தஸ்தாகவும், அரச வேலைவாய்ப்பை பெற்றுக்கொள்ளும் ஒரு எளிதான வழியாகவும் பார்க்கப்படுகிறது. மேலும் பட்டம் பெற்றவர்கள் சிறுகைத்தொழில்களில், சுயதொழில் முயற்சிகளில் ஈடுபடவும் பெருமளவில் விரும்புவதில்லை. இலவச பட்டப்படிப்புகளை முடித்த ஆற்றலுள்ள பலர் வெளிநாடுகளில் குடியேறிவிடுகின்றனர். கல்வி இலவசமாகி விடுவதால் அதைக் குறித்தகாலத்தில் நிறைவு செய்வதிலும் அக்கறை காட்டுவதில்லை.

ஒரு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெறுபவர் சுயமாக ஒரு தொழிலைத் தொடங்கக்கூடியவராகவோ / தன்னம்பிக்கையுடையவராகவோ பலருக்கும் தொழில் வாய்ப்பை வழங்கக்கூடியவராகவோ இருந்தால் மட்டுமே பல்கலைக்கழக கல்வியானது வாழ்க்கையைச் செழுமைப்படுத்தும் கல்வியாக அமையும்.

அத்தகையை கல்வியை கற்றல், கற்பித்தல் வசதியின்மையின் காரணமாக ஒரு பகுதியினருக்கு மட்டுமே அரசு வழங்குவதும், அந்த சலுகையை அனுபவிப்பதற்கென்றே தாம் பிறந்து வந்ததைப் போல் கற்பித்தல் செயற்பாடுகளிற்கு மாணவர்கள் இடையூறு விழைவிற்பதும் நாள்தோறும் வளர்ந்துகொண்டே போகிறது.

இன்று வெளிநாட்டு பல்கலைக்கழங்கங்களிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பலர் பட்டப்பின் படிப்பையோ, ஆய்வுக் கற்கையையோ தொடர்வதற்கு வெளிநாட்டு புலமைப்பரிசிலை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருப்பவர்கள் தான்.

பெரும்பாலான விரிவுரையாளர்களும், பேராசிரியர்களும், மருத்துவர்களும், பிற தொழிற்துறை சார்ந்தவர்களும் தமது இலவசக் கற்கைக்கு பின்னதான பட்டங்களை மக்களின் வரிப்பணத்தில் வெளிநாடுகளில் கற்றவர்கள். அவர்களில் பலர் அரச செலவில் வெளிநாடுகளிற்கு கற்கச் சென்று நாட்டிற்கு திரும்பி வராமல் விட்டவர்கள். புலமையாளர்களை உருவாக்கி ஐரோப்பிய நாடுகளுக்கு தாரை வார்த்ததே இலவசக் கல்வி மூலம் நாடடைந்த உச்ச பயனாக (!)இருக்கும்.

மலையக மக்கள் பல்கலைக்கழக கல்வியை காலம் தாழ்த்தியே ஆரம்பித்தார்கள். பல்கலைக்கழகத்துக்கான திறமை அடிப்படை தரப்படுத்தல் போன்ற அனுமதி முறைகள் மற்றும் தற்போதைய மாவட்ட அடிப்படையிலான பங்கீடுகள் காரணமாகவும் மலையக மக்கள் நியாயமான வீதத்தில் அதாவது 7 வீதம் என்று உரித்துடைய தமது இன வீதாசாரத்திற்கு அமைய பல்கலைக்கழகத்துக்கு அனுமதியை பெற முடியாதுள்ளனர்.

1978இன் 16ஆம் இலக்க பல்கலைக்கழக சட்டத்தினால் வழங்கப்பட்டுள்ள கட்டமைப்புக்குள் ஸ்ரீலங்காவின் பல்கலைக்கழக முறைமை செயற்படுகிறது. அரசு இந்திய தமிழர்களை ஒரு தனி இனமாக வகைப்படுத்தியுள்ள போதும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் புள்ளிவிபர புத்தகத்தில் மலையக தமிழர்கள் தனியாக அங்கீகரிக்கப்படாத அதேவேளை அவர்களை வட கிழக்கு தமிழர்களுடன் சேர்த்து புள்ளி விபரங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

மலையகத்திற்கான குறைந்த வெட்டுப்புள்ளியில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகும் 120-150 மாணவர்களில் பெரும்பாலானவர்கள் கலை மற்றும் வர்த்தக பிரிவை சார்ந்தவர்கள். இவர்களில் 25-30 வரையானவர்களே விஞ்ஞான கற்கைகள் சார் பீடங்களுக்கு தெரிவாகின்றனர். அத்தோடு மலையகத்தில் இருந்து தெரிவாகும் மாணவர்களில் 65 வீதமானோர் மட்டுமே பெருந்தோட்டத் தொழிலாளர் சமூகத்தில் இருந்து பல்கலைக்கழகம் செல்கின்றனர். மிகுதி உள்ள 35 வீதமானவர்கள் வடக்கை சேர்ந்த மாணவர்களே. மலையக மாணவர்களுக்காக வழங்கப்படும் குறைந்தபுள்ளிகளை பயன்படுத்தி வடக்கு கிழக்கு மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகின்றனர். இலவச பல்கலைக்கழக கல்வியைப் பெறுவதற்காக, எமது சமூகத்தால் தெளிவாக திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்படும் கல்விச்சுரண்டல் இதுவென்பது கசப்பான விடயமாகும்.

இதே நேரத்தில் மன்னார் போன்ற மாவட்டங்களில் பல்கலைக்கழக வளாகம் அமைக்கபடுவதற்கான தேவை குறித்தும் கல்வியியலாளர்கள் சிந்திக்க வேண்டும். எமக்கான வளாகங்களே எமது மாவட்ட வளார்ச்சிக்கும், மக்களின் வளர்ச்சிக்கும் துணைபுரியும்.

கல்வி என்பது எல்லோருக்கும் பொது. தனியார் பல்கலைக்கழகங்கள் (or private affiliated colleges) மூலமே இவை சாத்தியமாகும். ஒருவரின் தகுதியை அரசசொத்தில் பட்டப் படிப்பு படிப்பதற்கான வாய்ப்பு கிடைத்ததை வைத்துக்கொண்டு மட்டும் கணிப்பிட முடியாது.

காசு கொடுத்து பட்டம் பெறும் முறை என தனியார் கல்லூரிகளை விமர்சிப்பதும் தவறானது. இலவசக் கல்வியைப் பெறுபவர்கள் மக்களுடைய வரிப் பணத்தில் படிக்கிறார்கள். தனியார் மூலம் கல்வியைப் பெறுபவர் தன்னுடைய பணத்தில் படிக்கிறார்.

தனியார் கல்வியை பெற்றுக்கொள்வதை ஊக்குவிப்பதன் மூலம் அதிக அளவிலான மாணவர்கள் பல்கலைக்கழக கல்வியைப் பெற்றுக்கொள்ள முடியும். எண்ணிக்கை கூடும் போது தரம் குறைந்துவிடும் எனும் வாதமும் முன்வைக்கப்படுகிறது. கல்வியினூடாக அறிவைப் பெருக்க முடியும். அறிவைப் பெருக்கும் மனிதன் தான் சிந்திக்கத் தொடங்குகிறான். சிந்தனை ஒரு சமூகத்தை நெறிப்படுத்துகிறது. இதன் அடிப்படை தான் கல்வி. ஆனால் நாம் கல்வி எனும் அடிப்படை அளவுகோலைக் கொண்டு மட்டுமே மனிதர்களை அளவிட ஆரம்பிப்பதால் தான் எல்லோருக்கும் ஒரு பொருள் சமமாக கிடைத்துவிடக் கூடாது என்பதில் குறியாக இருக்கிறோம்.

நாம் பெற்றுக்கொள்ளும் கல்வி எம்மை, எமது சமூகத்தை தொலைநோக்குடைய ஒரு அறிவார்ந்த இனக்குமுமமாக மாற்றவேண்டுமே தவிர போட்டியும், பொறாமையும் கொண்ட சிந்தனையும், உணர்வுமற்ற நடைபிணங்களாக மாற்றக் கூடாது.

தனியார் கல்வியில் மூன்றுமாதத்திற்கு ஒருமுறை பல்கலைக்கழகத்தை இழுத்துமூடும் விளையாட்டுகள் விடமுடியாது. காலத்திற்கே கரை சேர்ந்துவிட முடியும். இருபத்தியிரண்டு வயதிற்குள் பட்டம், வேலை. இருபத்தாறு வயதிற்குள் திருமணம். முப்பத்தைந்து வயதிற்குள் பிள்ளைகள் என வாழ முடியும். இவ்வாறு இக்கல்வி மூலம் காலங்காலமாக இருந்துவரும் எமது வாழ்க்கைமுறையே சிறிதுசிறிதாக மாறிவிடும்.

முப்பத்தைந்து, நாற்பது வயதில் திருமணம் முடித்துவிட்டு சிட்டுக்குருவி லேகியம் தேடி அலைய வேண்டியதில்லை. பிள்ளைபெற்றுக்கொள்ள இந்திய மருத்துவமனைகளை நாடி ஓடவேண்டியதில்லை.

 தனியார் கல்விக்கொள்கை மூலம் போலி மருத்துவர், போலி பொறியியலாளர் என போலிகள் அதிகரித்து விடுவார்கள் என கூச்சலிடதேவையில்லை. ஏனென்றால் கடந்த ஆண்டின் (2014) தகவல்படி இலங்கையில் 10,400 போலி மருத்துவர்கள் ஏலவே இருக்கிறார்கள். போலிகள் எப்போதும் இருப்பார்கள். இதனை கண்காணிக்க உரியபொறிமுறைகளை உருவாக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும்.

கற்பதற்கான இலகுபடுத்தல் உத்திகளே இன்றைய காலத்தின் தேவையாகும். அதனை தனியார் கல்விக் கொள்கையை உள்வாங்கி பூரணப்படுத்த அனைவரும் முன்வரவேண்டும்.

  • மன்னார் அமுதன்