#‎இதயத்தின்_மொழிகள்‬ ‪#‎ப்ரேமம்‬

‪#‎இதயத்தின்_மொழிகள்‬ ‪#‎ப்ரேமம்‬
மொழிகளைக் கற்றுக் கொள்வதில் எனக்கு எப்போதும் நிறைய ஆர்வம் இருந்தது. இலங்கை வந்து மூன்று மாதத்திற்குள் சிங்களம் வாசிக்க பழகியிருந்தேன். 8வருட கொழும்பு வாழ்க்கை கதைக்கவும் பழக்கியிருக்கிறது.

தென்னிந்தியாவில் நான் வசித்த ஊருக்கு அருகில் இருக்கும் இராஜபாளையத்தைச் சுற்றிலும் தெலுங்கு கதைப்பவர்கள் தான். ஆரம்ப பாடசாலை சத்துணவு பொறுப்பாளார் கூட தெலுங்கர். எங்களோடு தெலுங்கில் தான் உரையாடுவார்.

எனது தகப்பனார் கோழிப்பண்ணைகளில் முதலீடு செய்த காலத்தில் அருகருகே உள்ள பண்ணைகளில் வேலை செய்தவர்கள் மலையாளிகள். நானும் விடுமுறை நாட்களில் சென்று வேலை செய்வேன். ஏதாவது வம்பு செய்துவிட்டு “ஷமிக்கனும் சேச்சி” எனும் போது “சாரமில்லா” என்றவாறே போய்விடும் அவள் இன்று பிரேமம் பார்க்கும் போது நினைவில் வருகிறாள்.

தெலுங்கு, மலையாளம் நன்றாகக் கதைக்கக் கூடிய தமிழ் தோழிகளும் இருந்தனர்… நாங்கள் நீண்ட தூர பயணங்களின் (திருநெல்வேலி, ஈரோடு, திருச்சி,மதுரை) போது பேருந்துகளில் தெலுங்கும், மலையாளமும் தான் கதைப்போம்… வதிவிட பயிற்சிகளின் போதும் அப்படித்தான்… அதில் அப்படி ஓர் ஈர்ப்பு…

கல்லூரியில் முதலாமாண்டு சேர்ந்த (2001) போது மேலதிகமாக ஹிந்தி, பிரெஞ்சு என இரு மொழிகளில் ஒன்றை கற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு இருந்தது.

இந்தியாவில் எங்காவது தான் தொழில் செய்ய வேண்டியிருக்கும் என நினைத்த நாட்கள் அவை… ஹிந்தி எங்களுக்கு தேவைப்படும் என்பதால் நானும் எனது நண்பன் மணிகண்டனும் அந்த வகுப்பில் போய் அமர்ந்தோம்.

தீவிர தமிழ் ஆர்வம் கொண்ட நட்புகளும், ஹிந்தி எதிர்ப்பு கோசமும், என்னுடைய ஆர்வமின்மையும் சேர்ந்து ஹிந்தி வகுப்பிற்கு ஒரு மாதத்திலேயே முற்றுப்புள்ளி வைத்துவிட்டது.

நானறிந்த மொழிகள் எனக்கு இலங்கையிலும், இந்தியாவிலும் சொல்லிலடங்கா முறைகள் உதவியுள்ளன….

“இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில் மனிதர்க்கு மொழியே தேவையில்லை” எனும் பாடல்வரிகளுக்கான காலம் வரும் வரை நாம் மொழிகளைக் கற்றுக்கொண்டே தானிருக்கவேண்டும்.