இம்முறை இலக்கிய தீபாவளி..

முதலில் எனது சகல நண்பர்களுக்கும், உறவுகளுக்கும் எனது இனிய தீபாவளி வாழ்த்துக்கள். இம்முறை தீபாவளி நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாய் அமைந்திருக்கும் என நம்புகிறேன். அதிலும் ஒவ்வொரு பட்டாசு வெடியிலும் எங்கள் பிள்ளைகளின் முகத்தில் தவழ்ந்த புன்னகையை ரசித்ததோடு, பட்டினியால் வாடும் சிறு பிள்ளைகளின் கண்ணீரையும் ஒருமுறை சிந்தித்திருந்தால் இதை விட சிறப்பான தீபாவளி நமக்கு என்றும் இல்லை என உணர்ந்திருக்க முடியும். சரி, விடயத்திற்கு வருகிறேன். இம்முறை தீபாவளி எனக்கு ரசிக்கக்கூடியதாய் இருந்தது எதோ உண்மைதான்.. காரணம்??

26-10-2011 அன்று முதலாவது கருத்தாடலுடன் ஆரம்பிக்கப்பட்ட தழல்

26-10-2011 அன்று முதலாவது கருத்தாடலுடன் ஆரம்பிக்கப்பட்ட தழல் இலக்கிய வட்டம்

தழல் இலக்கிய வட்டமும் மன்னார் எழுத்தாளர் பேரவையும் இணைந்து நடத்திய “போருக்கு பின்னதான ஆக்க இலக்கிய போக்கு” என்னும் தலைப்பில் அமைந்த இலக்கிய கருத்தாடலில் பங்கேற்று வந்ததில் பெரும் மகிழ்ச்சி. மன்னாரின் சகல இலக்கிய படைப்பாளிகளின் நீண்ட நாள் கனவுகள் இன்று காலை பத்து மணிக்கு பெருமூச்சு விட்டுக்கொண்டன. இதற்கு முதலில் இதை முன்னின்று ஒழுங்கமைத்த நண்பர் மன்னார் அமுதனிற்கு பெரும் நன்றிகள். அத்தோடு தலைமை தாங்கியது தொடக்கம் எமக்கு தேவையான சகல வசதிகளையும் செய்துதந்த அருட்பணி.தமிழ் நேசன் அடிகளாரையும் மறந்து விட முடியாது..

மேற்படி தலைப்பில் அருமையான சொற்பொழிவை நிகழ்த்திய தோழர் தேவா அவர்கள் இன்னும் எனது கண்களை விட்டு அகலவில்லை. அவரது புலம் பெயர் இலக்கிய அனுபவங்கள் அவரது சொற்பொழிவிற்கும் தலைப்பிற்கும் பெரும் பங்களித்தன எனலாம். அத்தோடு, பங்கெடுத்த சகல படைப்பாளிகளின் கருத்துக்களும், விவாதங்களும் ஒரு சிறந்த, ஆக்க பூர்வமான இலக்கிய கருத்தாடலை நகர்த்திச் செல்ல பெரிதும் உதவின. அத்தோடு மன்னாரின் இறந்தகால, நிகழ்கால, எதிர்கால தனித்துவ படைப்பிலக்கிய வரலாறு பற்றிய பலரின் மன ஆதங்கங்கள் கருத்துக்களாய் வெளிப்பட்டன.

இதிலே என்னை அதிகம் கவர்ந்த பகுதி என நான் எடுத்தவுடன் சொல்லக்கூடிய பகுதி, கவிஞர் நிஷாந்தனுடைய கேள்வியும் அதற்கு வழங்கப்பட்ட பதில்களும். ‘நேரடி வெளிப்பாட்டு இலக்கியம்’ அல்லது போரியல் ‘உண்மை இலக்கியம்’ படைக்கும் இன்றைய இலக்கியவாதிகளின் பாதுகாப்பு பற்றிய கேள்வி அது. நமது ஈழத்திலே ஒரு மறைமுக, முடக்கப்பட்ட எழுத்து வாழ்க்கை போரிற்கு பிற்பட்ட படைப்பிலக்கியவாதிகளிடம் திணிக்கப்பட்ட ஒரு விடயம். பல விடயங்களை வெளிப்படையாக எழுத முடியாமல் தவிப்பது போரிற்கு பிந்திய கால இலக்கிய போக்கின் ஒரு குறைபாடு என்று கூறலாம். ஆனாலும் இது இளைக்கியம் தொடர்பான வரைமுறை அல்ல என்பதால் அது எங்கள் சக்தியைத்தாண்டி அப்பாற்பட்டது என்று நான் ஒருவாறு தப்பித்துக்கொள்ள முடியும். ஆக, போரின் நேரடி ரணங்களை பிரதிபலிக்கின்ற சில எழுத்துக்கள் அல்லது படைப்புக்கள் பல மட்டறுக்கப்பட்ட அல்லது நாசூக்கான வெளிப்பாட்டு மரபை கொண்டு உருவாக்கப் படுகின்றனவாகவே அமைகின்றன. இந்த நேரடி வெளிப்பாட்டு இலக்கியத்தினால் தங்கள் உயிர்களை தியாகம் செய்ய நேர்ந்த சில காத்திரமான இலக்கிய படைப்பாளிகளையும் இந்த கருத்தாடல் நினைவு கூர்ந்தது.

அத்தோடு, நான் அதிகம் எனது காதுகளை கூர்மையாக்கிக்கொண்டு அவதானித்த விடயம், எமது ஈழ போராட்டம் பற்றி அதிகமான புலம் பெயர் படைப்புக்கள், இலக்கியங்கள் என்ன பேசுகின்றன என்பதாகும். இதை மிகவும் அழகாக விபரித்த தோழர் தேவா அவர்களுக்கு மீண்டும் நன்றி சொல்வது சாலப் பொருந்தும் என நினைக்கிறேன். சாராம்சமாக, ஈழத்து அடக்குமுறை சார் வலிகளும், சிந்தப்பட்ட குருதியும் புலம் பெயர் நாடுகளிலே ‘யதார்த்த இலக்கியம்’ என்பதையும் தாண்டி தங்கள் நிலைப்பிற்கு இந்த விடயங்களை கட்டாயமாக எழுதியே தீரவேண்டும் என ‘சுயநல இலக்கியங்களை’ படைக்க வழிகோலியதையும் கவலையோடு நினைவுகூர்ந்தது இந்த கருத்தாடல் களம்.

.
பல வகையான விடயங்கள் விவாதிக்கப்பட்டன. அதிலும் போரிற்கு பின்னதான புலத்தில் படைக்கப்படும் படைப்புக்கள் புலம் பெயர் நாடுகளில் படைக்கப்படும் இலக்கியங்கள் என ஒரு நீண்ட கருத்தாடல் பல மன ஆதங்கங்களுக்கு நின்மதி சேர்த்தது. அதிலும் போரிற்கு பிற்பட்ட காலங்களில் படைக்கப்படும் இலக்கியங்களில் கருச்செர்க்கப்படும் விடயங்களான பெண்ணியம், சாதியம், பிரதேசத்துவம் போன்ற கருத்துக்களும் ஓரளவு சிலாகிக்கப்பட்டன. இதற்கு பெரிதும் வழிகோலியது தோழர் தேவா அவர்களின் சொற்பொழிவு எனலாம்.

எனக்கு, தனிப்பட்ட முறையில் இது மன்னாரில் முதலாவது இலக்கிய கருத்தாடல் என்பதால் என்னை அதிகம் கவர்ந்தது என்பதற்கு ஒரு காரணம் எனலாம். இது தொடரும் என்பதற்கான சாத்தியக்கூறுகளே அதிகம் தென்பட்டாலும் அதை முன்னெடுக்க வேண்டிய பொறுப்பும் எமக்கு இருக்கிறது..

ஆக, இம்முறை தீபாவளி ஒரு ஆக்கபூர்வமான ‘இலக்கிய தீபாவளி’யாய் முற்றுப்பெற்றது.

குறிப்பு:

இப்பதிவு கவிஞர் பிரான்சிஸ் அமல்ராஜ் அவர்களால், அவரது புலம்பல் வலைப்பக்கத்தில் எழுதப்பட்டது. பதிவின் தேவை கருதி இங்கு மீளபிரசுரிக்கப்படுகிறது…  நன்றி: கவிஞர் பி.அமல்ராஜ்