நெடுங்கணக்கு

நெடுங்கணக்கு
============= மன்னார் அமுதன்

அவ்வளவு தானா….
வற்றிவிட்டதா….
என எவனாவது கேட்கும் முன்
பருவக்காற்றின் முதல் ஸ்பரிசத்தோடு
தழுவிச் செல்வாய்…

உன் பார்வையின் ரகசியமும்
உதடுகளின் சிரிப்பும்
உள்ளத்தின் அனுங்கலும் கூட
என் காதுகள் அறியும்

என்ன செய்வது …
காலம் நமக்கிடையில்
தன் நெடுங்கணக்கை
நீட்டிப் படுத்துக் கிடக்கிறதே

உனக்கென எழுதும் கவிதைகளில்
எங்காவது ஓரெழுத்து பிழைத்துவிடுகிறது
அப்போதெல்லாம்
அழித்து எழுதுவதற்கு பதில்
கிழித்து எறிந்துவிடுகிறேன்

வழுக்கையில் விழலாம்…
வாழ்க்கையில் விழக்கூடாதென
நீதானே சொல்லித் தந்தாய்…
அந்தப் பயம் தான்…
அழித்து எழுதாமல்
கிழித்து எறியச் செய்கிறது…
#மன்னார் அமுதன்