இன்னும் உன் குரல் கேட்கிறது

தியதலாவை ரிஸ்னாவின் ‘இன்னும் உன் குரல் கேட்கிறது’ கவிதை நூலுக்கான எனது பார்வை  –பஸ்லி ஹமீட்

பஸ்லி ஹமீட்

கவிதை என்ற சொல்லை உச்சரிக்கும்போது மனதில் ஒரு வித இனிமை படர்வதை உணரலாம். எழுத்துக்களின் மிக மென்மையான பகுதியாக கவிதை இருப்பதே அதற்கான காரணமாக இருக்கலாம். எந்தவொரு கடினமான அல்லது சிக்கலான விடயத்தையும் கவிதையினூடாக மென்மையான முறையில் சொல்ல முடியும் அல்லது உணாத்த முடியும். மனதில் பொங்கியெழும் கோபத்தையும் கவிதையினூடாக சாந்தமாக வெளிப்படுத்தலாம். இத்தகைய தன்மை கவிதையில் இருப்பதனாலேயே அது வாசகர்களின் உணர்வுகளுடன் எளிதில் கலந்து விடுகின்றது.

கவிதைக்குப் பொதுவான ஒரு வரைவிலக்கணம் சொல்லப்படாத போதிலும், சாதாரணரமாக சொல்ல வரும் ஒரு விடயத்தை சற்று அழகுபடுத்திச் சொல்லும்போது அது கவிதை என்ற எல்லைக்குள் வந்துவிடுகின்றது. கவிதை பல்வேறுபட்ட வடிவங்களில் எழுதப்படுகின்ற போதிலும் அவற்றில் உள்ள கவித்துவத் தன்மையே வாசகரைக் கவர்ந்திழுக்கும் முக்கிய காரணியாகும். கவித்துவத் தன்மை என்பது வெறும் சந்தங்களில் மட்டுமல்லாது கவிதையில் சொற்களைக் கோர்க்கும் விதத்திலேயே அதிகம் தங்கியுள்ளது எனலாம். கவிதையில் பயன்படுத்தப்படும் சொற்கள் சாதாரணமானவைகளாயினும், குறைந்த சொற்களையே பயன்படுத்தியிருப்பினும் அவை கோர்க்கப்படும் விதத்திலேயே கவிதை அழகு பெறுகிறது. எனவே ஒரு கவிஞனின் திறமையை வெளிக்காட்டும் முக்கிய அம்சம் அக் கவிஞன் கவிதையில் சொற்களைக் கையாளும் விதமே என்று சொல்லலாம்.

இன்று பரவலாகப் பல கவிதைகள் எழுதப்படுகின்றன. அவற்றுள் மிகச் சொற்பமானவையே கவித்துவத்தில் மேலோங்கி நிற்கின்றன. பெரும்பாலானவை வெறும் சொற்கோர்வைகளாகவே அமைந்து காணப்படுகின்றன. சமகாலத்தில் இளம் கவிஞர்கள் மிகச் சிறப்பான முறையில் கவிதகளை எழுதிக் கொண்டிருப்பதைக் காணக்கூடியதாய் உள்ளது. இளையவர்களில் பலர் தமது கவிதைகளின்பால் வாசகர்களின் எதிர்பார்ப்பினை தூண்டும்படியாக எழுதும் ஆற்றல் கொண்டவர்கள். இவர்களுள் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க ஒருவர்தான் தியதலாவை பாத்திமா ரிஸ்னா. இவர் தனது கன்னி முயற்ச்சியாக ‘இன்னும் உன் குரல் கேட்கிறது’ என்ற தலைப்பில் ஒரு கவிதைத் தொகுப்பினை இலக்கிய உலகுக்கு அண்மையில் வழங்கியிருந்தார்.

‘மெல்லக் கதவினுள் மிடுக்காய் ஒளிந்தாள்’ என்ற தலைப்பிலான கவிதையே ரிஸ்னாவினது நான் படித்த முதலாவது கவிதை. பெரும்பாலான கவிதைகள் அவற்றை வாசிக்கும்போது கண்களோடு நின்றுவிடுகின்றன. ஆனால் சில கவிதைகள் மனதுக்குள் இறங்கி அதன் ஆழம்வரை விரிந்து விடுகின்றது. மேற்குறிப்பிட்ட கவிதையும் இது போன்ற ஒரு கவிதையே ரிஸ்னாவைப் பற்றிய எந்தவித அறிமுகமும் இல்லாத நிலையில் அக் கவிதையை வாசித்தபோது அது அவரின் கவிதைகளின்பால் ஒரு எதிர்பார்ப்பினை என்னுள் ஏற்படுத்தியது.

‘இன்னும் உன் குரல் கேட்கிறது’ ‘புரவலர் புத்தகப் பூங்கா’வின் 30வது வெளியீடாக 72 பக்கங்களில் 56 கவிதைகளுடன் வெளிவந்துள்ளது. நூலின் தலைப்பே இவை காதல்க் கவிதைகளாகத்தான் இருக்க வேண்டும் என்ற தீர்மானத்தை வாசகர் மனதில் ஏற்படுத்திவிடுகின்றது. இதனை உண்மைப்படுத்துவதாய் கூடதலான கவிதைகள் காதல் உணர்வினை வெளிப்படுத்தும் கவிதைகளாகவே உள்ளன. ஓரு கவிஞனின் கற்பனை விண்ணையும் தாண்டலாம், மண்ணையும் தோண்டலாம். காற்று மட்டுமே சென்றுவரக்கூடிய மனித இதயத்தினுள் கவிஞன் தனது கற்பனை எத்தனை அழகாக செலுத்திப் பார்க்கிறான் என்பதற்கு ரிஸ்னாவின் கவிதைகள் எடுத்துக் காட்டாய் அமைகின்றன. காதலினை உணர்வதற்கு காதலிக்கத்தான் வேண்டும் என்பதில்லை. பொதுவாக இளையவர்களிடத்திலேயே காதல் உணர்வுகள் அதிகம் புடையோடி இருக்கின்றது என்பார்.கள் இந்த உணர்வினை இளம் கவிஞர் ரிஸ்னாவின் கவிதைகள் வாசகர் மனங்களில் ஏற்படுத்த முனைவதே இவற்றின் சிறப்பு எனலாம். ஒருதலைக் காதலின் வலி, சுகம், காத்திருப்பு, ஏமாற்றம், தியாகம் போன்ற எல்லாப் படிமுறைகளையும் இக் கவிதைகளில் காணலாம்.

‘பூச்சி நான்
உன் வலையில்
வேண்டும் என்றே
சிக்கிக்கொண்டேன்!
அப்படியே இரையாக்கி
அன்பால் என்னைத்
தின்றுத் தீர்த்துவிடு!’

தன்னிலையிலிருந்து கவி சொல்லும் ரிஸ்னா ஒன்றிலிருந்து ஒன்றைச் சொல்ல பயன்படுத்தியிருக்கும் எளிமையான சொற்கள் அவற்றை கோர்த்திருக்கும் விதத்திலிருந்து வெளிப்படுத்தும் அழகினை மேலே உள்ள வரிகளில் சிறப்பாய் அவதானிக்கலாம். இப்படியான ஒன்றுக்கொன்று வித்தியாசமான புதிய, புதிய ஒப்பீட்டு அழகினைக் கொண்டு தொகுப்பு முழுவதையும் அழங்கரித்துள்ளார் கவிஞர்.

‘மறவாதே…
கயிறு கட்டி
நீ ஆடிய இடமோ
என் இதயமென்ற
ஊஞ்சல்!

சதி செய்து நீ
எனை மறந்தாலும்
போதி சுமப்பேன்
உன் நினைவுகளை
என் நெஞ்சில்!!!’

இது போன்ற வாசகரைக் கவர்ந்திழுக்கும் புத்தம் புதிய ஒப்பீட்டு வர்ணனைகள் கவிஞரின் கற்பனையின் விஷாலமான தன்மையை வெளிப்படுத்துகிறது. பொதுவாகத் தற்காலக் காதல்க் கவிதைகளில் கையாளப்படும் கருவும் அவை வெளிப்படுத்தும் உணர்வுகளும் ஒரேவிதமாக இருப்பதனையே காணலாம். உதாரணத்திற்கு நான் அவளைக் காதலிக்கிறேன், பூபோன்ற அவளை நான் காதலிக்கிறேன், என் இதயத்தைக் கலவாடிய அவளை நான் உயிரினும் மேலாய்க் காதலிக்கிறேன் இப்படி எத்தனை வரிகளை வித்தியாசமாக வரைந்தாலும் அவை வெளிப்படுத்தும் அர்த்தம் ஒன்றாகவே இருக்கிறது. இது போன்றுதான் தற்காலத்தில் வெளிவரும் அனேகமான காதல்க் கவிதைகள் சொற்கள் வித்தியாசப்படுகிறதே தவிர சொல்பவை ஒன்றாகவே அல்லது முன்ப சொன்னவையாகவே இருக்கின்றன. ஆனால் கவிஞர் ரிஸ்னாவின் கவிதைகள் இப்படிப்பட்ட தன்மையிலிருந்து வேறுபட்டிருப்பதை கட்டாயமாகவே சுட்டிக் காட்டப்பட வேண்டியுள்ளது. இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள கவிதைகள் நீண்ட அல்லது குறுகிய கால இடைவெளிகளில் எழுதப்பட்டிருக்கலாம். ஆனால் ஒரு கவிதையில் பயன்படுத்திய சொற்கள் அல்லது வரிகள் திரும்பவும் வேறு எந்தக் கவிதையிலும் இரண்டாவது முறையாக பயன்படுத்தப்பட வில்லை என்பது ரிஸ்னாவின் கற்பனை ஆற்றலை வியக்க வைக்கும் விடயம்.

மேலும் ரிஸ்னாவின் கவிதைகளின் பந்திகளை தனியாக எடுத்து நோக்கும்போது அவை ஒவ்வொன்றும் தனித்தனி அர்த்தங்களுடனான சிறு கவிதைகளாகவும் மிளிர்வதை குறிப்பிடலாம்.

‘கனன்றெரியும் செந்தீயில்
குளித்தெழுந்தாலும்
துங்கத்துக்கு மட்டும் ஏனோ
தீக்காயங்கள்
ஆறவேயில்லை!’

இது ‘கறையான் பக்கங்கள்’ என்ற கவிதையின் ஒரு பந்தி மட்டுமே. ஆனால் இது ஒரு குறுங்கவிதைபோல் தனித்து அர்த்தப்படுவதையும் அவதானிக்கலாம். அது போன்றே இக் கவிதையின் ஏனை பந்திகளும் ஏனைய பெரும்பாலான கவிதைகளின் பந்திகளும் தனித்தும் கவித்துவத்துடன் பொருள்படுவது மற்றுமொரு சிறப்பம்சமாய்ச் சொல்லலாம்.

‘காந்தள் மலரின் வாசம் எண்ணி உன்
கூந்தலை அளைந்து
விளையாடிய போதெல்லாம்
பின்நாட்களில் – அது
தேளாய்க் கொட்டும் என்று
நினைக்கவில்லை!’

‘உன்
அன்பெனும் ஆலையிலே
நித்தமும்
சாறு பிழியப்படும்
கரும்பல்லவா நான்!
அப்படியே காதலுடன்
என்னை ருசி பார்த்து மகிழும்
எறும்பல்லவா நீ!’

ரிஸ்னாவின் கவிதைகள் வாசகரின் மனதில் எதையும் திணிக்க முற்படுவதில்லை. அழகான அனுபவங்களின் உணர்வுகளையே சொல்லி நிற்கின்றன. பெரும்பாலன இடங்களில் சந்தங்களும் இவற்றுக்கு துணைநின்றுள்ளன. காதல் உணர்வகளைப் போன்றே ஆன்மீகம், சமூக அவலம் போன்ற விடயங்களையும் கவிஞர் தனது எழுத்துக்களுக்குள் கொண்டுவந்து இத்தொகுதியில் பேசியிருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. ஓவ்வொரு கவிதையும் ஒவ்வொரு பக்கத்தில் மட்டும் அமைந்திருப்பதுவும் அளவான தெளிவான எழுத்துக்களில் அச்சிடப்பட்டிருப்பதும் தொகுப்பினை வாசிப்பதற்கு இலகுவாய் உள்ளது.

இத்தொகுப்பிள் உள்ள கவிதைகளில் கூடுதலானவை தன்னிலையிலிருந்து சொல்லப்பட்டுள்ளமையினால் அவற்றை வாசிக்கும்போது பெரும்பாலும் ஆண்பால், பெண்பால் தடுமாற்றம் ஏற்படுகின்றது. அதாவது குறித்த ஒரு கவிதையை வாசிக்கும்போது அக் கவிதை ஒரு ஆணின் நிலையிலிருந்து எழுதப்பட்தா? ஆல்லது ஒரு பெண்ணின் நிலையிலிருந்து எழுதப்பட்டதா என்ற மயக்கத் தன்மை கவிதையை பாதிதூரம் வாசிக்கும்வரை தொடர்கிறது. இது வாசகரின் இரசனையை நிலைகுலையச் செய்யக்கூடும் என்பதனாலும்; கவிஞர் ஒரு பெண்ணாக இருப்பதனாலும் எல்லாக் கவிதைகளையும் பெண்ணின் நிலையிலிருந்தே எழுதியிருக்கலாம் என்பது எனது கருத்து.

அடுத்து உள்ளடக்கத்தில் குரல்கள் என்ற தலைப்பின் கீழ் 68 கவிதைகளுக்கான தலைப்புகள் வழங்கப்பட்டுள்ள போதிலும் நூலில் பிரசுரமாகியிருப்பதோ அவற்றுள் 56 கவிதைகள் மாத்திரமே. மீதிப் 12 கவிதைகளுக்கு என்ன நடந்தது? புத்தகக் கட்டமைப்பின்போது விடுபட்டுப்போனதா? என்ற தேவையற்ற கேள்விகளை வாசகர்களிடத்தில் எழுப்பவிடாமல் ஒன்றில் அத் தலைப்புகளை நீக்கியிருக்கலாம் அல்லது நூலின் பக்கங்களை அதிகரித்திருக்கலாம். அதுமட்டுமன்றி இது ‘புரவலர் புத்தகப் பூங்கா’வின் வெளியீடாக இருப்பதனால் அதனுடன் ‘ஹாசிம் உமர்’ என்ற பெரும்புள்ளி இருப்பதனால் பணக் கஷ்டம் ஏற்படுவதற்கான வாய்ப்பில்லை. எனவே புத்தகக் கட்டமைப்பில் இன்னும் கூடிய கவனம் செலுத்தப்பட்டிருக்க வேண்டும் என்பது இங்கே அவதானிக்கப்பட வேண்டிய விடயம். அதே போன்றே ‘புரவலர் புத்தகப் பூங்கா’ ஆளுகைக் குழுவில் பெரும்பெரும் ஜாம்பவான்கள் எல்லோருமிருந்தும் நூலில் ஆங்காங்கே எழுத்துப் பிழைகள் காணப்படுவதும் ஆச்சரியப்பட வேண்டிய விடயமே. எனவே இதுவரை 30 திறமையான எழுத்தாளர்களின் நூல்களை வெளிக் கொணர்ந்த ‘புரவலர் புத்தகப் பூங்கா’ எதிர் காலத்தில் இன்னும் பல திறமையாளர்களின் ஆக்கங்களுக்கு நூலுருவம் கொடுக்கும்போது அதன் கட்டமைப்பு சர்வதேச தரத்தில் அமைய வேண்டும் என்பது எனது தாழ்மையான வேண்டுகோல்.

தலைப்பிற்கு ஏற்றாற்போல் வர்ணக் கலவையுடன் அழகியதாய் அட்டைப்படம் அமைந்திருப்பது நூலை கையிலெடுத்துப் படிப்பதற்கான ஆவலைத் தூண்டுவதாய் உள்ளது. அதேநேரம் அதில் பிரசுரமாகியிருக்கும் பெண்ணின் உருவப்படம் சற்று கவர்ச்சியாய் இருக்கிறது என்றும் சொல்லத் தோன்றுகிறது.

சிறந்த சிறுகதை எழுத்தாளரான தியதலாவை ரிஸ்னா இலங்கையில் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவு முஸ்லிம் பெண் எழுத்தாளர்களும் தன்னையும் ஒருவராக நிலைநிறுத்தியிருப்பது பாராட்டத்தக்கது. இவரது எதிர்கால முயற்சிகள் சமூக எழுச்சியில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய விடயங்களை உள்வாங்கியதாக அமைய வேண்டும் என வாழ்த்துவதுடன் இவரின் ஆற்றல்கள் மென்மேலும் வளர்வதற்கு இறைவன் அருள்பரிவானாக எனப் பிரார்த்தனை செய்கின்றேன்.

இன்னும் உன் குரல் கேட்கிறது இனிமையாக….