காலம் அவளைத் தேடிக்கொண்டிருக்கிறது

வானம் அழகாயிற்று
நட்சத்திரங்கள் வர்ணமாய் ஒளிர்ந்தன.

கூதல் காற்றில் இசைலயம் சேர்ந்தது
அவள் முகத்தின் புன்னகை
நிலவாகி ஒளிர்ந்தது.

மின்மினி பூச்சிகளும்
பாடும் பறவைகளும்
அவளுக்கு தோழியாகின

காலங்கள் தனக்காக காத்து நிற்பதையும்
கனவுகள் தன்னை பிரதி செய்வதையும்
வானம் தன் அழகை பூசிக்கொள்வதையும்
அவளால் உணரமுடிந்தது.

அவள் இதயத்தில் இருந்து
எக்காலத்திலும் அழியாத
காதலின் இசை
ஊற்றெடுக்க தொடங்கியது

வானமும் நதியும் பறவைகளும்
காடும் அவள் பாடலை மீளவும் பாடின
அந்த இசையில் மிதந்து கொண்டிருந்த
ஓர்நாளில் அவள் காணாமல் போனாள்

இரவும் வானமும்
தென்றலும் மின்மினிகளும்
அதற்கு பின்
அமைதியாய் இல்லை

அவளைத்தேடி
அலைந்து கொண்டிருந்தது
காலம்.

 கவிஞர்.வேலணையூர்-தாஸ்

Comments

 1. Jeyakumar says:

  இரவுவர்ணஜாலங்களைத் தன்னகப்படுத்தி, நிலாமுகம் காட்டியபடி இயற்கையின் தாளலயத்துடன் வலம்வரும் பெண்ணைக்காட்டிச் செல்லும் அலாதியான கவிதைநடை. வானம் அவளைத்தொட்டுப் பூசிக்கொள்ளும் பேரழகி அவள். அவளின் பிற்பாட்டுக்காரர் வானம், நதி, பறவைகள், காடென விரிகிறது. சங்ககால அகத்திணை சுட்டும் முதல், கருப்பொருள்களுடன் சொல்நொய்மை பொருள்தெளிவென லாவகமாக கவிதையையும் பெண்ணையும் நகர்த்திச் செல்லுகிறார் கவிஞர்.

  காலங்களைத் தனக்காகக் காக்கவைத்து ஏங்க வைத்த அந்த அழகுப்பெட்டகம், நிலாக்கால இரவொன்றில் காணாமல் போகும் சேதி, வாசகர் தலையில் இடியென இறங்கி சித்தப்பிரமையாக்கி விடுகிறது.. அமைதியிழந்த வானமும், பூமியும், பறப்பனவும், ஊர்வனவும்….இழவுச்சேதியால் கதிகலங்கி நிற்கின்றன.

  ‘’ காணாமல் போதல் ‘’ . போர்க்கால அவலங்களைச் சுட்டி வருத்தும் வரிகள். காலம் அவளைத் தேடுதல், உறவுகளின் தேடுதலாக உய்த்துணர்ந்து கொள்ளலாம். ஈனக்குரலில் முக்கி முனகி மாண்டுகொண்டிருக்கும் முகம்தெரியாத பாவப்பிறப்புக்கள் அவர்கள்.

  கூம்பிச்சாயும் மனநிலையைக் தனது கவிதை மூலம் தந்து, தான் வாழும் சமூகத்தின் அவலச்சேதியொன்றை நாசூக்காகத் தொட்டுச்சொல்லும் கவிஞர் தாஸ் பாராட்டப்பட வேண்டியவர். “ அவன் காணாமற்போகக் கண்டவரைக் கண்டவர் யார் “ என்ற சி.சிவசேகரத்தின் எதிரொலி எங்கோ கேட்கிறது.

 2. நன்றி ஜெயக்குமார் உங்கள் விரிவான கருத்துக்கு.
  அன்புடன்- தாஸ்