“கவியில் உறவாடி” வெளியீட்டு விழா – ஒரு பார்வையும் பகிர்வும்


Photo Editing: மன்னார் அமுதன்

மன்னார் எழுத்தாளர் பேரவை மற்றும் தழல் இலக்கிய வட்டம் ஆகியவற்றின் இணை ஏற்பாட்டில், 10.11.2011அன்று ‘கலை அருவி’ ஒன்றுகூடல் மண்டபத்தில் காலை 10.15 இற்கு ஆரம்பமான “கவியில் உறவாடி” (கவிதைத் தொகுப்பு – ஜீவநதி வெளியீடு) வெளியீட்டு விழாவிற்கு மன்னார் தமிழ்ச்சங்கத் தலைவரும் மன்னார் எழுத்தாளர் பேரவையின் போசகருமான அருட்திரு.தமி்ழ்நேசன் அடிகள் தலைமைதாங்கினார். பிரதம அதிதியாக எம்மால் அழைக்கப்பட்டிருந்த வைத்தியக் கலாநிதி திரு.எஸ்.லோகநாதன் அவர்கள் (யாழ்ப்பானத்திலுள்ள) தனது மைத்துணனின் திடீர் மரணச்செய்தியைக் கேள்வியுற்ற பின்னரும் அங்கு புறப்படுவதற்கு முன் எமது விழாவினைச் சிறப்பிக்கும் உயரிய எண்ணத்தோடு விழா ஆரம்பமாவதற்கு முன்னரே நிகழ்விடத்திற்குப் பிரசன்னமாகியிருந்தமை எமக்கு ஆச்சரியத்தை வரவழைத்தது. எனினும் எமக்கு அது தர்ம சங்கடமான நிலையைத் தோற்றுவிக்கவே, அவரை முற்கூட்டி அனுப்பிவைக்கின்ற எண்ணத்தோடு நிகழ்ச்சி நிரலில் சில மாற்றங்களை மேற்கொள்வதெனத் தீர்மானித்தோம்.

சரியாக காலை 10.15 இற்கு மௌன இறைவணக்கத்தோடு இனிதே ஆரம்பமான விழாவினை இறுதிவரை பிரகாசிக்கச்செய்யும் நோக்கோடு மங்கள விளக்கேற்றல் நிகழ்வு இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து சங்கீத ஆசிரியை திருமதி.மைதிலி அமுதன் அவர்கள் தமிழ்மொழி வாழ்த்தினை வழங்கினார். தமிழ்மொழி வாழ்த்தினை அவர் இசைப்பதை இதற்கு முன்னர் மூன்று தடவைகள் வெவ்வேறு இலக்கிய நிகழ்வுகளின் தொடக்கத்தில் செவிமடுத்திருந்தபோதிலும் இன்றைய தினம் ஏனோ அவரது குரலில் ஒரு அதீத ஈர்ப்புத் தென்பட்டது. உண்மையில் அவரது தமிழ்மொழி வாழ்த்து என்னை மெய்சிலிர்க்க வைத்தது. (அதுபற்றி நிகழ்வின் தலைவரும் தனது தலைமையுரையில் பிரஸ்தாபித்துக் கூறினார் என்பது குறிப்பிடத்தக்க விடயம்). தமிழ்மொழி வாழ்த்தினைத் தொடர்ந்து வரவேற்புரை இடம்பெற்றது. கவிஞர் பி.அமல்ராஜ் அவர்கள் வரவேற்புரையினை அழகுற நிகழ்த்தினார். அதில் நிகழ்வினைச் சிறப்பித்துக்கொண்டிருந்த ஒவ்வொருவரையும் தனித்தனியாக விளித்தமை எல்லோரையும் நிச்சயம் மகிழ்ச்சிப்படுத்தியிருக்கும்.

வரவேற்புரையினைத் தொடர்ந்து பிரதம அதிதி வைத்தியக் கலாநிதி திரு.எஸ்.லோகநாதன் அவர்களது உரை இடம்பெற்றது. இறைதுதிப் பாடலோடு தனது உரையை ஆரம்பித்த அவர் கவிதை நூல்பற்றி மிகவும் சிலாகித்துக் கூறினார். எந்தவொரு நிகழ்விலும் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை கலந்து சிறப்பிக்கும் தனது வழமைக்கு மாறாக இன்றைய நிகழ்விலிருந்து இடைநடுவே விடைபெறவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டமைக்காக தனது மனவருத்தத்தைத் தெரிவித்த அவர் வழமைக்கு மாறாக தனது உரையையும் சுருக்கிக்கொண்டார். அவரது உரையினைத் தொடர்ந்து அவருக்கான (நூலின்) முதன்மைப் பிரதியை நிகழ்வின் தலைவர் வழங்கி கௌரவித்தார். அதனைப் பெற்றுக்கொண்ட பிரதம அதிதியவர்கள் நிகழ்விலிருந்து விடைபெற்றுச் செல்லவே, அடுத்த நிகழ்வாக தலைமையுரை இடம்பெற்றது. மன்னார் தமிழ்ச்சங்கத் தலைவரும் மன்னார் எழுத்தாளர் பேரவையின் போசகருமான அருட்திரு.தமி்ழ்நேசன் அடிகள் தமது தலைமையுரையில் “கவியில் உறவாடி” கவிதைத் தொகுப்பு பற்றி தனது கருத்துக்களைச் சுருக்கமாகத் தெரிவித்ததோடு கவிதைத் தொகுதிக்கும் கவிதைத் தொகுப்புக்கும் இடையேயுள்ள வேறுபாட்டையும் விளக்கினார். அத்தோடு இந்நிகழ்வை அழகுற ஏற்பாடு செய்த மன்னார் எழுத்தாளர் பேரவையின் தலைவரும் கவிஞருமான மன்னார் அமுதன் மற்றும் பேரவையின் பொருளாளர் கவிஞர் மன்னூரான் என்போரின் முயற்சியைப் பாராட்டினார்.

அது மட்டுமன்றி, ஒவ்வொரு முழுமதி தினத்திலும் இடம்பெறுகின்ற இலக்கிய நிகழ்வுகளில் பங்குகொண்டு தங்களது கருத்துக்களைப் பரிமாறுமாறு அவையோருக்கு ஒரு அன்பான அழைப்பையும் விடுத்து தனது தலைமையுரையினை நிறைவுசெய்தார் அருட்திரு.தமி்ழ்நேசன் அடிகள். அதனையடுத்து நூலின் சிறப்புப் பிரதிகளை வழங்கும் வைபவம் இடம்பெற்றது. சிறப்புப் பிரதிகளுள் முதற்பிரதியை நிகழ்வின் தலைவர் அருட்திரு.தமி்ழ்நேசன் அடிகளாருக்கு, இலக்கிய ஆர்வலரும் மன்னார் பிரதேசசபையின் தவிசாளருமான திரு.மார்டின் அவர்கள் வழங்கிவைத்தார். அதனைத் தொடர்ந்து ஏனைய சிறப்புப் பிரதிகளை அனைத்துப் பிரமுகர்களுக்கும் நிகழ்வின் தலைவர்அருட்திரு.தமி்ழ்நேசன் அடிகள் வழங்கிவைத்தார். சிறப்புப் பிரதிகள் வழங்கிவைக்கப்பட்டதன் பின்னர் நூல் நயப்புரையின் முதற் பகுதி இடம்பெற்றது. அதனை ஆசிரிய ஆலோசகரும் சிறந்த தமிழறிஞருமான திரு.பா.தர்மராஜா அவர்கள் வழங்கினார்.

கவிதைத் தொகுப்பின் முதற் பதினைந்து கவிஞர்களான அநுராதபுர மாவட்டக் கவிஞர்கள் பத்துப்பேர் மற்றும் யாழ்ப்பானக் கவிஞர்கள் ஐவர் பற்றியும் அவர்களது கவிதைகள் பற்றியும் மிக விலாவரியாகப் பேசினார். அவற்றைப் பிரித்து மேய்ந்தார் என்றே சொல்லவேண்டும். உண்மையில் அவர் நயப்புரைக்காக எடுத்துக்கொண்ட நேரம் அதிகமென்றபோதிலும் யாருக்கும் அலுப்புத்தட்டாத விதத்திலே மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது அவரது நயப்புரை. இலக்கியத்தின்மீது குறிப்பாக கவிதைகள்மீது அவருக்குள்ள ஆழ்ந்த அறிவையும் ஈடுபாட்டையும் எல்லோராலும் கண்டுகொள்ள முடிந்தது. நயப்புரையின் முதற்பகுதியை அடுத்து எழுத்தாளர் தேவா அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க “தசையினைத் தீ சுடினும்” என்ற (ஆனந்த விகடனில் வெளிவந்த) கவிதையை கவிஞர் மன்னூரான் வாசித்தார்.

இலங்கையின் தலைநகராம் கொழும்பில் இனக்கலவரத்தின்போது (கணவன், மனைவி, இரு பிள்ளைகள் அடங்கலாக) ஒரு தமிழ்க் குடும்பம் தாம் பயணித்த காரினுள்வைத்து பேரினவாதக் காடையர்கள் குழுவொன்றினால் எரிக்கப்பட்ட கோரச் சம்பவத்தைச் சித்தரித்துக் காட்டுகின்ற அக்கவிதை தொடர்பான ஆச்சரியமான செய்தி என்னவெனில் பசில் பெர்னாண்டோ எனும் சிங்களக் கவிஞரால் எழுதப்பட்ட கவிதையின் தமிழ்வடிவம்தான் அக்கவிதை என்பதே. மெய்சிலிர்க்க வைக்கும் அக்கவிதை வாசிக்கப்பட்டதன் பின்னர் அக்கவிதை தொடர்பான கருத்தாடல்கள் சிறிது நேரத்திற்குத் தொடர்ந்தன. அதன்போது எழுத்தாளர் தேவா அவர்களும் அது தொடர்பான தனது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார். அதனையடுத்து நூல் நயப்புரையின் மிகுதிப் பாகத்தை நாவலாசிரியர் எஸ்.ஏ.உதயன் அவர்கள் வழங்கினார். கவிதைத் தொகுப்பின் மிகுதிப் பதினைந்து கவிஞர்களான யாழ்ப்பான மாவட்டக் கவிஞர்கள் ஐவர் மற்றும் மன்னார்க் கவிஞர்கள் பத்துப்பேர் பற்றியும் அவர்களது கவிதைகள் பற்றியும் நயப்புரை வழங்கிய அவர் கவிதைகளை ஆழமாகத் தொட்டுச் செல்லாதபோதிலும் அக்கவிதைகள் பற்றிய காத்திரமான தனது கருத்துக்களை வழங்கினார். அதில் இடம்பெற்ற “ஒரு ராணுவ வீரனின் ராக்காலக் கவிதை ” எனும் கவிதையை முழுமையாக வாசித்து அதுபற்றி மிகவும் பிரஸ்தாபித்துக் கூறினார்.
புதிய எழுத்தாளர்களுக்கு சில காத்திரமான அறிவுரைகளையும் வழங்கினார். அந்நயப்புரை நிறைவடைந்ததும் கவிதைத் தொகுப்பு பற்றிய, விழா பற்றிய தங்களது கருத்துக்களை எல்லோரோடும் பகிருமாறு அவையோரிடம் பொதுவாக நாம் வேண்டிக்கொண்டதையடுத்து அவையிலிருந்து பலரும் முன்வந்து தங்களது கருத்துக்களை முன்வைத்தனர். அவை எல்லாமே எம்மை உற்சாகப்படுத்துவனவாக அமைந்திருந்தன. அதேபோன்று நிகழ்வின் வெற்றியையும் அவை பறைசாற்றின. கருத்துரைகளைத் தொடர்ந்து மன்னார் எழுத்தாளர் பேரவையின் தலைவரும் கவிஞருமான மன்னார் அமுதன் கவிதைத் தொகுப்பு பற்றியும் விழா பற்றியும் சில கருத்துக்களை முன்வைத்ததோடு இம்முயற்சியானது வெற்றிபெற ஒத்துழைத்த அனைவரையும் நன்றியோடு நினைவுகூர்ந்தார். இறுதியாக, கவிதாயினி ஏ.சுஜானாவின் நன்றியுரையோடு விழா இனிதே நிறைவுற்றது.

நிகழ்ச்சித் தொகுப்பு: கவிஞர் மன்னூரான் ஷிஹார்.

நன்றி:  கவிஞர் மன்னூரான் ஷிஹார்.