எனக்கு நீ

DSC011001

மன்னூரான் ஷிஹார்

உன் பளிங்குக் கண்களின்
பார்வைபட்டதும்
எனக்குள்
பரவசம் வந்து
பற்றிக்கொள்கிறது.

நீ உதடுகள் குவித்து
என் முகமெங்கும்
எச்சில் பதிக்கையில்
எங்கோ புதுக்கிரகத்தில்
சஞ்சரிக்கிறது மனது.

தயங்கித் தயங்கி
நீயென்
விரல் பற்றுகையில்
வெண்பஞ்சுக் குவியலின்
மிருதுவையுணர்கிறேன் நான்.

உன் நாவிலிருந்து
கோர்வையாய் உதிரும்
கொச்சைத்தமிழில்
என்
கோபதாபங்களெல்லாம்
என்னோடு
கோபித்துக்கொள்கின்றன.

நீ உறங்கும் அழகை
உற்று ரசித்தே
நான்
உறங்காமல் விழித்த
இரவுகள் அதிகம்.

நீ அழுகின்றபோதுகூட
அழகாய்த்தான் இருக்கிறாய்
ஆனாலும் உன்னை
அரைநொடிநேரம் அழவிடவும்
அனுமதிப்பதில்லை மனது.

‘அப்பா’ என்று நீ
அழைக்கும் அழகிலென்
அத்தனை சோகமும்
அடிபட்டுப்போகுதடா.

மகனாய்ப் பிறந்தெனை
மகிழ்விக்கும் மகனேயுன்
மகனாய்ப் பிறந்திடவென்
மனமது துடிக்குதடா!
-மன்னூரான் ஷிஹார்