மொழி என்பது ஒரு தேசிய இனத்தின் அடையாளம் – மட்டக்களப்பில் அருட்திரு. தமிழ் நேசன் அடிகளார்

மொழி என்பது வெறும் ஒலி மட்டும் அல்ல! மொழி என்பது வெறும் தகவல் தொடர்பு சாதனம் மட்டுமல்ல! மொழியைப்பற்றி பேசுகின்றபோது, “மொழி என்பது எண்ணங்களை எடுத்துச்செல்லும் ஊடகம்தானே” என்று சிலர் சாதாரணமாகச் சொல்லலாம். ஆனால் மொழியின் பரிமாணங்கள் பரந்துபட்டது. மொழி என்பது ஒரு தேசிய இனத்தின் அடையாளம்! மொழி இல்லையேல் ஒரு இனம் இல்லை. மொழி இல்லையேல் ஒரு இனத்தின் இலக்கியங்கள் இல்லை, கலைகள் இல்லை, பண்பாடு இல்லை, மரபுகள் இல்லை, சமயங்கள் இல்லை. ஒரு இனத்தின் இலக்கியங்களை, கலைகளை, பண்பாடுகளை, சமய நம்பிக்கைகளை தாங்கி நிற்பது மொழி.

இவ்வாறு கடந்த 8ஆம் 9ஆம் திகதிகள் மட்டக்களப்பில் நடைபெற்ற தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளார் நூற்றாண்டு விழா விழாவின் முதல் நாள் நிகழ்வில் கலந்து சிறப்புரையாற்றும்போது மன்னார் தமிழ்ச் சங்கத்தின் தலைவரும், மன்னார் மறைமாவட்ட கலையருவி இயக்குனருமான அருட்திரு. தமிழ் நேசன் அடிகளார் குறிப்பிட்டார்.

மட்டக்களப்பு தனிநாயகம் அடிகளார் நூற்றாண்டு விழாச் சபையின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மகாஜனாக் கல்லூரியில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சிறப்புரையாற்றிய தமிழ் நேசன் அடிகளார் தொடர்ந்து பேசுகையில் கூறியதாவது,

உலக வரலாற்றுப் பக்கங்களைத் திருப்பிப்பார்த்தால் ஒரு உண்மை நமக்குத் தெளிவாகும். அதாவது ஒரு இனத்தை அழிக்கவேண்டும் என்றால் எதிரிகள் முதலில் அந்த இனத்தில் மொழியை அழித்திருக்கின்றார்கள். மொழி அழிந்தால் ஒரு இனம் தானாகவே அழிந்துவிடும்.

மொழி என்பது ஒரு தலைமுறை அடுத்த தலைமுறைக்கு தன் பண்பாட்டை எடுத்துச் செல்லும் வழி. தமிழர்களாகிய நம்மைப் பொறுத்தவரை தமிழ் மொழி என்பது வெறும் ‘வழி’ மட்டுமல்ல, அதுதான் நமது ‘விழி.’

ஏனென்றால் இரண்டாயிரம் ஆண்டுகால தமிழின் எழுச்சி, வீழ்ச்சி – தமிழின் வெளிச்சம், இருட்டு – தமிழின் மேடு, பள்ளம் இவற்றை உற்றுப்பார்த்தால் ஒரு உண்மை புலப்படும். அதாவது தமிழனின் மொழிக்கு ஊறு நேர்ந்தபோதெல்லாம் அவனது அரசியல், பொருளாதார, பண்பாட்டின் அடித்தளங்கள் ஆட்டம் கண்டிருப்பதைப் பார்க்கின்றோம்.

தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளார் தமிழுக்காகவே தன் வாழ்வை அர்ப்பணித்த ஓரு கத்தோலிக்க குரு. அவருடைய தமிழ்ப்பணிகள் ஈடுஇணையற்றவை. அவருடைய தமிழ்ப் பணிகளை மதிப்பீடு செய்த அறிஞர்கள் அவரைப் பற்றி கூறும் வார்த்தைகள் உண்மையில் நம்மை மெய்சிலிர்க்க வைக்கின்றன. “தமிழை உலக வரைபடத்தில் பொறித்தவர் தனிநாயகம் அடிகளார்.”“புலவர்களுக்குள்ளும் பண்டிதர்களுக்குள்ளும் முடங்கிக் கிடந்த தமிழை தனிநாயக அடிகளார் உலக அரங்கில் ஏற்றிவைத்தார்!

“இருபதாம் நூற்றாண்டில் இவரைப்போல் உலகளாவிய தமிழ்ப்பணி புரிந்தவர் வேறெவருமில்லை!” இந்த வார்த்தைகளை மேலோட்டமாகப் பார்த்தால் சிலவேளை மிகைப்படுத்தப்பட்ட வார்த்தைகளாகத் தெரியும். ஆனால் தனிநாயகம் அடிகளாரின் பரந்த தமிழ்ப்பணிகளை ஆழமாக நோக்கினால் இந்த வார்த்தைகள் உண்மையான வார்த்தைகள் என்பதை எவரும் இலகுவில் புரிந்துகொள்வர்.