தான் தோன்றித் தாண்டவராயர்கள்

                                                   இணைக் கட்டுரையாளர்கள் : தேவா -சிவா

“பெரும்பான்மையின் மவுனம் அது சிறுபான்மையின் மீதுபிரயோகிக்கும் வன்முறையையும் விடக் கொடியது”

மனிதன் தன்னைச் சமூகமாக தகவமைத்துக் கொண்டகாலம் தொட்டே அவன் கூடிமகிழ்ந்திருக்கும் தேவையைப் புரிந்து கொண்டான். விழாக்களை ஏற்படுத்திய மனிதன் காலப்போக்கில் தன் பயணத்தில் சேர்த்துக் கொண்ட சமய அடிப்படையிலும் விழாக்களை உருவாக்கிக் கொண்டான். சமூக, சமயரீதியான விழாக்கள் பிரத்தியேக சமூக, சமயமக்களால் அனுசரிக்கப்பட்டு பின்பு ஓரின, பல்லின சமூகங்களில் அவை விடுமுறைகளாக மாறின. இன்றைய அரசியலின் அசைவு குறிப்பாக வடமாகாணசபை தேர்தலின் பின்பு, இன ரீதியான நல்லிணக்கத்தினை நோக்கிய நகர்வாய் இருக்க வேண்டிய தேவையைப் புரிந்து கொண்டுள்ளது.

இனரீதியான நல்லிணக்கம் முதலில் தொடங்க வேண்டிய ஆரம்பப் புள்ளியாக தமிழ்குழுமங்களுக்கு இடையிலான இணக்கத்தைக் கொள்ளலாம். மாகாணசபை முதல்வரின் ஆரம்ப உரையில் வலியுறுத்தியவை நம்பிக்கை தருவதாகவும் திசையறியாது குழம்பியிருந்த தமிழ்மக்களுக்கு திசைகாட்டிபோலவும் அமைந்தது. இனங்களுக்கான உறவுப்போரில் பாரிய சீரழிவினை எட்டியதுடன் ஒருவர் மீதான மற்றையவரின் நம்பாத்தன்மையையும் வளர்த்துவிட்டது. தன்குழுமத்தின் நியாயத்தினை அது நியாய அடிப்படை இல்லாவிடினும் நியாயமாக சித்தரிக்கும் போக்கும் மற்றைய இனக்குழுமங்களைவிட தன்னை முன்னிலைப்படுத்தும் முயல்விலும் நீடித்திருக்கும் நிலைதொடர்கிறதே அன்றி சிந்தனை மாற்றத்துடன் ஆக்கபூர்வமான நம்பிக்கை அடிப்படையை கட்டியெழுப்ப எந்தவிதத்திலும் தயாராக இல்லை என்பது வருத்தத்துக்குரிய யதார்த்தம்.

பெரும்பான்மை, சிறுபான்மையை அடக்குவதும் அல்லது படிநிலையில் சிறுபான்மைக்கு அதிகாரம் வாய்ப்பின் பெரும்பான்மையை ஒடுக்குவதும் நடந்துகொண்டே தான் வருகிறது. தான் ஒடுக்கப்படும் போது அலறுகிறவன் மற்றவனைதான் அடக்குவதை ஒப்புக் கொள்ள மறுக்கின்றான். சமத்துவம் கோருபவன் சமூக அடுக்கில் தனக்கு கீழ் உள்ளவனை சமமாகப்பார்க்க சம்மதிப்பதில் மனிதநாகரீகத்தின் தோற்றம் அவனை நெறிப்படுத்தவும் சமூகத்தின் ஓர் அங்கமான அவன் சமத்துவத்தினை சமூக நலன்களின் தேவையாகக் கொண்டு வளர்த்தெடுக்கவுமே உருவானது.
இந்த முயற்சியில் பல்லாயிரம் ஆண்டுகள் கழிந்தும் ஆரம்பப் புள்ளியிலேயே சுழன்றுகொண்டோ அல்லது பின்னடைவுகளில் மேன்மைத்துவம் அடைந்து கொண்டு வந்திருப்பதுடன் சந்ததிக்கடத்தல்களில் இன்னும் அழிவிற்கான முன்னெடுப்புக்களையே தந்து விட்டுப் போகின்றான்.

சமத்துவத்தில் மனிதனின் நம்பிக்கையின்மை தொடரக்காரணம் என்ன என்பதனை உளவியல், தத்துவார்ந்த, வாழ்நிலை, சமூகச்சூழல் என பல பிரிவுகளில் பகுத்தும் தொகுத்தும் ஆராய்ந்தவர்கள் இதனைவிட இன்னும் பலதுறைகளாக நுணுக்கி ஆராய்ந்தவர்கள் எல்லோருமே ஓர் அடிப்படையை விட்டு விலகி செல்ல முடியாது. நம்பிக்கை இல்லாவிடின் எந்தமாற்றமும் சமூகத்தில் அரும்பவோ வேரூண்றி நிலைக்கவோ வாய்ப்பில்லை.

எனவே பல்கூறுகளாகப் பிரிந்து எதிர் எதிர்த்திசைகளில் பிரயாணித்துக்கொண்டு சிதறிக்கிடக்கும் சமூகக் குழுமங்களும் அதன் அங்கத்துவமான தனிமனிதர்களும் சமத்துவத்தின் மீது நம்பிக்கை வைக்காவிடில் முரண்கள் தீரப்போவதில்லை. இலங்கை இனக்குழுமங்களின் பிரிவினை அடையாளப்போக்கு, சமூகத்தை தனித்தனிதீவுகளாக்கி, ஒன்றிணைந்த வளர்ச்சிப்போக்குக்குத் தடையாக இருந்தது. இந்தப் பிரிவினைகளைச் சமூக, மொழி, இன, பிராந்திய, சாதி, சமயம் என்று வளர்த்துவிட்ட அந்தந்தக் குழுமங்களின் “இனமானஉணர்வாளர்”களுக்கு வேண்டுமானால்அவர்களின்சமூக அதிகாரநிலைக்கும்நல்வாழ்க்கைக்கும் உதவியதே அன்றி, சமூக முன்னேற்றத்திற்கும் தனிமனிதசுதந்திரத்திற்கும் மதிப்பிற்கும் எதையுமே செய்து விடவில்லை.

சிங்களப்பாடசாலைகள், இசுலாமிய பாடசாலைகள், தமிழ்பாடசாலைகள் என இலஙகைப் பாடசாலைகள் மூவகைப்பிரிவினுள் அடங்கும். கடந்த தீபாவளி வாரவிடுமுறைநாளில் வந்ததால் முதல்நாளான வெள்ளிக்கிழமை தமிழ்பாடசாலைகளுக்கு விடுமுறைநாளாக அறிவிக்கப்பட்டது. இந்துக்கள், கிறீத்தவர்கள், இசுலாமியர்கள் என மூன்று மதமாணவர்களும் தங்கள் மதம்சார் பாடசாலைகளில் தனியனாக மாத்திரம் கற்பதில்லை, ஆங்காங்கே பிறமதமாணவர்களும் ஒருபாடசாலையில் பெரும்பான்மை மதமாணவர்களுடன் சிறுதொகையில் கல்வி கற்பதும் வழமையும் நடைமுறையும்.
ஆனால் அரசால் கொடுக்கப்பட்ட சலுகை விடுமுறையை சிலபாடசாலை அதிபர்கள் தங்கள் சுயஅதிகாரத்தில் இரத்துச் செய்து தீபாவளிக்கு கொடுக்கப்பட்ட விடுமுறையில் பாடசாலையை “கர்மசிரத்தையாக”நடாத்தியுள்ளனர்.

மன்னாரில் ஆறுபாடசாலைகள் இவ்வாறு அவ்விடுமுறையில் கற்பித்தலை நடாத்தியதாக தெரிகிறது. அறியப்படாததன்எண்ணிக்கை?
முதலில் ஒருபாடசாலை அதிபருக்கு அரச சலுகைவிடுமுறையை இரத்துச்செய்யும் அதிகாரம்இருக்கின்றதா என்பதனை அந்தத்திணைக்கள அதிகாரிகளுக்கு விட்டுவிடுவோம். வெள்ளி பாடசாலைக்குப் போகாவிடில் வரவில் குறைவு, போனால் என் பண்டிகையின் விடுமுறை எனக்கு மறுக்கப்படுகின்றது என்ற மாணவனின் நிலையை ஒருபக்கம் புரிய முனைவதுடன் களியாட்டங்களுக்காகவும் விளையாட்டிற்காகவும் வரவேற்புக்கள், பிரியாவிடைகளுக்காக எத்தனை முறைகள் இதேபாடசாலைகள் பகுதியாகவோ முழுதாகவோ இயங்காமல் இடைநிறுத்தப்பட்டிருக்கின்றன? அப்போதெல்லாம் இந்த “கடமைவீரர்கள்”ஏன் பாடசாலையை தொடர்ந்து நடாத்தவில்லை?

இங்கு தான் நாம் சமூகமுரணான காரணிகளை பார்க்கமுடிகிறது. பெரும்பான்மை என்றஅலட்சியம், சமத்துவத்தில் நம்பிக்கை இல்லை, மாணவர் நலனில் அக்கறை என்ற போலித் தோற்றப்பாட்டை உருவாக்கல் என அவை விரிந்து கொண்டே போகும். மீண்டும் ஆரம்பப் புள்ளிக்கே வருவோம், இன்றைய அரசியல் சூழலில் சமூக நல்லிணக்கம், பரஸ்பர நம்பிக்கை என்பனவற்றின் தேவை அதனை நோக்கிய நகர்வு என்பன எவ்வளவு முக்கியத்துவம் பெறுகின்றது என்பதெல்லாம் கணக்கில் எடுக்கப்படவில்லை. என் அதிகார எல்லைக்குள் நான் எடுக்கும் முடிவு எவற்றையெல்லாம் அரும்ப முன்னே கிள்ளிவிடுகிறது என்ற கவனமில்லாத தான்தோன்றித்தனம், இன்னும் எத்தனை சந்ததிக்குத்தான் நாம் இந்த அலட்சியத்தையும் அழிவையும் விதைத்து விடப் போகின்றோம்?

ஏன் நம்“சமூகத்தலைமைகள்”இது பற்றி பேசுவதில்லை? ஏன் என்பதற்கு இக்கட்டுரையில் எங்கோ பதிலும் ஒழிந்திருக்கலாம்.

நன்றி:  இணைக் கட்டுரையாளர்கள் : தேவா -சிவா