மனிதனும் பகுத்தறிவும்

இணைக்கட்டுரையாளர்கள்: தேவா -சிவா

உலகில் வாழுகின்ற உயிரினங்கள் அனைத்திற்கும் அறிவுள்ளது. மூளையின் செயற்பாடுகளுள் ஒன்றாகிய சிந்தனைச்செயற்பாடுதான் அறிவு என்ற சொல்லால் சுட்டப்படுகின்றது. சிந்தனை மட்டங்களைப் பொறுத்து ஓரறிவு தொடங்கி ஆறறிவு வரையாக உயிரினங்கள் பாகுபடுத்தப்பட்டுள்ளன. இதில் மனிதன் ஆறுவகையான அறிவுமட்டங்களையும் உடையவனாகக் கருதப்படுகின்றான். ஆறாம் அறிவு தான் பகுத்தறிவு எனப்படுகின்றது. சிந்தித்து, ஆராய்ந்து, பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டு, சந்தர்ப்பங்களுக்கேற்ப செயற்படுகின்ற ஆற்றல்கள் பகுத்தறிவுப் பண்புகளில் சிலவாகும். மனிதக்குரங்கு போன்ற சில விலங்குகளிடமும் இத்தகு பண்புகள் காணப்பட்டாலுங்கூட மிக உயர்மட்டச் சிந்தனைகள் மனிதர்களிடம் மட்டுமே உள்ளது. இதனால் மனிதர்கள் ஏனைய உயிரினங்களில் இருந்து மேம்பட்டவர்களாக மனிதர்களாலே கணிக்கப்படுகிறார்கள். இருப்பினும், பகுத்தறிகின்ற சிந்தனைச் செயற்பாட்டை எல்லா மனிதர்களும் பயன்படுத்துகின்றார்களா? அதன்படி செயற்படுகின்றார்களா? சிந்திப்பதற்கும் சிந்தனையின் படிசெயற்படுவதற்கும் ஏதாவது தடைகள் உள்ளதா? அது அகத்தடைகளா? புறத்தடைகளா? என்பவற்றை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கம்.

      ஒரு மனிதனுக்குச் சிந்தனை என்பது மிகவும் அடிப்படையான உடற்செயற்பாடாகும். புலன்களால் இயற்கையோடு இடைவினையுறவு கொள்ளும் போது சிந்தனை தொடங்குகின்றது. எல்லாவற்றுக்கும் கேள்வி எழுப்புவது சிந்தனையின் இயல்பு. வினாக்களுக்கு விடையாக அவனுக்குள் அனுபவங்கள் சேகரிக்கப்படுகின்றன. தன்னைச்சுற்றியுள்ள ஒவ்வொன்றைப் பற்றியும் அறியவிரும்புகின்றான். தன்னைப்பற்றி, தன் குடும்பத்தைப் பற்றி, சமூகம், உயிர்கள், பௌதிகப் பொருட்கள் என்பன பற்றி என அவனது சிந்தனை விரிவடைந்து கொண்டே செல்கின்றது. இவ்விரிவடைதல் நிலைதொடர்ந்து அங்கீகரிக்கப்பட்டால், எங்கே தமது தலைமைத்துவத்திற்கும் சமூக அந்தஸ்த்து நிலைக்கும் ஆப்புவைக்கப்பட்டு விடுமோ என்று பயந்துபோய், அதை வெளிக்காட்டாமல் மறைத்து, இல்லாதது பொல்லாததைக் கூறி, சிந்திப்பவர்களைப் பயமுறுத்தி, சிந்தனையைஅடக்கி, முடக்கி, சலவை செய்து தாங்கள் எதிர்பார்ப்பது போல் மக்களைச் சிந்திக்கச் செய்வதில் வெற்றிபெற்றவர்கள்தான் இன்று பெரும்பாலும் தலைவர்களாக, எஜமானர்களாக இருக்கிறார்கள்.

சிந்தனையை முடக்கிக் கொண்டவர்கள் மிக உயரிய, விசுவாச மிக்கஊழியக்காரர்களாக இருக்கிறார்கள். உயிரியானது கருவில் உருவாகும் போதே அதன்சில இயல்புகள் தீர்மானிக்கப்பட்டுவிடுகின்றன. அதனை நாம் பரம்பரை என்போம். அவை எல்லா உயிரினங்களுக்கும் பொதுவானவை. பிறந்த பின் சூழல் காரணமாக சில இயல்புகளைப் பெற்றுக்கொள்கின்றன. அதாவது சில இயல்புகள் இயற்கையாகவும் சில இயல்புகள் சூழல் காரணமாகவும் ஏற்படுகின்றன. எத்தகைய இயல்புகளாயினும் சிந்தனையின் மூலம் அவற்றைச் செப்பனிட்டுக் கொள்கின்ற ஆற்றல் மனிதர்க்கு உண்டு. அவ்ஆற்றலை வளர்த்து விட வேண்டிய பாரிய பொறுப்பு சகமனிதர்களை உள்ளடக்கிய சமூகத்திற்குஉண்டு.

      இங்கு சமூகம் என்பதனால் பெரிதும் கருதப்படுவது சமூகநிறுவனங்களே ஆகும். குடும்பம், பாடசாலை, சமயநிறுவனங்கள், பொதுச்சங்கங்கள், கழகங்கள், சபைகள், கட்சிகள் போன்ற அமைப்புக்கள் சமூக நிறுவனங்களாக உள்ளன. அளவில் சிறியதாகவோ, பெரியதாகவோ எல்லாச் சமூகங்களிலும் இந்நிறுவனங்கள் உள்ளன. சில நிறுவனங்கள் அரசுக்குச் சொந்தமானவையாக, பொதுவாகஇயங்க, சில நிறுவனங்கள் குறிப்பிட்ட அங்கத்தவர்களின் நலன் சார்ந்து இயங்குபவையாகவும் உள்ளன. எவ்வாறாயினும் அவைதமது அங்கத்தவர்களைச் சுயமாகச் சிந்தித்துச் செயற்பட அனுமதிக்கின்றனவா என்பது சந்தேகமே. இதன்காரணமாக, தனி மனிதர்கள் தமது சுயசிந்தனை இழந்து,  சுயசெயற்பாடிழந்து உள்ளதை உள்ளவாறு அறியாமல் நிறுவனங்களுக்குத் தலைமை தாங்குகின்ற ஆதிக்கச் சக்திகளின் சிந்தனைத்திணிப்புக்களையே, செயல் திணிப்புக்களையே தமதென்று மயங்கி நின்று ஏற்றுசெயற்படுகின்ற போக்கு பின்தங்கிய சமூகங்களிலே இயல்பாகக் காணக் கூடியதாகவுள்ளது.

இதில் இன்னும் ஒரு வேடிக்கையான விடயம் என்னவென்றால், தலைமை தாங்குபவர்களிலும் ஒரு சாரார் சிந்தனை தெளிவற்றவர்களாக, தமக்கு முன்பு வழிநடத்தியவர்களின் கருத்துக்களைத் தமது சொந்தக் கருத்துக்கள் போல் அவர்களையறியாமலேயே ஏற்றுக் கொண்டு அப்படியே தொடர்கின்றவர்களாக உள்ளனர். இன்னுஞ் சிலர் அதுவே ஆள்வதற்கு, அடக்கி வைப்பதற்கு சிறந்த கருவி என்பதை அறிந்துகொண்டு, தம் சிந்தனை தெளிவாக இருந்தாலும் தமக்குக் கீழ் உள்ளவர்களை உரியவாறு சிந்திக்க வழிப்படுத்தாது தடுத்து விடுகின்றனர். தாங்கள் நடித்து, தங்களை நம்பியவர்களின் அறிவை மழுங்கடித்துக் கொண்டிருக்கின்றனர்.

தொண்டர்கள் சுயமாகச் சிந்திக்கக் கூடியவர்களாக ஆகிவிட்டால் தலைவர்களுக்கு மரியாதை இருக்காது. எந்தத் தலைவனுக்கும் எதிர்த்துக் கேள்வி கேட்கும் தொண்டனைப் பிடிப்பதில்லை. எந்த மேலதிகாரிக்கும் தன்னை விடப்புத்திசாலியான ஊழியன் மேல் வெறுப்புவரும். தலைவர்களின் ஏகோபித்த விருப்பம் என்னவெனில், இட்டகட்டளைக்குக் கீழ்ப்படிகின்ற, நன்கு உழைப்பைத் தரக்கூடிய, தன்னைப் புகழ்கின்ற, தக்க தருணத்தில் தனக்காக உயிரையே விடக்கூடிய ஒப்பற்ற ஊழியக்காரர் வேண்டும். ஆனால்சுயமாகச்சிந்திக்கக்கூடாது.

இத்தகைய ஊழியக்காரர்கள் கிடைத்துவிட்ட தலைவரை யாராலும் அசைக்க முடியாது. தலைவர்கள், ஊழியக்காரர்களால் தமக்குச் சேர்ந்த பெருஞ் செல்வத்தைக் கிள்ளிக் கிள்ளிக் கொடுப்பார்கள். ஊழியக்காரர்களோ, அள்ளியள்ளித் தருகின்ற வள்ளல் என தலைவரை வானுயரப் போற்றுவார்கள். அவ்வப்போது கூட்டங்கூடி இதுவரை ஒரு சந்தர்ப்பத்திலேனும் சுயபுத்தியைப் பயன்படுத்தாதிருந்தமையைப் பாராட்டி, அதி சிறந்த ஊழியக்காரர்களுக்கு சான்றிதழ்களும் விருதுகளும் தரப்படும். புளகாங்கிதமடைந்து போன விருதுபெற்ற ஊழியக்காரன் அடுத்த சந்ததியையும் அடகுவைத்து மகிழ்வான். இத்தகைய பொய்யுறவுக்கு சுயசிந்தனையும் விழிப்புணர்வும் கொண்ட பகுத்தறிவுச் செயற்பாடு துளியும் தேவைப்படாது.

சுயசிந்தனை ஏற்பட்டுவிட்டால் புத்தி கேள்வி கேட்கத் தொடங்கிவிடும். விடை காண்பதற்காகத் தேடல் தொடங்கிவிடும். தேடல் தொடங்கிவிட்டால் தெளிவு பிறந்துவிடும். தெளிவு விழிப்புணர்வைத்தரும். விழிப்புணர்வு ஏற்பட்டுவிட்டால் ஏமாற்றவும் முடியாது, ஏமாறவும் முடியாது. இத்தகுவிழிப்புணர்வு நிலையை சாதாரண மக்கள் கூட்டம் எட்டிவிடக் கூடாதென்பதற்காக எத்தனை மாயாஜாலங்களைத் தலைமைகள் நிகழ்த்தியிருக்கின்றன, நிகழ்த்திக் கொண்டுமிருக்கின்றன.

”ஏற்கனவே எல்லாமே நிருணயிக்கப்பட்டுவிட்டன. விதியின்படி தான் அனைத்தும் நடந்தேறுகிறது” என வினா எழாதபடிக்கு விளக்கந் தருகிறது ஒரு அன்பர் கூட்டம். இந்த விளக்கமே தம் வருவாயை இழக்கச் செய்யும் போது ”எல்லாவற்றுக்கும் பரிகாரம் (பிராயச்சித்தம்) செய்துகொள்ளலாம்” என்கிறது. அதாவது, விதியை வெல்லலாம் என்கிறது. தலைமைக்கு எதிராகக் கேள்வியே கேட்கக் கூடாது என்கிறது இன்னொரு அன்பர் கூட்டம். கேட்டால் “நிந்தனை“ என்கிறது.

கேள்வி கேட்பது தீயசக்திகளின் இயல்பு என்கிறது. மீறிக் கேட்பதும் கட்டளைகளுக்குக் கீழ்ப்படியாமல் இருப்பதும் பெருந்தீங்கினைத் தரும். ஏற்கனவே பெருஞ் சக்திச் செலவில் பல்வேறு நுட்பமுறைகளைக் கையாண்டு மேலுலகத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் “வதை கூடத்திற்குச் செல்ல வேண்டியிருக்கும்“ எனப் பயமுறுத்துகிறது. இன்னுமொரு உப அன்பர் கூட்டம் சொல்கிறது ”நீ என்ன தான் நல்லவனாக இருந்தாலும் நல்ல சிந்தனை, செயற்பாடு இருந்தாலும் தலைவரை ஏற்றுக்கொள்ளாதவரை மீட்சியில்லை” என்று.

”எங்கள் தலைவரைத் தவிரவேறுயாரும் தலைவரில்லை, இருக்கவும்முடியாது“ என்கிறது இன்னொரு அன்பர் கூட்டம். ஆக, இவ்விடயத்தில் எல்லா அன்பர் கூட்டத்தினருமே தங்கள் தலைவர்தான் உண்மைத் தலைவர் என்பதிலும் தலைவரின் பேச்சுக்கு மறுபேச்சுப் பேசக்கூடாது என்பதிலும் கருத்தொற்றுமையோடு உள்ளதோடு, ஊழியக்காரர்கள் சரியாக நடந்துகொள்கிறார்களா என்பதைக் கண்காணிக்கும் உன்னத உளவுப் பணிச்சேவையிலும் ஈடுபட்டு, அந்தப் பணிச்சுமையில், தலைவரின் கூற்றுக்களைத் தாங்கள் கோட்டை விட்டதை அறியாதவர்களாக இருக்கிறார்கள்.

மனிதகுலத்தைக்காக்க, தகாத செயல்களை நிறுத்தி நல்வழியில் சமூகத்தை வழிநடத்துவதற்காக சில ஆயிரம் வருடங்களுக்கு முன்தலைவர்கள் எனத் தோன்றியவர்களால் சொல்லப்பட்ட, செய்யப்பட்ட கருத்துக்களையும் செயல்களையும் காலத்தையும் மறந்து, நடைமுறைச்சாத்தியத்தையும் மறந்து பரப்புரை செய்கிறார்கள் நம்எஜமானர்கள். எஜமானர்களின் அகராதிப்படி, பகுத்தறிவு என்பது நிபந்தனையின்றி தலைவர்களிடம் சரணாகதி அடைவதும் எஜமானர்களால் விளைவிக்கப்படும் எல்லாத் துன்பங்களையும் தாங்கிக் கொண்டு சேவை செய்வதும் நித்தமும் மறந்துவிடாமல் தலைவர் புகழ்பாடுவது மானசிந்தனைக்கும் செயற்பாட்டுக்கும் மட்டும் பயன்படுத்த வேண்டியது எனப் பொருள்விளக்கம் தரப்படுகிறது. இவ்வாறான பகுத்தறிவு மட்டுப்பாட்டின் படிஒழுகுகின்றவர்களுக்குப் பரிசாகதங்கள் தலைவர்களிடம் எடுத்துரைத்து சிருட்டிக்கப் பட்டிருக்கின்ற சொர்க்கத்தையே நித்தியமாகத் தரவைப்போம் என எஜமானர்கள் உறுதி மொழி வழங்குகின்றார்கள்.

இங்கேயே சொர்க்கத்தை அனுபவிப்பவர்களால் நரகத்திற்குள் எப்போதோ தள்ளப்பட்டுவிட்டோம் என்பதைக் கூட அறியாத மக்கள் தொடர்ந்தும் இல்லாத சொர்க்கத்தை அடைந்துவிடலாம் என்ற ஆசையில் அயராது உழைக்கிறார்கள். உழைப்பைச் சுரண்டி ஏகபோகமாக வாழ்பவர்களோ ”ஏழைகளாக இருப்பதே பெரும்பேறு” எனப் போதிக்கிறார்கள்.

போதிப்பவர்கள் அனுபவிக்கின்ற சுகபோகங்களையும் அவர்களுக்கு சமூகத்தில் கிடைக்கின்ற தன்னிகரற்ற சமூக அந்தஸ்த்துக்களையும் மனங்கொண்டு தாங்களும் அத்தகையதொரு நிலைக்கு வர ஆசைப்படுகின்றவர்களுக்கும் குறைவில்லை.

இவ்வாறு வழிவழியாக “நல்ல“ சிந்தனைகளைப் போதிப்பவர்கள் புறத்தடைகளாக இருக்க, மறுபிறப்பு ஐசுவரியங்கள் நிறைந்தனவாக இருக்கவேண்டும், இறப்புக்குப் பின்னும் வாழ்வு தொடரவேண்டும், அதுவும் சொர்க்காபுரியில் இருந்து முடிவில்லாத சுகபோகங்களை அனுபவிக்கும் வகையில் அமைய வேண்டும் எனும் பேராசைகள் அகத்தடைகளாக இருக்க, இந்த அகப்புறத்தடைகளால் பெரும்பாலான அப்பாவி மக்கள் பகுத்தறிவு சார்செயற்பாடுகளை மட்டுமல்ல, தமக்குக் கிடைத்த நிகழ்காலவாழ்க்கையையும் இழந்துவிடுகிறார்கள் என்பதே நிதர்சனமாகும்.

மனித வாழ்க்கை என்பதே பகுத்தறிவுடன் வாழ்வதுதான்.

இணைக்கட்டுரையாளர்கள் : தேவா – சிவா