ஆகவே காயம் செய்!

வி.யோகேஷ்

அடர் இருட்டில்
அடுத்த நகர்வுக்காய் அஞ்சுகையில்
ஒளிக்கோடு வரைந்தோடும்
ஒரு மின்னல்…

வெறும்பாத நடையில்
கல்லடித்து நகமிழந்த விரலுக்கு
ஒற்றடமாகும் ஒரு பிடிமண்…

நெடுந்தொலைவில் இரைதேடும் பறவைக்கு
இளைப்பாற இடம் கொடுக்கும்
ஒற்றை மரக்கிளை…

அழுதோய்ந்து இருக்கையில்
இமைச்சிறகைச் சிறைப்பிடிக்கும்
சிறு துாக்கம்…

பேருந்துப் பயணத்தில்
அறுந்து போன நினைவிழைகளை
மீள ஒட்ட வைக்கும்
ஒரு பாடல்…

காசின்றி விழிக்கையில்
வங்கியின் தன்னியக்க இலத்திறனட்டை
காட்டும் கடைசி நுாறு ரூபாய்க்கருணை…

சர்வ மென்மைகளாலுமான
மனதின் காயங்களுக்கு களிம்பிட
எனக்காகவும் எழலாம் பிரபஞ்சத்தின்
ஏதாவதொரு மூலையிலிருந்து
ஒரு கை!!

ஆக்கம்:வி.யோகேஷ்