திருச்சபைகள் ஒன்றிணைதலின் தேவை

கிறிஸ்தவ திருச்சபைகள் ஒன்றிணைந்து செயலாற்றுவது
காலத்தின் கட்டாயத் தேவை
                                      – அருட்திரு.தமிழ் நேசன் அடிகளார்

கிறிஸ்துவைப் பின்பற்றுவதாகச் சொல்லிக்கொள்ளும் கிறிஸ்தவ திருச்சபைகள் பிரிந்துநின்று செயலாற்றுவது “அனைவரும் ஒன்றாய் இருப்பார்களாக” என்று ஒற்றுமைக்காகச் செபித்த கிறிஸ்துவின் மனநிலைக்கு முரணானது; கிறிஸ்துவைப்பற்றிய நற்செய்தியை இந்த உலகத்திற்கு அறிவிப்பதற்கு இந்தப் பிளவுபட்டநிலை தடைக்கல்லாக உள்ளது. எனவே கிறிஸ்தவ திருச்சபைகள் ஒன்றிணைந்து செயலாற்றுவது இன்றைய காலத்தின் கட்டாயத் தேவை.

கிறிஸ்தவ திருச்சபைகளில் 2000 ஆண்டுகால வரலாற்றைக் கொண்டதும், ஆரம்பத் திருச்சபையாக விளங்குவதும் கத்தோலிக்க திருச்சபையாகும். 16ஆம் நூற்றாண்டிற்குப் பின்னர் வரலாற்றின் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு காரணங்களுக்காக பிரிந்துசென்ற திருச்சபைகளில் முக்கிய சபைகள் ‘பிரதான திருச்சபைகள்’ (Main Line Churches) என அழைக்கப்படுகின்றன. லூத்தரன் திருச்சபை, அங்கிலக்கன் திருச்சபை, மெதடிஸ்த திருச்சபை, பப்ரிஸ்த் திருச்சபை, புரட்டஸ்தாந்து திருச்சபை, தென்னிந்தியத் திருச்சபை, அமெரிக்கன் மிசன் போன்றவையே பிரதான திருச்சபைகள் என அழைக்கப்படுகின்றன. இந்தப் பிரதான சபைகள் தமக்கிடையிலும், ஆரம்பத் திருச்சபையாக விளங்கும் கத்தோலிக்க திருச்சபையோடும் புரிந்துணர்வை, ஒன்றிப்பை, உரையாடலை கட்டியெழுப்பி வருகின்றன. இதைவிட பெந்தகோஸ்து திருச்சபைகள் அல்லது கிறிஸ்தவப் பிரிவுகள் (Christian Sects) என்ற பெயரினாலே அழைக்கப்படும் சிறிய சபைகள் உலகெங்ககும் நாற்பதினாயிரத்திற்கும் அதிகமாக உள்ளதாகச் சொல்லப்படுகின்றது. இந்த சபைகளோடு இதுவரை ஒன்றிப்புக்கான முயற்சிகள் எடுக்கப்படவில்லை.

1948ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ‘உலகத் திருச்சபைகள் மன்றம்’ (World Council of Churches – WCC) பிரதான கிறிஸ்தவ திருச்சபைகளுக்கிடையில் ஒன்றிப்பை, புரிந்துணர்வை ஏற்படுத்தும் நோக்கோடு ஆரம்பிக்கப்பட்டதாகும். கத்தோலிக்க திருச்சபையால் 1962இல் கூட்டப்பட்ட இரண்டாம் வத்திக்கான் சங்கம் கிறிஸ்தவ ஒன்றிப்பு முயற்சி பற்றியும் காத்திரமான கருத்துக்களை முன்வைத்தது. அத்திருச்சங்கத்தைக் கூட்டிய அன்றைய திருத்தந்தை 23ஆம் அருளப்பர் ‘கிறிஸ்தவ ஒன்றிப்பின் திருத்தந்தை’ என்று அழைக்கப்படுகின்றார். கத்தோலிக்க திருச்சபைக்கும் ஏனைய கிறிஸ்தவ திருச்சபைகளுக்கிடையிலும் ஒன்றிப்பை ஏற்படுத்த இவர் அதீத முயற்சிகளை மேற்கொண்டார். “எம்மைப் பிரிப்பவற்றைவிட எம்மை ஒன்றாகக் கட்டுவது வலுவானது” என அவர் கூறினார். கிறிஸ்தவ ஒன்றிப்பு முயற்சிகளில் கத்தோலிக்க திருச்சபை மிகுந்த ஆர்வத்தோடும், ஈடுபாட்டோடும் செயலாற்றுகின்றது. ‘தற்காப்புக் கிறிஸ்தவம்’ என்ற நிலையிலிருந்து ‘உரையாடல் திருச்சபை’ என்ற நிலைக்கு அது தன்னை மாற்றிக்கொண்டது. “தாய்த்திருச்சபைக்கு திரும்புதலே கிறிஸ்தவ ஒன்றிப்பு” என்று இருந்த கத்தோலிக்க திருச்சபையின் மனப்போக்கு மாற்றமடைந்து “முழுமையான, வெளிப்படையான திருச்சபையை நோக்கிய மனமாற்றப் பாதையில் அனைவரும் ஒன்றுபட வேண்டும்” என இரண்டாம் வத்திக்கான் சங்கம் அழைப்பு விடுத்தது.

கிறிஸ்துவைப் பின்பற்றுவதாகச் சொல்லிக்கொள்ளும் கிறிஸ்தவ திருச்சபைகள் தமக்கிடையே முரண்பாடுகளை வளர்த்துக்கொள்ளாமல், ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டிக்கொண்டிருக்காமல் ஒற்றுமையாகச் செயலாற்ற வேண்டும். கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியை இந்த உலகத்திற்கு அறிவிப்பதற்கு இந்தப் பிளவுபட்ட நிலை தடைக்கல்லாக உள்ளது. எனவே கிறிஸ்தவ திருச்சபைகள் ஒன்றிணைந்து செயலாற்றுவது இன்றைய காலத்தின் கட்டாயத் தேவை.

இலங்கை மெதடிஸ்த திருச்சபையின் வடக்குக் கிழக்கு திருமாவட்ட அவையின் 50வது பொதுக்கூட்டத்தை முன்னிட்டு கடந்த வெள்ளிக்கிழமை (13.06.2014) மாலை 5.00 மணிக்கு முருங்கன் மெதடிஸ்த ஆலயத்தில் இடம்பெற்ற பண்பாட்டுக் கலைநிகழ்வுகளில் கலந்துகொண்டு கத்தோலிக்க திருச்சபையின் சார்பில் சிறப்புரையாற்றும்போதே தமிழ் நேசன் அடிகளார் இவ்வாறு கூறினார்.