போர் இறுதி நாட்களின் அனுபவங்கள் நூலாக வெளியீடு

யாழ் மறைமாவட்டத்தைச் சேர்ந்த அருட்திரு. அன்ரன் ஸ்டீபன் அடிகளாரின் நூலின் இறுதி நாட்களில் மக்களோடு இருந்து பெற்ற போர்க்கால துன்ப அனுபவங்களை உயிர்ப்பதிவு என்ற பெயரில் நூலாக வெளிக்கொணர்ந்துள்ளார். இந்நூல் வெளியீட்டு விழா கடந்த 16.06.2014 அன்று மாலை 4.00 மணிக்கு யாழ் பிரதான வீதியில் அமைந்துள்ள யாழ் திருமறைக்கலாமன்றத்தின் கலைத்தூது மண்டபத்தில் இடம் பெற்றது.

இந்நிகழ்விற்கு யாழ் குருக்கள் மன்ற தலைவர் அருட்திரு. இ. ஸ்ரலின் அடிகளார் தலைமை தாங்கினார். யாழ் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்திரு. யஸ்ரின் ஞானப்பிரகாசம் அடிகளார் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார். இந்நிகழ்வில் போர் இலக்கியங்கள் தொடர்பான சிறப்புரையை மன்னார் மறைமாவட்ட சமூகத்தொடர்பு அருட்பணி மைய இயக்குனரும், மன்னார் தமிழ்ச் சங்கத் தலைவரும், மன்னாப்பத்திரிகையின் ஆசிரியருமான அருட்பணி. தமிழ் நேசன் அடிகளார் வழங்கினார்.

யாழ் மறைமாவட்ட மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் அருட்திரு. மங்களராஜா அடிகளார் ஆசியுரை வழங்கினார். இந்நூலுக்கான நயப்புரையை அருட்திரு. இ. ரவிச்சந்திரன் அடிகளார் வழங்கினார்.

இந்நிகழ்வில் சிறப்புரையாற்றிய அருட்பணி. தமிழ் நேசன் அடிகளார் “ஈழத்து போர் இலக்கியங்களின் வரிசையில் உயிர்ப்பதிவுகள்” என்ற இந்த நூல் இடம்பெறும் என்றும் போரின் இறுதிநாட்களின் கண்கண்ட சாட்சியான நூலாசிரியரின் அனுபவப்பதிவுகள் உலகத்தின் மனச்சாட்சியை தட்டியெழுப்பும் என்றும் உண்மைக்கு சாட்சிபகர வந்த இயேசுவின் பணியாளன் என்ற வகையில் அருட்திரு. ஸ்ரிபன் அடிகளாரும் இந்நூலின் பதிவுகள் ஊடாக உண்மைக்கு சாட்சியம் பகர்ந்துள்ளார் என்றும் குறிப்பிட்டார்.