போர் இலக்கியம்’ என்ற தனியான பகுப்பை உருவாக்கிய பெருமை ஈழத்தமிழ்ப் படைப்பாளிகளையே சாரும்

நவீன தமிழ் இலக்கியத்தில் ‘போர் இலக்கியம்’ என்ற தனியான பகுப்பை உருவாக்கிய பெருமை ஈழத்தமிழ்ப் படைப்பாளிகளையே சாரும்

– தமிழ் நேசன் அடிகளார்

உலக இலக்கியங்களில் ‘போர் இலக்கியம்’ என்பது தனியான ஓர் இலக்கிய வகையாகும். நவீன தமிழ் இலக்கியத்தில் போர் இலக்கியம்’ என்ற தனியான பகுப்பை உருவாக்கிய பெருமை ஈழத்தமிழ்ப் படைப்பாளிகளையே சாரும். உலகப் போர் இலக்கிய வரிசையில் ஈழத்துப் போர் இலக்கியங்களுக்கும் நிச்சயம் ஓர் இடம் உண்டு.

யாழ் மறைமாவட்டத்தைச் சேர்ந்த அருட்திரு. அன்ரன் ஸ்ரீபன் அடிகளாரின் ‘உயிர்ப்பதிவு’ என்ற நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு ‘போர் இலக்கியங்கள்’ தொடர்பான சிறப்புரையை ஆற்றும்போதே தமிழ் நேசன் அடிகளார் இவ்வாறு குறிப்பிட்டார்.

போரின் இறுதி நாட்களில் மக்களோடு இருந்து பெற்ற போர்க்கால துன்ப அனுபவங்களை ‘உயிர்ப்பதிவு’ என்ற பெயரில் அன்ரன் ஸ்ரீபன் அடிகளார் நூலாக வெளிக்கொணர்ந்துள்ளார். இந்நூல் வெளியீட்டு விழா கடந்த 16.06.2014 அன்று மாலை 4.00 மணிக்கு யாழ் பிரதான வீதியில் அமைந்துள்ள யாழ் திருமறைக்கலாமன்றத்தின் கலைத்தூது மண்டபத்தில் இடம் பெற்றது.

இந்நிகழ்வில் சிறப்புரையாற்றிய மன்னார் மறைமாவட்டச் சமூகத்தொடர்பு அருட்பணி மையமான ‘கலையருவி’ இயக்குனரும், மன்னா பத்திரீகை ஆசிரீயரும், மன்னார் தமிழ்ச் சங்கத் தலைவருமான அருட்திரு. தமிழ் நேசன் அடிகளார் தொடர்ந்து கூறியதாவது:

உலக வரலாற்றில் எங்கெல்லாம் போர்கள் நடைபெற்றனவோ அங்கெல்லாம் உன்னதமான போர் இலக்கியங்கள் தோன்றியுள்ளன. உலக யுத்தங்களின் விளைவுகள் மட்டுமன்றி அதன்பின்னர் உலகெங்கிலும் நடைபெற்ற பல புரட்சிகளின்போதெல்லாம் சிறந்த போர் இலக்கியங்கள் மலர்ந்துள்ளன. பிரான்ஸ், ஜேர்மனி, இரஷ்ய இலக்கியங்களில் போர் இலக்கியங்களே பிரசித்திபெற்றவையாக விளங்குகின்றன. இந்தப் போர் இலக்கியங்கள் எவற்றைப் பற்றிப் பேசுகின்றன? உரிமையும் உரிமை மறுப்பும், ஆயுதமும் ஆயுத எதிர்ப்பும், சமாதானமும் சமாதான மீறலும் பற்றி இந்தப் போர் இலக்கியங்கள் பேசுகின்றன. அதுமட்டுமன்றி, காட்டிக்கொடுத்தல், பொருளாதாரத் தடை, பழிவாங்கல், பண்பாட்டு அழிப்பு போன்ற விடயங்கள் பற்றியெல்லாம் இந்தப் போர் இலக்கியங்கள் பேசுகின்றன. ஒரு நாட்டுக்குள் இன, மத, ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்கள் தமது உரீமைகளுக்காகக் கிளர்ந்தெழுந்து போராடிய உள்நாட்டுப் போர்களிலிருந்தும் பல உன்னதமான இலக்கியங்கள் தோன்றின. ஐரீஷ், பலஸ்தீன இலக்கியங்கள் இதற்கு நல்ல சான்றாக விளங்குகின்றன.

தமிழில் போர் இலக்கிய மரபின் ஆரம்பமாகச் சங்ககாலத்தில் எழுந்த புறத்திணை நூல்களைக் கொள்ளலாம். புறநானூற்றிலிருந்து பதிற்றுப்பத்து வரையிலான புறத்திணை நூல்கள் போரை மட்டுமன்றி அதற்கான மன்னராட்சி அரசியலையும் முன்னிறுத்தின. காவியங்களின் பெரும் பகுதியான காண்டம்கூட ‘யுத்த காண்டம்’ என்னும் பெயரைக்கொண்டு விளங்கியது. சிற்றிலக்கியங்கள் என இன்று அறியப்படுகின்ற ‘பிரபந்த மரபிலும் இந்த நிலையைக் காணமுடிகிறது. குறிப்பாகப் ‘பரணி’ முதலிய சிற்றிலக்கியங்களின் ஆரம்பம் என்பது போர், வெற்றி அரசியல் போன்றவற்றைச் சார்ந்ததாக இருந்தது.

நவீன தமிழிலக்கியத்திலே போர்க்கால இலக்கியங்களின் ஆரம்பம் பாரதியின் வருகையோடு ஆரம்பிக்கின்றது. இந்திய சுதந்திரப்போராட்டத்தின் தாக்கம் தமிழ் இலக்கியத்திலும் பிரதிபலிக்கின்றது. நவீன தமிழ் இலக்கியத்தில் ‘போர் இலக்கியம்’ என்றவொரு தனியான பகுப்பை உருவாக்கிய பெருமை ஈழத்தமிழ்ப் படைப்பாளிகளையே சாரும். இவ்விலக்கியம் உலகெங்கிலும் தோன்றிய போர் இலக்கியங்களுக்கு இணையானதாக மதிக்கப்படுகின்றது. ஈழத்தமிழ் போர் இலக்கியம் பற்றி ஆங்கில மொழியில் நடைபெற்றுள்ள ஆய்வுகள் இதனை மெய்ப்பிக்கின்றன.

1985ஆம் ஆண்டு வெளிவந்த “மரணத்துள் வாழ்வோம்’ என்ற கவிதைத் தொகுப்பு போரைப் பதிவுசெய்த முதலாவது இலக்கியத் தொகுப்பாகும். இதனைத் தொடர்ந்து போரையும் போரின் வலிகளையும் பிரதிபலிக்கும் பல கவிதைத் தொகுதிகளும் சிறுகதைத்தொகுதிகளும் நாவல்களும் நாடகங்களும் வெளிவந்துள்ளன.

‘உயிர்ப்பதிவு’ என்ற இந்த நூலையும் ஓர் போர் இலக்கியமாகவே நோக்கவேண்டும். போரின் இறுதிநாட்களின் கண்கண்ட சாட்சியான இந்நூலாசிரியரின் அனுபவப்பதிவுகள் உலகத்தின் மனச்சாட்சியை நிச்சயம் தட்டியெழுப்பும். உண்மைக்குச் சாட்சிபகர வந்த இயேசுவின் பணியாளன் என்ற வகையில் அருட்திரு. ஸ்ரீபன் அடிகளாரும் இந்நூலின் பதிவுகள் ஊடாக உண்மைக்கு சாட்சியம் பகர்ந்துள்ளார்.

இந்நிகழ்விற்கு யாழ் குருக்கள் மன்றத் தலைவர் அருட்திரு. இ. ஸ்ரலின் அடிகளார் தலைமை தாங்கினார். யாழ் மறைமாவட்டக் குருமுதல்வர் அருட்திரு. யஸ்ரீன் ஞானப்பிரகாசம் அடிகளார் பிரதம விருந்தினராக கலந்துகொண்டார். யாழ் மறைமாவட்ட மனித உரீமைகள் ஆணைக்குழுவின் தலைவர் அருட்திரு. மங்களராஜா அடிகளார் ஆசியுரை வழங்கினார். இந்நூலுக்கான நயப்புரையை அருட்திரு. இரவிச்சந்திரன் அடிகளார் வழங்கினார்.