நேரமுகாமைத்துவமும் பொறுப்புணர்வும்

நேரமுகாமைத்துவமும் பொறுப்புணர்வும்
                             – அருட்திரு தமிழ் நேசன்

“எனக்கு நேரமில்லை!” அல்லது “எனக்கு நேரம் போதாது!” என்பதுதான் பலருடைய வாயிலிருந்துவரும் வழமையான ‘பல்லவி’. மற்றவர் நம்மைவிடப் புத்திசாலியாக இருக்கலாம், நம்மைவிட அழகுள்ளவராக இருக்கலாம், நம்மைவிட சிறந்த விளையாட்டு வீரராக இருக்கலாம், நம்மைவிடப் பணக்காரராக இருக்கலாம். ஆனால் யாரிடமும் நம்மிடம் உள்ள நேரத்தைவிட அதிகமான நேரம் இருக்கமுடியாது; குறைவான நேரமும் இருக்க முடியாது. நம் எல்லோருக்கும் ஒரு வாரத்திற்கு 168 மணித்தியாலங்கள் சமனாகத் தரப்பட்டிருக்கிறது. அது ஏழு 24 மணித்தியாலங்களாகப் பிரித்துத் தரப்பட்டிருக்கிறது.

இறைவன் நமக்குப் பொருள், பண்டம், சொத்து சுகம் என்று பலவற்றைத் தராமல் இருக்கலாம்; அல்லது குறைவாகத் தந்திருக்கலாம். ஆனால் இந்த உலகத்தில் பிறந்த நம் எல்லோருக்கும் இறைவன் சமமாகத் தந்திருக்கும் ஒரு கொடை உண்டென்றால் அதுதான் நேரம் என்னும் அருங்கொடை!

வாழ்க்கை நேரத்தினால் உருவாக்கப்பட்டிருக்கிறது

18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பெஞ்சமின் பிராங்கிளின் கூறுகிறார், “நீ வாழ்க்கையை நேசிக்கிறாயா? அப்படியானால் நேரத்தை வீணாக்காதே. ஏனெனில் வாழ்க்கை நேரத்தினால் உருவாக்கப்பட்டிருக்கிறது”. நேரத்தைச் சரியான முறையில் பயன்படுத்தி வாழ்வில் முன்னேற்றம் கண்ட முன்னோடிகள் பலர். நேரத்தைச் சிறிதும் வீணாக்காமல் பொறுப்புணர்வோடு, திறமையோடு பயன்படுத்தியவர்களே பல சாதனைகளைப் புரிந்திருக்கிறார்கள். இவர்களைத்தான் வரலாறு இன்றுவரை நினைவுகூர்கிறது. நேரத்தை யார் யாரெல்லாம் சரியாகப் பயன்படுத்தினார்களோ அவர்களே சாதனையாளர்களாக, அறிஞர்களாக, விஞ்ஞானிகளாக, நாட்டை ஆளும் தலைவர்களாக உருவாகியிருக்கிறார்கள். “உனக்கு நேரத்தின் மதிப்புத் தெரியுமானால் வாழ்வின் மதிப்பும் தெரியும்” என்கிறார் ஒரு அறிஞர்.

நேரம்! பணத்தைவிட மதிப்புள்ளது!

நமது நேரம் பணத்தைவிட அதிக மதிப்புள்ளது. நாம் பணத்தைச் சம்பாதிக்க முடியும். ஆனால் நேரத்தை உருவாக்க முடியாது. “ஒரு அங்குலம் தங்கம், ஒரு அங்குல நேரத்தை வாங்க முடியாது.” எனச் சீனப் பழமொழி ஒன்று கூறுகிறது.

“நீங்கள் காலையில் எழுந்தவுடன்; உங்கள் பேர்சைத் திறந்து பார்த்தால் அதில் 24 மணி நேரம் நிரப்பப்பட்டிருக்கும். உங்கள் உடமைகளில் அது அதிக மதிப்பை உடையது. இயற்கை அதனை ஒரு தனிப் பொருளாக உங்கள்மீது பொழிந்துள்ளது. அதனை உங்களிடமிருந்து யாரும் எடுத்துக்கொள்ள முடியாது. அது திருட முடியாதது. மற்ற அனைவரும் நீங்கள் பெற்றுள்ள அளவைத்தான் பெற்றுள்ளனர்.”

நாம் ஒரு நாளின் 24 மணி நேரத்தில் வாழ்ந்தாக வேண்டும். அந்த நேரத்திற்குள்தான் நமது ஆரோக்கியத்தைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். இன்பமாக வாழவேண்டும். பணம் சம்பாதிக்க வேண்டும். மனத்திருப்தி அடைய வேண்டும். மதிப்புப் பெறவேண்டும். அழிவில்லாத ஆன்மாவை வளர்க்க வேண்டும்.

“ஒரு நாளைத் தடுத்து நிறுத்த முடியாது. ஆனால் அந்த நாளை இழக்காமல் இருக்க முடியும்.” என்பார்கள். நேரத்தின் பெறுமதியை அறிந்த பெரியோர்கள் ‘நேரம் பொன் போன்றது’ எனக் கூறியுள்ளனர். ஆனால் “நேரம் உயிர் போன்றது” எனக்கூறுவதே பொருத்தமாகும.; ஏனெனில் பொன்னை இழந்தால் நாம் பெற்றுக்கொள்ளலாம். ஆனால் உயிரை இழந்தால் திரும்பப் பெறமுடியுமா? ஆகவே “நேரம் உயிர் போன்றது” எனக் கூறுவதே பொருத்தமாக இருக்கும். கிடைக்கும் பணத்தில் எப்படி வாழ்வது என்பதைவிட கிடைக்கும் நேரத்தில் எப்படி வாழ்கிறோம் என்பது முக்கியம்.

செய்ய வேண்டியவைகளைப் பின்போடுதல்!

இன்றைய பணியை ‘நாளைக்கு’ என ஒத்திவைப்பதால் நமது பணிச்சுமையை அதிகரித்துக்கொள்கிறோம். செய்யவேண்டியவைகளைப் பின்போடுதல் அல்லது காலத்தை ஒத்திப்போடுதல் என்பது சென்ற வாரத்தின் பணிகளை இன்று செய்ய முயற்சிக்கின்றோம் என்று பொருள்கொள்ளலாம்.

“காலதாமதம்தான் நேரத்திருடன்” என்று ஒரு பழமொழி கூறுகிறது. காலதாமதத்தை (பின்போடுவதை) நமது வாழ்விலிருந்து அகற்றிவிட்டால் நாம் சிறந்த நேரநிர்வாகி ஆகிவிட முடியும். காலதாமதம் நம்மைக் களவாட நாம் அனுமதிக்கக்கூடாது. “இன்று ஒரு நாள் என்பது இரண்டு நாளைகளுக்குச் சமன்” என்ற பிராங்கிளின் வார்த்தைகளை நாம் அடிக்கடி நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும். “இன்றே உங்களால் செய்யமுடிந்ததை ஒருபோதும் நாளைவரை தள்ளிப்போடாதீர்கள்” என்றும் அவர் கூறுகிறார்.

ஜேம்ஸ் அல்பா (1838 – 1889) என்பவனைப்பற்றி யாரும் அறிந்திருக்க முடியாது. அவன் வாழ்வில் எதையும் சாதிக்கவில்லை. தன்னைப் பற்றியும் எழுதிவைக்கவில்லை. ஆனால் இந்தக் ‘காலதாமத மன்னனைப்’ பற்றி அறிந்த யாரோ ஒருவர் அவனைப்பற்றி கீழ்க்கண்டவாறு எழுதினார்.
“அவன் நிலவின்கீழ் நன்றாகத் தூங்கினான். அவன் சூரியனின்கீழ் படுத்துக்கிடந்தான். அவன் ‘செய்து விடுவோம்’ என்று வாழ்வை வாழ்ந்தான். ஆனால் எதையும் செய்யாமல் இறந்தான்”.

“இது இப்படி இருந்திருக்கலாம்”, “நான் இதைச் செய்திருக்க வேண்டும்”, “நான் இதைச் செய்திருக்க முடியும்”, “இதை மட்டும் நான் செய்திருந்தால்”, “நான் மட்டும் இன்னும் கொஞ்சம் அதிக முயற்சி எடுத்திருந்தால்”, “என்றாவது ஒருநாள் நான் இதைச் செய்வேன்” போன்ற வார்த்தைகள் வருந்தத்தக்க வார்த்தைகளாகும். இவை “காலம் கடந்த ஞானம்” ஆகும். பலர் இப்படியே சொல்லிச் சொல்லியே தமது வாழ்க்கையை முடித்துக்கொண்டு எதையும் சாதிக்காமல் ‘போய்’ விடுகிறார்கள்.

காலதாமதம் ஒரு பொறுப்பற்ற செயல்!

சிலர் எப்போதும் காலதாமதமாகவே வருவார்கள். நேரத்தைப் பற்றிய எந்த அக்கறையும் அவர்களுக்கு இராது. காலதாமதமாக வருவதையிட்டு அவர்களுக்கு கொஞ்சம்கூட வருத்தம் இருக்காது. ஏன் காலம்தாமதித்து வருவது அவர்களுக்கு ஒரு பழக்கதோஷமாகவே மாறிவிடுகின்றது.
நேர நிர்வாகம் பிறருடன் தொடர்புடையது. ஏனெனில் நாம் தனித்து இயங்குவதில்லை. பிறரைக் காத்திருக்கும் சூழலுக்கு ஆளாக்கும்போது நாம் நமது நேரத்தை மட்டுமல்லாமல் பிறருடைய நேரத்தையும் வீணாக்குகிறோம் என்பதை பல சமயங்களில் உணர்வதில்லை. உதாரணமாக, 50 நபர்கள் கூடியுள்ள ஒரு கூட்டத்திற்கு 5 நிமிடம் நாம் காலதாமதமாகச் சென்றால் நம்முடைய 5 நிமிடத்தை மட்டுமன்றி கூடியுள்ள 50 நபர்களின் (50 x 5 = 250 நிமிடங்கள்) நேரத்தையும் வீணாக்குகிறோம் என்ற உணர்வு நம்மில் எழவேண்டும்.

“மூன்று மணி நேரம் முன்பு சென்றாலும் செல்லலாம். ஆனால் ஒரு நிமிடம்கூட தாமதமாக்கக் கூடாது” என்கிறார் நெல்சன். நேரம் தவறுதல் பண்பில் குறைந்ததாகும் என்பது பல நல்ல தலைவர்களின் கூற்று.

வந்தவர்களைக் காக்கவைக்கும் நிலை!

உரிய நேரத்திற்கு வந்தவர்களைக் காக்கவைத்துவிட்டு, வராதவர்களை – காலம் தாழ்த்தி வருபவர்களை எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்ற நிலைமை பல இடங்களில் உள்ளது. நேரத்தை மதித்து, உரிய நேரத்திற்கு செல்லவேண்டும் என்று ‘அடித்துப் பிடித்துக்கொண்டு’ உரிய நேரத்திற்கு வந்தவர்களைப்பற்றி, அவர்களின் ‘நேரம் தவறாமை’யைப்பற்றி விழா ஏற்பாட்டாளர்கள் கண்டுகொள்வதில்லை. உரிய நேரத்திற்கு வராமல் – நேரத்தைப் பற்றிய எந்த சிரத்தையும் இன்றி ஏனோதானோ என்று, ஆற அமர வந்துகொண்டிருக்கும் சிலருக்காக விழா ஏற்பாட்டாளர்கள் காத்துக்கொண்டிருப்பார்கள். இது நியாயமா?

வராதவர்களை மதித்து, அவர்கள் வரும்வரை 10 நிமிடங்கள், 20 நிமிடங்கள், 30 நிமிடங்கள் சிலவேளை 45 நிமிடங்கள், ஒரு மணித்தியாலம்கூட காத்திருக்கின்ற நிலமைகள் உள்ளது. வராதவர்களை மதித்து வரட்டும் என்று காத்திருப்பது சரி. சரியான நேரத்திற்கு வந்தவர்களைக் காக்க வைப்பது எந்த வகையில் நியாயமாகும்? குறிக்கப்பட்ட உரிய நேரத்திற்கு வருகைதருவது அழைக்கப்பட்டவர்களின் பொறுப்பு. குறிக்கப்பட்ட, உரிய நேரத்திற்கு நிகழ்ச்சியைத் தொடங்குவது அந்நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் பொறுப்பு. ஆக நேரம் பற்றிய பொறுப்புணர்வு அனைவருக்கும் இருக்கவேண்டும்.

முடிவின்றித் தொடரும் கூட்டங்கள்!

அனேகமான கூட்டங்களில் தேவையற்ற பேச்சுக்களே மிகுந்திருக்கும். குறிப்பிட்ட கூட்டம் எதற்காகக் கூட்டப்பட்டதென்பதை மறந்துவிட்டு சம்மந்தமில்லாமல் எதையெதையோ பேசிக்கொண்டு (அலம்பிக்கொண்டு) இருப்பார்கள். கூட்டம் என்ற சொல்லுக்கு பின்வருமாறு விளக்கம் அளிக்கப்படுகின்றது.
“முன்னேற்பாட்டின்படி ஒரு குறிப்பிட்ட இடத்தில் நிருணயிக்கப்பட்ட காலநேரத்தில் சிலர்கலந்துகொண்டு செய்திப் பரிமாற்றமோ அல்லது செயல் தீர்மானமான முடிவோ செய்வதற்கெனக் கூடுவது.” கூட்டத்திற்கு தலைமைப் பொறுப்பு ஏற்று நடத்துபவர் ஒரு நடுநிலையாளராகவும், தலைவராகவும் பணியாற்ற வேண்டும். கூட்டத்தை குறித்த நேரத்தில் ஆரம்பித்து நிருணயித்த காலத்தில் முடிக்க வேண்டும். நிகழ்ச்சி நிரலில் இடம்பெறாத தேவையற்ற பேச்சுக்களைக் கட்டுப்படுத்தி, கூட்டத்தை சுமுகமான முறையில் நடத்தவேண்டும். நேரம் பற்றிய பொறுப்புணர்வு தலைவருக்கும் இருக்க வேண்டும்; பங்கேற்பாளர்களுக்கும் இருக்க வேண்டும்.

பேசத்தொடங்கினால் முடிக்கமாட்டார்கள்!

சிலர்மேடையில் பேசத் தொடங்கினால், “அட இவரா….? இவர் துவங்கினா இண்டைக்கு முடிக்க மாட்டாரே… !” என்ற முணுமுணுப்புக்கள் சபையிலிருந்து கேட்கும். ஒலி வாங்கியைக் கையில் பிடித்தால் சிலருக்கு நேரம் போவதைப்பற்றி கொஞ்சம்கூட யோசிக்க மாட்டார்கள். நேரத்தைப் பற்றிய எந்தப் பொறுப்புணர்வும் இன்றி பேசிக்கொண்டே போவார்கள். தன்னுடைய பேச்சை சபையோர் இரசித்துக் கேட்கிறார்களா இல்லையா என்பதுபற்றியெல்லாம் இவர்களுக்கு அக்கறையே இல்லை. “அதிக நேரம் பேசுகிறீர்கள். பேச்சை நிறுத்துங்கள்” என்ற அர்த்தத்தில் சபையோர் கைதட்டினால். “எனது பேச்சைப் பாராட்டி கைதட்டுகிறார்கள்” என பேசுகிறவர் நினைத்து தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிற ‘கண்ணுறாவி’ காட்சிகளை நாம் பல இடங்களில் காண்கிறோம்.

“தயவுசெய்து நிறுத்தவும்”, “உங்களுக்கான நேரம் முடிவடைந்துவிட்டது”, “உங்கள் உரையை சுருக்கமாக்கி முடிவுக்குக் கொண்டுவரவும்” என்று விழா ஏற்பாட்டாளார்கள் துண்டு எழுதிக்கொடுக்கவேண்டிய ‘தர்மசங்கடமான’ நிலைமைக்கு ஆளாகின்றார்கள்.

அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சுதான். எவ்வளவு சிறப்பான பேச்சாளராக இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் பேசுவதை யாரும் விரும்பமாட்டார்கள். இதைப் புரிந்துகொள்ளாமல் தன்னுடைய நற்பெயரையும் கெடுத்து, ஏற்பாட்டாளர்களுக்கும் சங்கடத்தை ஏற்படுத்துகின்ற நிலமை எதனால் ஏற்படுகின்றது. பேசுகின்றவருக்கு நேரம் பற்றிய பொறுப்புணர்வு இல்லாமையால்தானே?

நேரத்தை ‘விழுங்கும்’ நவீன தொடர்புசாதனங்கள்!

இன்றைய நவீன தொடர்புசாதனங்களான தொலைக்காட்சி, கைத்தொலைபேசி, இணையம், கணனி விளையாட்டுக்கள், முகநூல் போன்றவற்றில் பலர்தங்கள் பொன்னான நேரத்தைத் தொலைத்துக்கொண்டிருக்கின்றனர். கைத்தொலைபேசிகளின் அதீத பாவனையால் இன்று பலரது நேரம் வீணாகிக்கொண்டிருக்கிறது. காதலர்கள் தம்மை மறந்து மணிக்கணக்காக பேசி தமது நேரத்தை வீணாக்குவதோடு தொலைபேசி நிறுவனங்களுக்கும் அபரிதமான வருமானத்தை ஈட்டிக்கொடுக்கின்றார்கள். இணயத்தளப் பாவனையாளர்கள் சிலர்பாலியல் படங்களைப் பார்ப்பதில் பல மணி நேரங்களைச் செலவிடுகின்றனர். இதேபோன்று கணனி விளையாட்டுக்களும் பலரது நேரத்தை எடுத்துக்கொள்கிறது. இவ்வாறு கைத்தொலைபேசி, இணையம், கணனி விளையாட்டுக்கள் போன்றவற்றில் ஒருவர் எவ்வளவு நேரத்தைச் செலவிடுகின்றார் என்பது பற்றி பல ஆய்வுகள் வெளிவந்துள்ளன. அவை அதிர்ச்சி தரும் பல தகவல்களைச் சொல்கின்றன.

ஒட்டுமொத்தத்தில் ஒருவருக்கு நேரம் பற்றிய பொறுப்புணர்வு – விழிப்புணர்வு இல்லாவிட்டால் அவர் இன்றைய நவீன தொடர்புசாதனங்களினால் அலைக்கழிக்கப்பட்டு – அள்ளிச்செல்லப்பட்டு வாழ்க்கையை சூனியமாக்கிக்கொள்வார். இது தனக்குத்தானே தீ மூட்டுகின்ற விபரீதச் செயலாகும்.

“நேற்று என்பது இரத்து செய்த காசோலை. நாளை என்பது வாக்குறுதிச் சீட்டு இன்று என்பது உடனடி ரொக்கம்” என்பார்கள். உடனடி ரொக்கமாக (பணமாக) நமது கையில் உள்ள இன்றைய பொழுதை நேரத்தை நாம் எப்படிப் பயன்படுத்தப்போகிறோம்?

நிறைவாக

நேரத்தை நிர்வகிப்பது மிகப்பபெரிய கலை. நேர முகாமைத்துவம் என்பது நமது பொறுப்புணர்வின் – ஒழுக்கத்தின் வெளிப்பாடு. நமது நேரத்தை நாம் எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பதில்தான் நமது வாழ்வின் வெற்றி தங்கியிருக்கிறது. பொறுப்பற்றவர்கள் அலட்சிய மனப்பான்மை கொண்டவர்கள் தமது நடவடிக்கைகள் எல்லாவற்றிலுமே அலட்சியப்போக்கையே கொண்டிருப்பார்கள். நேர விடயத்திலும் அவர்கள் பொறுப்பற்றவர்களாகவே இருப்பார்கள். நேரத்தைக் கோட்டைவிட்டவன் வாழ்வையே கோட்டைவிட்டவனாகிறான்!