புதியசொல் 3

‪#‎புதியசொல்3‬ சனிக்கிழமையே வாசித்துவிட்டேன்.

யாழில் தொழில்முறையிலான மெய்ப்புப்பார்ப்பவர்கள் இன்றுவரை கிடைக்கவில்லை என்பது பரிதாபம் தான். பதிப்புத்துறை சார்ந்த சந்தைவாய்ப்புகளை மேம்படுத்தமுனைவது வரவேற்கத்தக்கது.

ஜே.கே யின் மெல்லுறவு கதையை யூகிக்க முடிந்தாலும் அந்த முடிவையும் தாண்டியதாக தேவகியின் தாயின் உரையாடல் அமைந்துள்ளது. இந்தக்கதையை வாசித்த போது “தான் போகத் தெரியாத மூச்சிறு விளக்குமாற்றையும் காவிக்கொண்டு போனதாம் எனும் பழமொழி தான் ஞாபகம் வந்தது… இது கதையோடு தொடர்புடைய பெண்ணுரிமை செயற்பாட்டிற்கு இந்தப்பழமொழி உவப்பானதாக இல்லாததால் யானைக்கும் அடிசறுக்கும் பழமொழியை மீண்டும் நினைத்துக்கொண்டேன். தேவகியின் அம்மாவின் வார்த்தைகள் தான் இதில் முதிர்ச்சியானவை.. கதையின் தொடர்ச்சியாய் இருக்கும் முகநூல் நிலைக்கூற்றும் பதில்களும் அன்றாட இலக்கிய அக்கப்போரை ஞாபகமூட்டி சிரிக்க வைக்கிறது.

மிளகாய்ச்செடி தொடர்பாக அனோஜனோடு உள்பெட்டியில் கதைத்தேன். குறுநாவலுக்குரிய காலநீட்சி.

திசேராவின் மொழிநடை அழகு. ஆங்காங்கே கவிதை மொழிச்சாரல். புதியசொல்லில் இடம்பெற்றிருக்கும் கவிதைகளை நானே கவிதை என்றாலும் அவர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். தலைப்பில்லாமலும் (அ) பெயரில்லாமலும் பிரதி உள்ளது என நண்பன் பொருமினான்.

ஏதாவது புதுமையான கட்டுடைத்தல் முயற்சியாக இருக்கலாம் என நான் தேற்றிவிட்டேன்.

பின் நவீனம், வெளிப்பாட்டுவாதம் பற்றிய கட்டுரைகள் ஆய்வறிக்கைச் சுருக்கம் (thesis) போல இருக்கின்றன. பின் நவீனம் ஒரு வலிந்த மொழிபெயர்ப்பு. “‪#‎விஞ்ஞானமும்_அகராதியும்‬” , ‪#‎யாழ்_நூலகம்‬,‪#‎தித_சரவணமுத்துப்பிள்ளை‬ , ‪#‎கலாநிதி‬ , நேர்காணல் ஆகியவை சிறப்பு.

எழுத்துப்பிழைகள் தவிர்க்கமுடியாதவை தான். எனினும் தற்போது மெய்ப்புப்பார்ப்பவர்களே “வலிமிகும் இடங்கள்” பற்றியும் அறிந்துகொண்டால் பிழைகளைக் குறைக்கலாம்.

#தெரிதல்_வைகாசி_ஆனி 2016

தெரிதல் தை- மாசி 2016 க்கு உரிய படம்

இம்முறை வெளிவந்துள்ள தெரிதலில் கவிதைகள் சிறப்பாக உள்ளன. மூன்றில் இரண்டு மொழிபெயர்ப்புக் கவிதைகள்.
 
காலையில் எழுந்தவுடன் மஞ்சுள வெடிவர்த்தன எழுதி M.rishan Shareef மொழிபெயர்த்துள்ள கவிதையை வாசித்தேன்…
 
பள்ளிக்குழந்தையின் சப்பாத்து பற்றிய கவிதையது. சாலைகளில் தனித்துக் கிடக்கும் ஒற்றைச் செருப்புகளைக் காணும் போதெல்லாம் அதன் உரிமையாளர்களைப் பற்றி நினைப்பதுண்டு.
 
விழிப்புணர்வு வேண்டப்படுகிறது, அறம்சார் நிலைப்பாடு, புனைபெயர் ஆகிய மூன்று பந்திகளுமே எழுத்தாளர்களுக்காக எழுத்தப்பட்டுள்ளது. அதிலும் “இந்த எழுத்தாளரின் படைப்புகளை தொடர்ந்து வெளியிடுங்கள் என குறிப்பிட்ட இதழ்களுக்கு புனைப்பெயரில் கடிதன்ம் எழுதுபவர்களும் இருக்கிறார்கள்: என்பது சாட்டையடி.
 
மருதூர் கொத்தனின் ஒளியை மையப்படுத்திய Ajanthakumar Tharumarasa வின் குறிப்பு, ஆவணக்காப்பகம் பற்றிய #கிருபாளினி பாக்கியநாதனின் குறிப்பு, #இறமணனின் எஸ்.பொ ஆய்வரங்குக் குறிப்பு, #ந.குகபரணின் சோலைக்கிளியின் கவிதை பற்றிய இரசனைக் குறிப்பு, #நா.நவராஜின் உளவியல் கட்டுரை, இ.சு.முரளிதரனின் திரவநேர அழகியல் என காத்திரமான இதழாக வெளிவந்துள்ளது தெரிதல்
 
#சோ.பத்மநாதன் எழுதியுள்ள #மிக்கயீல்_ஷோலக்கவ் பற்றிய குறிப்பு மூன்று சிறுகதைகளை மையமாக வைத்து எழுதப்பட்டுள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ள போதும், மூன்று சிறுகதைகளின் சுருக்கமே தரப்பட்டுள்ளது. அது சார்ந்து #சோ_ப வின் கருத்துகளோ, மூன்று கதையும் எவ்வாறு மையப்படுத்தப்பட்டுள்ளன என்பதெதுவும் இல்லை.
 
அடுத்ததாக #பைந்தமிழ்க்குமரண்டேவிட்டின் #நிழல்தேடி சிறுகதை… வேலைவேலையென அலையும் தந்தை… அன்புக்காக ஏங்கும் மகள். ..செலவிற்கு தரும் காசை சேமித்து தந்தையிடம் கொடுத்து, அப்பா இதை உங்கள் சம்பளமாக வைத்துக்கொண்டு ஒருநாளை என்னுடன் செலவிடுங்கள் எனும் கதை…
 
இக்கதை ஆங்கிலத்திலும், தமிழிலுமாக ஏராளமான முறை மின்னஞ்சலில் 10 ஆண்டுகளுக்கு முன்பே வலம் வந்தது… குறைந்தபட்சம் மொழிபெயர்ப்பு என்றாவது போட்டிருக்கலாம்.
 
மற்றபடி இலங்கையின் இலக்கிய பரப்பில் மூன்றுகால் பாய்ச்சல் நடத்தும் இலக்கியசஞ்சிகைகளோடு ஒப்பிட்டால் தெரிதல் மெய்ப்புப்பார்க்கப்பட்ட சஞ்சிகையாக வருவதில் மகிழ்ச்சியே.

தெரிதல் : தை-மாசி 2016

#தெரிதல் : தை-மாசி 2016
========================
 
கலை, இலக்கியச் செயற்பாடுகளின் தொகுப்பாக வெளிவந்துள்ளது தெரிதல். கலை, இலக்கிய பாடவிதானங்களில் ஈழத்து தமிழ் இலக்கியம் எனும் இரமணணின் கட்டுரை ஈழத்து தமிழ் இலக்கியத்தை கற்பதிலும் கற்பிப்பதிலும் உள்ள சிக்கலை ஒரு பக்கத்தில் பேசுகிறது. மேலும் சில கட்டுரைகளும் உள்ளன.
 
ஜெயகாந்தனின் “யுகசந்தி” பற்றி பல இடங்களில் பேசப்பட்டுவிட்டது. சமகால ஆசிரியர்களின் படைப்புகளை அல்லது பாடவிதானங்களில் உள்ள ஈழத்து இலக்கியங்களைப் பற்றிய விரிவான திறனாய்வுகளை முன்வைப்பதால் இதை மாணவர் மத்தியில் கொண்டு சேர்க்க முடியும்.
 
இல்லாது போன நாள் (லதா), காத்திருக்கும் கனவு (ஆதிலச்சுமி சிவகுமார்) தொட்டி(ந.சத்தியபாலன்) ஆகியோரின் கவிதைகள் சிறப்பு…
 
லதாவின் கவிதையிலிருந்து….
 
வானும் உறைந்திருக்கும் பனிக்காட்டில்
காலம் பெயர்ந்து வரும்
பறவைகளைப் பிடித்துண்ணும்
உனக்கெப்படிப் புரியப்போகிறது
 
அலைந்துழலும் காற்றின்
ஒலியற்ற பாடலும்
வெறுமையில் விடியும் நாளின் வாழ்வும்.
 
மன்னாரில் தெரிதலை என்னிடம் பெற்றுக்கொள்ள முடியும். விலை ரூ.20