எண்ணின்றி அமையா உலகு

எண்ணின்றி அமையா உலகு
=========================மன்னார் அமுதன்

என்னைப் பூச்சியம் என்றார்கள்…
கவிதைத்தாளெங்கும் முட்டை முட்டையாய் போட்டு
அடைகாக்கச் சொன்னார்கள்
அங்கிருந்து தான் ஒன்றும் ஒன்பதும் தோன்றியிருக்கும்

பெயர்களை அழித்து
இலக்கங்கள் கொடுத்த நாட்களில்…
ஒவ்வொருவனுக்கும் ஓர் இலக்கம்
சிலருக்கு மாதமொரு இலக்கம்
சிலருக்கு நாளொரு இலக்கம்
சிலருக்கு பல இலக்கம்

பல இலக்கம் கொண்டவன்
பல முகம் கொண்டவனாயிருந்தான்

ஒவ்வொரு நாளும்
நான்கு இலக்கங்களில் இருந்து
என்னைத் தேடுகிறார்கள்
என்னிடம் நலன் கேட்பதோ
கடன் கேட்பதோ நோக்கமில்லை

தொலைத்த நால்வரை
கண்டுபிடித்துக் கொடுக்கும்
முகவர் அவர்களுக்கு…

ஆயிரம் முறை கண்டுபிடித்துக் கொடுத்தும்
மீண்டும் தொலைத்துவிட்டு
என்னைத் தேடுபவனை கண்டிருக்கிறேன்

தாயைத் தொலைத்தவனை
மனைவியைத் தொலைத்தவனை
தங்கையைத் தொலைத்தவனை
நண்பனைத் தொலைத்தவனைக் கூடக்
கண்டிருக்கிறேன்….

தயங்கித் தயங்கி
நேற்றொருவன் வந்திருந்தான்
என்னவென்றேன்..
மகளைத் தொலைத்துவிட்டானாம்…
மனைவியின் இலக்கத்தைக் கொடுத்தனுப்பினேன்…

========================= மன்னார் அமுதன்

இருத்தலை வெளிப்படுத்தல்

இருத்தலை வெளிப்படுத்தல்
====================== மன்னார் அமுதன்

ஒதுக்கிவிடும் பெருங்கூட்டத்தின் ஓரத்தில்
பல்லையும் தலையையும் நீட்டிக்கொண்டு
ஒளிப்படம் எடுப்பதில் தொடங்குகிறது
இருத்தலை வெளிப்படுத்தல்

நடிகரின் பக்கத்திலென்றால்
நான்காம் வரிசையானாலும் பறவாயில்லை
இடக்காதின் கடுக்கன் தெரிந்தால் போதும்
அடையாளத்தை நிரூபித்துவிடலாம்

சாதனையாளர்களின் கூட்டுப்படமொன்றில்
நிரப்பப்படாத நாற்காலியொன்றில்
ஓடிப்போய் அமர்ந்துகொண்டு
ஆள்மாறாட்டம் செய்யலாம்…
பின்னொரு தலைமுறையிடம்
சாதனையாளனாக அடையாளப்படுத்த எளிதாக இருக்கும்

பெருவிழாக்கள் என்றால்
சந்தன மாலையொன்றைக்
கையிலேயே கொண்டு செல்லலாம்
கூட்டத்திற்குள் மாலை மட்டும் தான் அடையாளம்
சிறப்புச் சிற்றுண்டி பெற்றுக்கொள்ள….

முட்டிக்கொண்டு படமெடுப்பது
முதலமைச்சருக்கும் பிடிக்காது தான்
தீட்டைப் போல் ஒதுங்கிநிற்பார்…
அதற்கென்ன செய்வது
அன்னியோன்யம் பேண முட்டத்தான் வேண்டும்

இருத்தலை வெளிப்படுத்தி
அடையாளத்தைக் காக்க
உலகை எதிர்த்து
இலக்கியம் படைக்கவா முடியும்

அவருக்கு வேண்டாமென்றால்
காறித்துப்பிக் கொண்டே
இருமுறை குளித்துவிட்டு போகட்டும்…

#மன்னார் அமுதன்

குறிப்பேட்டிலிருந்து…

குறிப்பேட்டிலிருந்து…
================== மன்னார் அமுதன்

எல்லாவற்றிற்கும் நாட்களுண்டு
அன்னையர் தினம், காதலர்தினம் போல
அழுவதற்கும் சிரிப்பதற்கும் கூட
தினங்களுக்கிடையில்
சிக்கிக் கிடக்கிறோம்

உறவினரின் மரணவீடொன்றில்
குமுறிக் குமுறிக் அழுதாலும்
கண்ணீர் வருவதில்லை
அது அழுவதற்குரிய நாளாயிருப்பதில்லை

நகைச்சுவையைக் கேட்டவுடன்
சிரிக்க முடிவதில்லை…
சிரிப்பதற்குரிய நாள்
மாதத்தின் இறுதிச் சனிக்கிழமை
சிரிப்புமன்றத்தில் குறிக்கப்பட்டிருக்கும்

காணாமல் போன சகோதரனைத் தேடவும்
காலம்போன கவிஞனுக்கு அஞ்சலி செய்யவும்
ஒருநாள் ஒதுக்கியிருக்கிறோம்…
உக்கிரமான கவிதைகளுக்கான நாளாகவும்
அவற்றைக் குறித்துக்கொள்ளலாம்

ஒதுக்கப்படாத நாட்களில்
எதிர்பாராமல் வந்துவிடும் நாட்கள் கூட
அன்றாடத்தைக் குலைத்துவிடுகிறது..
எரிச்சலை அள்ளி எல்லாவற்றின் மேலும் கொட்டுகிறது…

குறிப்பேட்டின் நாட்களெல்லாம்
நிகழ்ச்சிகளின் பின்னால் ஓடிக்கொண்டிருக்கின்றன
எல்லாவற்றுக்குமொரு நாளை நானும் குறித்துவைத்திருக்கிறேன்
எனக்கென்றொரு நாளையும்
உங்களில் யாராவது குறித்து வைத்திருக்கலாம்…

#மன்னார் அமுதன்