தனக்குத் தானே பூமழை பொழிந்துகொண்ட “மன்னார் சைவக் கலை இலக்கிய மன்றம்“

                                                     இணைக்கட்டுரையாளர்கள் –தேவா சிவா

தோழர் தேவா

தேவா

துரையூரான் சிவானந்தன்

சிவா

 

 

 

 

 

அண்மையில் “மன்னார் சைவக் கலை இலக்கிய மன்றம்“ மன்னார் நகர சபை மண்டபத்தில் முத்தமிழ் விழா ஒன்றைச் சிறப்பாக நடாத்தியது. ஒரு விழாவினை ஏற்பாடு செய்து நடத்துவது என்பது சாதாரண விடயமல்ல. விழாவுக்கு முன்னும் பின்னும் ஏகப்பட்ட நிதியும் பொருளும் உழைப்பும் தேவை. பார்வையாளர்களாக வருவோர் விழா நடக்கின்ற இரண்டு அல்லது மூன்று மணிநேரங்கள் மட்டும் இருந்து பார்த்துவிட்டு விழா பற்றிய விமர்சனங்களை முன்வைப்பர். அதிலும் ஓரிரு நிகழ்ச்சிகளை மட்டுமே பார்த்துவிட்டுச் செல்பவர்களுங்கூட முழு நிகழ்ச்சி பற்றிய பாராட்டையோ அல்லது குறைகளையோ கூறுவதும் சாதாரணமாகிவிட்டது. எனினும் குறிப்பிட்ட முத்தமிழ் விழா நிகழ்வுகளில் சில அங்கு அமர்ந்திருந்த கலை ஆர்வலர்களின் மனதைப் புண்படுத்தும் விதமாக இருந்தமை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. இதற்கான காரணங்களையும் பின்னணிகளையும் நோக்கி, தவறுகளைச் சுட்டிக்காட்டி, எதிர்காலத்தில் இவற்றை நிவர்த்திக்க, சம்பந்தப்பட்டவர்களின் கவனத்திற்குக் கொண்டு வருவதே இக் கட்டுரையின் நோக்கம்.

மன்னார் மாவட்டமானது இலங்கையின் பின்தங்கிய மாவட்டங்களுள் ஒன்று என்பதும் றோமன் கத்தோலிக்கச் சமயத்தைச் சார்ந்தவர்களைப் பெரும்பாண்மையாகக் கொண்டது என்பதும் யாவரும் அறிந்த விடயமே. ஐரோப்பியரின் வருகைக்கு முன்னர் பெரும்பாலும் சைவர்களாக இருந்த மக்களே கத்தோலிக்கராயினர் என்பதும் புதிய விடயமன்று. எனினும் நிருவாகக் கட்டமைப்புக்கும் உலகளாவிய சிறந்த வலையமைப்புக்கும் எடுத்துக்காட்டாகத் திகழும் கத்தோலிக்கத் திருச்சபையின் ஓர் அங்கமான மாவட்டத் தலைமை போன்று சைவம் சார்பாக இலங்கை முழுமைக்கும் எவ்வாறு ஒரு தலைமை இல்லையோ அவ்வாறே மன்னார் மாவட்டத்திற்கும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

மன்னார் மாவட்டமானது இரண்டு நிலப்பகுதிகளை உள்ளடக்கியது. தீவுப் பகுதி, பெருநிலப் பகுதி என்பனவே அவையாகும். இதில் பெரு நிலப்பரப்பிலேயே சைவ மக்கள் அதிகமாக வாழ்கின்றனர். சைவ மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்த ஏக தலைமை இல்லாததன் காரணமாகப் பல்வேறு கோவில்கள் சார்ந்த, சாராத அமைப்புக்கள் தனித்தனியே இயங்கி வருகின்றமையும் ஒரு பொதுப் போக்காக இருந்து வருகின்றது. இத் தனித்தனி அமைப்புக்களுக்குத் தலைமை தாங்குபவர்களாகவோ, காப்பாளர்களாகவோ பெரும்பாலும் அரச உத்தியோகம் மற்றும் வணிக நோக்கம் கருதி மன்னாரில் வாழும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்களே இருந்து வருகின்றனர். இவர்களின் தலைமையின் கீழும் ஆலோசனைகளின் வழியும் மன்னார் மாவட்டத்து நிலங்கள் தனியே ஒரு மதத்தவரின் ஆளுகைக்குக் கீழ் மொத்தமாகச் செல்லுகின்ற முன்னெடுப்புக்கள் குறைக்கப்பட்டன. கோவில்கள் பாதுகாக்கப்பட்டன. சைவக் காப்பகங்கள், நலன்புரி இல்லங்கள் உருவாக்கப்பட்டன.

மொத்தத்தில் இவர்கள் மன்னாரின் சைவ நிலைத்திருக்கைக்கு ஏராளமான பங்களிப்பைச் செய்துள்ளார்கள் என்பதுவும் கவனத்திற் கொள்ள வேண்டிய விடயமாகும். எனினும் மன்னார் மாவட்டத்தையே சொந்த மாவட்டமாகக் கொண்ட சைவத் தலைமைகளை இவர்கள் உருவாக்கவில்லை. தங்களுக்கு மாற்றீடாகச் சுய தலைமைகள் உருவாகுவதை ஊக்குவிக்கவும் இல்லை. ஆங்காங்கு சில தலைவர்கள் உருவானாலுங்கூட பொறுத்துக் கொள்ளமுடியாத சில உள்ளூர் பெரும்புள்ளிகளே முன் குறிப்பிட்ட தலைமைகளோடு கூட்டுச் சேர்ந்து முளையிலேயே கிள்ளியெறிந்து விடுவதும் வழக்கமாகி விடுகிறது. இது எப்படியென்றால் தன்னால் செய்ய முடியாதவற்றை தன்னையொத்தவர்களும் செய்துவிடக் கூடாது. ஆனால் தனக்குப் போட்டியில்லாத பிறர் செய்ய அனுமதிக்கலாம் என்ற மனநிலை. மொத்தத்தில் மேற்குறிப்பிட்டவர்களின் தலைமையை ஏற்றுக் கொள்வதைத் தவிர இங்குள்ள சைவ மக்களுக்கு மாற்று வழியில்லை எனும் நிலைமை வலிந்து உருவாக்கப்பட்டுள்ளது. ( இதற்குக் காரணமாக, பெரும்பாண்மையாக வாழும் கத்தோலிக்கச் சகோதரர்களின் தலைமைகள் எந்த நிபந்தனையுமற்று, சைவ மக்களையும் அவர்களின் தனித்துவங்களையும் அங்கீகரித்து, அரவணைத்துச் செல்லத் தவறியமையாகவும் இருக்கலாம்.)

யாழ்ப்பாணத்தில், தங்கள் சொந்த ஊரில் சாதாரணமாகச் செய்கின்ற செயற்பாடுகளையொத்தவை கூட இங்கே பெரிய சாதனையாகப் போற்றப்படுகின்றன. விழாக்கள் வைத்துப் பேசப்படுகின்றன. இங்கேயுள்ள சைவ மக்களே பெரும்பாலும் போற்றுகின்றவர்களாக மாற்றப்படுகின்றார்கள். தாங்கள் ஏற்பாடு செய்கின்ற விழாக்களிலேயே தங்களை போற்றிப் புகழ்ந்துரைப்பதற்காக பேச்சாளர்களை வரவழைக்கிறார்கள். அவர்களும் இவர்களை வானளாவப் புகழ்கிறார்கள். (புகழ்ச்சி நல்லதுதான் அது மற்றவர்களை இகழ்வதாக அமையக் கூடாது) ஆலய நிருவாகங்கள் உட்பட பல்வேறு சைவ அமைப்புக்களுக்கும் இவர்களே நிதியைப் பெற்று வழங்குபவர்களாக உள்ளார்கள். இவர்களின் சொற்படிதான் எல்லாமே நடந்தேறும். ஏதேனும் பிரச்சினைகள் என்றால் இவர்களின் ஆலோசனைப்படிதான் முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்படும். இந்த நிலைமையின் தொடர்ச்சியாகத்தான் அண்மையில் நடைபெற்ற முத்தமிழ் விழா அமைந்தது. அவ் விழாவில் பேசப்பட்ட, நிகழ்த்தப்பட்டவைகளின் சாராம்சத்தைப் பார்ப்போமேயானால் உண்மை விளங்கும்.

விழா ஆரம்பித்தது முதல் இறுதிவரை (அழைக்கப்பட்ட விருந்தினர்களில் ஒருவரைத் தவிர) மன்னார்த் தமிழ் (பேச்சுத் தமிழ்) பேசப்படவில்லை. சாதாரண உரையாடல்களில் கூட மன்னார் பேச்சுத் தமிழ் மேடையில் கேட்கவேயில்லை. மன்னார் மாவட்டத்தில் உள்ள எந்தவோர் ஊரின் பெயரும் எடுத்துக்காட்டாகக் கூட உச்சரிக்கப்படவில்லை. இதற்குக் காரணம் மன்னாரைச் சேர்ந்த யாரும் எந்த நிகழ்விலும் பேச நிகழ்ச்சி நிரலில் அனுமதிக்கப்படவில்லை. பார்வையாளர்களாக மட்டுமே இருந்தார்கள். இந்த நிலைமை ஒரு கோடலான கண்ணோட்டமாக இருக்கலாம் எனச் சிந்திக்க இடமுண்டு என்றாலும் அந்தச் சிந்தனைக்குச் சாதமாக இல்லாமல், பேசியவர்களே இத்தகைய நிலையை உறுதிப்படுத்தவும் செய்தார்கள்.

நிகழ்வில் நடைபெற்ற பட்டி மன்றத்திற்குத் தலைமை தாங்கியவர் (நடுவர்) கூறினார் ”யாழ்ப்பாணத்தில் இருந்து இடம் பெயர்ந்து வந்து, திரும்பிச் செல்லும் வழியில் சில முத்துக்கள் சிதறி, இங்கேயே (மன்னாரில்) தங்கிவிட்டன. அவைதான் இன்று இதுபோன்ற விழாக்களைச் செய்து மின்னிப் பளிச்சிடுகின்றன.” மேலும் ஒரு சந்தர்ப்பத்தில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியை எடுத்துக்காட்டாகக் குறிப்பிட வந்தவர் வெளிநாட்டில் இருந்து வந்திருந்த ஒருவர் ஓர் ஆலயத்தில் யானையின் மீதேறி வலம் வந்து தன் பகட்டைக் காட்டினாராம். அப்போது ஆலயத் தொண்டு செய்யும் அடியார் ஒருவர் வைத்தியத்திற்காக பணம் கேட்டாராம். அதற்கு யானைமேல் வலம் வந்த வெளிநாட்டவர் “வந்திட்டுது சிணி” என்றாராம். (சிணி – தலித்) இதை இவர் கூறி, தன் மேட்டிமைத் தனத்தை வெளிப்படுத்தினார். பிறிதொரு சந்தர்ப்பத்தில், ”இந்த (கல்வி) அதிகாரிகளுக்கு மண்டையில ஒன்றுமேயில்ல” ஏதேதோ பாட்டையெல்லாம் தமிழ்த்தாய் வாழ்த்து என்று பாடுகிறார்கள், பாட வைக்கிறார்கள் என்று குறைபட்டு, தனக்கு மட்டுமே தெரிந்த ஒரு கவிதையைத் தான் தமிழ்த்தாய் வாழ்த்தாக வைக்க வேண்டும் என்றார். இவ்வாறு நேரத்தைக் கவனத்தில் கொள்ளாத எத்தனையோ அர்த்தமற்ற பேச்சுக்கள். மனனம் செய்யப்பட்ட சில வெண்பா வரிகளை ஒரு சேரக் கோர்வையாகக் கூறிப் பேசினால் விளங்குகிறதோ, இல்லையோ கூட்டம் கைதட்டும். இந்த உற்சாகத்தில் பல பொருத்தமற்ற, சபையைப் பற்றிய பிரக்ஞையற்ற பேச்சாகவே அவரது பேச்சு இருந்தது.

ஆரிய மொழியான சமஸ்கிருதத்தை ஆதரிக்க வேண்டும் என்றார். தமிழரின் கலாசாரப் பண்பாடுகளை மழுங்கடித்து, மூழ்கடித்துத் தமது ஆதிக்கத்தை நிலைநாட்டிய விஜய நகரப் பேரரசர் காலத்திய வைதிக ஆரியப் பண்பாடுகளையே தூக்கலாகப் பேசுகின்ற போக்கு மேட்டிமையின் குரலாக ஒலித்ததேயன்றி உண்மைச் சைவத்தையோ, மன்னார் சைவ மக்களையோ பிரதிபலிக்கத் தவறிவிட்டது. பட்டி மன்றத்தில் உதாரணமாகச் சொல்லப்பட்ட ஊர்கள்கூட யாழ்ப்பாண ஊர்களாகவே இருந்தன. அதிலும் தனது ஊர் சார்ந்த பெருமைகளை அதிகம் பேசிக் கொண்டார்.

விழாவில் பல்வேறு துறை சார்ந்தவர்களுக்கும் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டது. எப்போதுமே விருது வழங்குகின்ற நிகழ்வு பலத்த சர்ச்சைகளை உருவாக்கக் கூடியதுதான் என்றாலும் மன்னாருக்குரிய பிரதிநிதித்துவம் போதாமையாக இருந்தது. தொகுத்து நோக்கின், யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு விழா அங்கே மண்டபம் கிடைக்கப் பெறாமையால் மன்னார் நகர மண்டபத்தில் நடத்தப்பட்டதோ என்றதொரு தோற்றத்தையே தந்தது.

இக் கட்டுரை வெறுமனே பிரதேச வாதம் பேசுவதாகவோ, சமயம் சார்ந்த கசப்புணர்வாகவோ எழுதப்படவில்லை. அவ்வாறு எழுத வேண்டிய தேவையும் கட்டுரையாளர்களுக்கு இல்லை. மன்னார் மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அமைந்த தலைப்பைக் கொண்ட ஒரு மன்றம் மன்னாரைக் கவனத்தில் கொள்ளவில்லை என்பதைச் சுட்டிக்காட்டவும் மன்னாரின் சைவ வளர்ச்சிக்கு அன்பர்கள் புரிந்த சேவையினை மதிப்பதோடு, மன்னாரால் தாங்கள் அடைந்த மேன்மையையும் சற்று சுய நினைவு கூர்தல் செய்து பார்ப்பதற்காகவும், மேடைகளில் பேசும் போது கேட்போரின் மனது புண்படாமல் பேசும் பண்பாட்டைப் பேணுவதில் கவனமாக இருக்கவும் தங்கள் மேன்மைத் தனத்தைக் காட்ட, மனிதரைத் தாழ்த்தி, வேறுபடுத்திக் காட்டும் சொற்களைத் தவிர்த்துக் கொள்ளவும் ”சிந்தித்துப் பாருங்கள் அன்பானவர்களே…” என்று கூறிக் கூறியே அவர்களின் சுய சிந்தனையை மழுங்கடித்து, அடிமைச் சிந்தனைகளைத் திணிப்பதைத் தடுக்கவும் சம்பந்தப்பட்டவர்களின் கவனத்திற்குக் கொண்டு வருவதற்காகவே எழுதப்பட்டது.

மேலும் தமிழரின் பண்பாடு, மரபுகளை உண்மையாகவே அறிவதற்கும் அவற்றைப் பின்பற்றுவதற்கும் இளந் தலைமுறையினரை வழி நடத்தும் வகையில் தமிழ் மன்றங்களும் மேடைப் பேச்சாளர்களும் முன்னெடுப்புக்களை மேற்கொள்ள வேண்டும். மேட்டிமையின் சின்னமாக திணிக்கப்பட்ட, தமிழர் மரபல்லாத, அதிக பணச் செலவுடன் கூடிய சடங்குகளை, விழாக்களை, பண்டிகைகளை, நம்பிக்கைகளைத் தங்கள் சுய இலாபத்திற்காகப் போற்றிப் புகழுகின்ற போக்கை மாற்ற வேண்டும். எவை எமது சுய மரபு, எவை எம்மீது திணிக்கப்பட்டவை, அவற்றால் நமக்கும் நமது சந்ததிக்கும் ஏதாவது பயனுண்டா என்பன குறித்துச் சிந்தித்துச் செயற்பட வேண்டும்.

ஓரிரு உயர் குடிகள் தொடர்ந்தும் தமது மேன்மைத் தனத்தைக் காட்டவும் தக்கவைத்துக் கொள்ளவும் சமூக, பொருளாதார, அரசியல் நிறுவனங்களை மேலாண்மை செய்யவும் பாமர மக்களையும், உத்தியோகத்திற்காக மட்டுமே படித்தவர்களையும், மந்தைகளைப் போல சிந்திக்காமலே பின்தொடர்பவர்களையும் இட்டுக் கட்டிய கட்டுக் கதைகளைச் சுவைபடக் கூறி, ஏமாற்றித் தலையாட்ட வைக்கும் போக்கு மாற்றப்பட வேண்டும். தாங்கள் இம்மையிலேயே சுகபோகத்தை அனுபவிப்பதற்காக, மறுமையின் சொர்க்கத்தை ஆசையாகக் காட்டி, அடக்கி வைத்து அல்லலுறச் செய்த அந்த இருண்ட காலத்தின் தொடர்ச்சி இனியும் தொடராமல் இருப்பதற்கும் ஆவன செய்தல் வேண்டும்.

இளைய தலைமுறையினரே, சீரிய சிந்தனை செழுமை தரும். எதையும் அப்படியே ஏற்றுக் கொள்வது அடக்கமாகாது. அடிமைத்தனத்தையே விதைக்கும். பகுத்தறிவைப் பயன்படுத்தி மனிதருக்குரிய சிறப்பைப் பெறுங்கள்.

                                    ஆக்கம்:  இணைக்கட்டுரையாளர்கள் –தேவா சிவா

 

தமிழ்த் தேசியமும் தனித்தனி இளவரசர்களும்

                                 ஆக்கம்: இணைக்கட்டுரையாளர்கள் — தேவா சிவா

இலங்கையில் மாகாண சபை முறை உருவாக்கப்பட்டுக் கால் நூற்றாண்டுக்குப் பின் இவ்வாண்டு வட மாகாணத்திற்கான தேர்தல் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்திருக்கின்றது. தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் மத்தியில் ஆளுங்கட்சி என்றவகையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் தேர்தலில் நேரடிப் போட்டியை எதிர்கொண்டன. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய தேசியக் கட்சி உட்பட பல சுயேட்சைக் குழுக்களும் இத் தேர்தலில் களமிறங்கியிருந்தாலுங்கூட அவை மேற்குறிப்பிட்ட இரு பிரதான கட்சிகளுக்கும் சவாலாக அமையவில்லை. மொத்தமுள்ள 38 ஆசனங்களில் 30 ஆசனங்களைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் கைப்பற்றி வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியது. மன்னார் மாவட்டத்தைப் பொறுத்தவரை மொத்தமுள்ள ஐந்து இடங்களில் மூன்றைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் கைப்பற்றிக் கொண்டது. இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் தமிழீழ விடுதலைக் கழகம் (ரெலோ) இரண்டு ஆசனங்களையும் இலங்கைத் தமிழரசுக் கட்சி ஓர் ஆசனத்தையும் பெற்றன. இவை யாவும் யாவரும் அறிந்த விடயங்களே. பெருமளவில் அறியப்படாத விடயம் என்னவென்றால், மன்னார் மாவட்டத்தில் மக்கள் அனைவரும் “தமிழ்த் தேசிய“ உணர்வோடு செயற்பட்ட போதும் வேட்பாளர்களும் அவர்தம் ஆதரவாளர்களும் பிரதேசம், மதம், சாதி, உட்சாதி பேசி வாக்குகளைச் சேகரிக்க முற்பட்டமையும் சிதறடித்தமையுமே ஆகும். இது தமிழ் மக்களால் பெரிதும் வெறுக்கப்பட்டது.

இலங்கையின் தற்போதைய ஆளுங்கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியானது நீண்டகாலப் போரை முடிவுக்குக் கொண்டு வந்து மக்களின் இயல்பு வாழ்க்கையை ஓரளவுக்குத் திரும்பச் செய்திருக்கின்றது. பாரிய அளவில் பெருந் தெருக்களும் கற்காறை (கொங்றீட்) வீதிகளும் அமைத்திருக்ககிறது. பல்வேறு கட்டுமாணப் பணிகளும் துரித கதியில் நடைபெற்று வருகின்றன. வேலை வாய்ப்புக்கள் வழங்கப்படுகின்றன. இருப்பினும் தமிழ் மக்கள் உரிமைகளற்ற இத்தகைய சலுகைகளை நிராகரித்திருக்கிறார்கள் என்பதைத் தேர்தல் முடிவுகள் வெளிக்காட்டி நிற்கின்றன. மக்களின் இந்த முடிவு அரசாங்கத்தைச் சிந்திக்கச் செய்திருக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

எனினும் மக்கள் வெளிக்காட்டிய தமிழ்த் தேசிய உணர்வை மன்னாரின் வேட்பாளர்கள் பிரதிபலிக்கவில்லை. தங்களுக்கு விருப்பு வாக்குச் சேகரிக்கச் சென்றவர்கள், சகோதர வேட்பாளர்களையே விமர்சித்தமையும் தனக்கு வாக்களியுங்கள் என்று கேட்பதோடு நிறுத்திக் கொள்ளாது “அவருக்குப் போடாதீர்கள்“ என்று கூறிச் சென்றமையும் அவதானிக்கக் கூடியதாகவிருந்தது. மேலும் நான் உத்தியோகத்தை இழந்திருக்கிறேன் என்று அனுதாப அலையைத் தோற்றுவித்து வாக்குச் சேகரித்தவர்களையும் நான் உங்கள் சாதியைச் சேர்ந்தவன், சமயத்தைச் சார்ந்தவன் என்றும் இன்னும் ஒரு படி கீழே சென்று உட்சாதிகளைக் கூறியும் கூட வாக்குக் கேட்பதை நேரடியாகவே காணவும் கேட்கவும் கூடியதாக இருந்தது.

இரகசிய ஒப்பந்தங்கள் செய்து கொள்வதும் பின் அதை ஏதோ சாக்குப் போக்குச் சொல்லி மீறுவதும் மேடையில் ஒற்றுமை பேசிவிட்டு, திரைமறைவில் தந்திரங்கள் செய்வதும் மக்களால் வெறுக்கப்பட்டன. வாக்குச் சேகரிக்கச் செல்லும்போது, மக்கள் “நாங்கள் வீட்டுக்குத்தான் போடுவோம்“ என்று உறுதியாகக் கூறிய பின்பும் என்னென்ன இலக்கங்களுக்குப் போடுவதாக உள்ளீர்கள் எனக் கேட்டு, குறிப்பிட்ட சில இலக்கங்களுக்குப் போட வேண்டாம் எனவும் கூறிச் சென்றிருக்கின்றனர். மொத்தத்தில் தமிழரின் ஒற்றுமையை இவர்கள் சிதைக்கும் வகையில் செயற்பட்டுள்ளனர். ஒரு வேட்பாளரின் சாதியைக் கூறி ”ஏன் அவனுக்கெல்லாம் வாக்களிக்கிறீர்கள்?“ என்று கேட்ட சம்பவங்களும் உண்டு.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புச் சார்பாகப் போட்டியிட்ட ஒவ்வொரு வேட்பாளர்களும் சுமார் பதினைந்து இலட்சம் தொடக்கம் அறுபது இலட்சம் வரை செலவு செய்து பிரச்சார வேலைகளில் ஈடுபட்டதாக அறியப்படுகின்றது. தனித்தனியே சுவரொட்டிகள், பதாதைகள், துண்டுப் பிரசுரங்கள், அவற்றில் தனித்தனியாக என்னென்னவோ வீர வசனங்கள் என ஒரு பக்கமென்றால், கழகங்கள், அமைப்புக்களுக்கு நன்கொடைகள் என இன்னொரு பக்கமாகப் போட்டிபோட்டுப் பணத்தைச் செலவு செய்த நிலைக்குப் பதிலாக வேட்பாளர்கள் ஒன்றிணைந்து தங்களுக்குள் பேசிச் செயற்பட்டிருந்தால் பெருமளவில் பணத்தைச் சிக்கனப்படுத்தியிருக்கலாம். தேர்தலுக்காக விட்ட பணத்தைப் பிடிப்பதற்கு அரசியலைப் பயன்படுத்தினால் பாதிக்கப்போவது மக்கள்தானே. மக்களின் நலத் திட்டங்கள் ஊடாகத்தானே இவர்களுக்குப் பணம் கிடைக்க வேண்டும்.

தமிழ்த் தேசியத்திற்காக ஒன்றுபட்டு நின்ற மக்களிடம் வேட்பாளர்கள் பிரிவினையை விதைத்ததையும் காணக்கூடியதாக இருந்தது. இன்னும் ஒருபடி கீழே சென்று ஒரே கட்சிக்குள் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் கூட முகத்தைத் திருப்பிக் கொண்டு ஒருவருடன் ஒருவர் பேச மறுத்த செய்கைகளும் சாதாரணமாக நிகழ்ந்தன. வேட்பாளர்களில் சிலர் தங்களின் உத்தியோகம், தொழில் சார்பாகச் செய்த பணிகளைக் கூட தேர்தல் காலத்தில் ஒரு பகுதி மக்களிடம் ”உங்களுக்காக நான் அவர்களை எதிர்த்து உதவி செய்தேன்” என்று கூறி வாக்குகளாக மாற்றிக் கொண்டார்கள்.

வேட்பாளர்களுள் ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் யாவரும் மேடையில் மட்டுமே தமிழ்த் தேசியம் பேசினார்கள். ஊருக்கு ஊர், தெருவுக்குத் தெரு, வீட்டுக்கு வீடு சென்று தனக்கு மட்டும் வாக்குப் போடச் சொல்லித் தயவாகக் கேட்டுக் கொண்டமையும் வெளிப்பட்டது. கூட்டமைப்பு வெளியிட்ட தேர்தல் விஞ்ஞானபனத்தில் கூறப்பட்ட கருத்துக்களை முன்னிறுத்தியோ, போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்வகையில் உதவப் போகிறோம் என்பது பற்றியோ, தமிழரின் தேசியப் பிரச்சினைக்குத் தான் எவ்வகையில் உதவப் போகிறேன் என்பது பற்றியோ எதுவும் கூறாமல், வீட்டிலுள்ளவர்களுக்கு வேலைவாய்ப்பு, வீட்டுத் திட்டம், கக்கூஸ், கிணற்றுத் திட்டங்கள், ரோட்டுத் திட்டம், அன்பளிப்புக்கள் என தனிப்பட்ட உறுதிமொழிகள் வழங்கப்பட்டு வாக்குச் சேகரித்ததையும் அவதானிக்கக் கூடியதாகவிருந்தது. இதைத்தான் அரச தரப்பும் செய்து கொண்டிருக்கின்றது என்பதை மறந்து செயற்பட்ட நிகழ்வாக நோக்கப்பட்டது.

தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டதன் பின்பும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெருவாரியான ஆசனங்களைக் கைப்பற்றியதற்காக மன்னார் வேட்பாளர்களோ, அவர்கள் சார்ந்த ஆதரவாளர்களோ பெரிதாக வரவேற்றுக் கொண்டாடவில்லை. ஏனெனில் விருப்பு வாக்கு முடிவுகள் வெளியாகி, தாங்கள் சார்ந்த வேட்பாளர்களின் வெற்றி உறுதி செய்யப்படும் வரை வெற்றிக் கொண்டாட்டங்களைத் தள்ளிப் போட்டார்கள். விருப்பு வாக்கு முடிவுகள் வெளியிடப்பட்ட பின்பே வெடிகளைக் கொழுத்தி, வான வேடிக்கைகளைக் காட்டி அதிர வைத்தார்கள். இதிலும் விருப்பு வாக்கு அடிப்படையில் தெரிவு செய்யப்படாதவர்களும் அவர்தம் ஆதரவாளர்களும் கொண்டாடவேயில்லை. இதிலிருந்து தமிழ்த்தேசிய உணர்வு வேட்பாளர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் எவ்வாறு இருந்தது என்பதைக் கண்டு கொள்ளலாம்.

இவையெல்லாவற்றுக்கும் மேலாக, உட்கட்சிப் பூசல்களால் அமைச்சுப் பதவிக்கு நடந்த இழுபறி இருக்கிறதே…… தமிழ்த் தேசியம் பேசி வென்றுவிட்டு, தனிக் கட்சி விசுவாசிகளாய் மாறி, புறக்கணிப்புக்கள் என்ன… இராஜினாமா நாடகங்கள் என்ன….. ஒத்துழையாமை இயக்க முன்னெடுப்புக்கள் என்ன… நாளிதழ்களில் நாறிவிட்டது. சிலர் அடுத்த தேர்தலை மனதில் வைத்து அடக்கி வாசித்தாலுங்கூட சிலரால் அவ்வாறு அடக்கிக் கொள்ளவும் முடியவில்லை. முகம் பார்த்துப் பேசிக்கொள்ளாத மூத்த உறுப்பினர்களும் உண்டாம். என்னே ஒற்றுமை…

அமைச்சர்கள் பதவியேற்ற நிகழ்வில் கிறீடம் வைத்து, வேல் கொடுத்து “பொது மகன்கள்“ தங்கள் மகிழ்ச்சியைக் காட்டிக் கொண்டதும், ஜனாதிபதியிடம் இருந்து பிள்ளையார் பெற்றுக் கொண்டதும் பொங்கல் வைத்து, பூசகர் கையால் ஆசி நீறு பெற்று அலுவலகத்தைத் திறப்பதுங்கூட எந்தளவுக்கு இந்தளவு தூரம் இலங்கைத் தமிழர் பிரச்சினையைச் சர்வதேசம் முழுமைக்கும் தெரியப்படுத்துவதற்குத் துணையாகவிருந்தவர்களுக்கு ஏற்புடையது என்பதை தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் யோசித்துச் செய்திருக்க வேண்டும். மேட்டிமைத் தனங்களை வெளிக்காட்டிக் கொள்ளும் சின்னங்களாய் விளங்குகின்ற தனிப்பட்ட நம்பிக்கைகள் பொதுவான ஒற்றுமைக்குச் சவாலாகக் கூடாது. வாக்களித்த மக்கள் யோசிக்கிறார்கள்…..… ஆனாலும் ஓர் ஆறுதல்… அமைச்சர்கள் பதவியேற்பு நிகழ்வில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஐயா அவர்களின் உரை. நம்பிக்கையுடன் காத்திருப்போம்.

                                     ஆக்கம்: இணைக்கட்டுரையாளர்கள் — தேவா சிவா

சில மரணங்களும்… தொடரும் ஓலங்களும் …

ஆக்கம் : “தழல்” தோழர் தேவா

ஆக்கம் : தோழர் தேவா

அண்மையில் செய்திப்பத்திரிகைகளில் சிறு செய்தி. அதிலும் ஒரு பத்திரிகை சைக்கிளில் இருந்து விழுந்ததால் மாணவர் மரணம் ஆனார் என பிரசுரித்திருந்தது. மன்னாரின் பெரிய பாடசாலை ஒன்றில் பயின்ற இந்த மாணவன் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டியில் சைக்கிள் ஓட்டப்போட்டியில் கலந்துகொண்டிருக்கிறார் , போட்டி ஓட்டத்தின் போது வீதியில் விழுந்து கிடந்த இவரை வைத்தியசாலையில் சேர்த்தது தற்செயலாக கண்ட இராணுவத்தினர். இச்செய்தியை மன்னார் அமுதன் தன் முகப்புத்தகத்தில் பதிவேற்றம் செய்தபோது அதற்கு கிடைத்த கருத்து பரிமாறல்கள்தான் மரணத்தையும்விட மனதை அலைக்களிப்பதாக இருந்தன.

அதிகமானோரின் கருத்துபதிவு நடந்ததைப் பற்றியும் அது நடக்காதிருக்க செய்ய வேண்டியவை பற்றியும் கருத்துதெரிவிக்காது யார் மீதும் குற்றம் சாட்டக்கூடாது என்பதிலேயே குறியாய் இருக்கிறார்கள். பாடசாலையின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் முயற்சி. பாடசாலை அதிபருக்கு வேறு வேலைகள் பொறுப்புக்கள் இருக்கிறது. சொல்வது எளிது என நடந்ததற்கு நியாயம் கற்பிக்கும் முயற்சிகளாகவே இருக்கின்றன. விளையாட்டு போட்டிகளின்போது கடைபிடிக்கவேண்டிய விதிமுறைகளை கல்வித்திணைக்களம் தெளிவாக வரையறுத்துள்ளது.

  • மாணவர்கள் போட்டியின்முன் வைத்தியபரிசோதனைக்கு உட்படுத்தப்படவேண்டும்.

  • பெற்றோரின் ஒப்புதல் பெறவேண்டும்.

  • போக்குவரத்து பொலிசாருக்கு அறிவித்து வீதித்தடைகள் நீக்கப்படவேண்டும்.

  • பொதுவீதிகளில் நடக்கும் போட்டிகளை கண்காணிக்கவேண்டும்.

இந்த “துரதிஸ்ட ?” சம்பவம் நடைபெற்ற பின்னரே இவைகள் ஆராயப்பட்டு எந்தவித ஒழுங்குமுறைகளும் பின்பற்றப்படவில்லை என தெரியவந்தது. எனவே இந்த நிகழ்விற்கு யார் பொறுப்புச் சொல்ல வேண்டும். இங்கு விவாதிப்பதற்கு என்ன இருக்கிறது என்றே புரியவில்லை. இந்த மரணத்தின்பின் கல்விச்சமூகமோ பெற்றோர் ஆசிரியர் சங்கமோ அல்லது சிவில் சமூகமோ இன்னும் பிற பல குழுக்களோ என்ன உணர்வுகளை வெளிப்படுத்தினார்கள் எந்த நடவடிக்கைகளில் இறங்கினார்கள்? ஊடகங்கள் இதை ஏன் கவனத்தில் எடுக்கவில்லை? செய்திகளை வாந்தி எடுப்பதோடு ஊடகவியளாளனின் வேலை முடிந்துவிடுகிறதோ . மாணவனின் மரணத்திற்கான மருத்துவக்காரணம் ஒருபக்கம் இருக்கட்டும். அதுவும் என்ன என்பது இதுவரை தெரியாது, அலட்சியம் அலட்டிக்கொள்ளாத்தன்மையும் மெத்தனமும் கொண்ட அந்த நிர்வாகம் எதிர்கால பிரசைகளை எந்த வழியில் வழிநடத்தப்போகிறது?

சட்டங்களும் விதிகளும் எழுத்தில் மாத்திரம் இருந்தால் போதுமா? ஓர் உயிர்ப்புள்ள சமூகம், சமூக நீதிக்கான போராட்டக்குணம் இவைகளின் இருப்பே தெரியாத எடுப்பார் கைப்பிள்ளை அடிமாட்டுச்சமூகமாகவா நாங்கள் இருக்கின்றோம். சரி ஒரு கதைக்கு வைத்துக்கொள்வோம் அதே இராணுவத்தினரின் வாகனம் மோதி இச்சம்பவம் நடந்திருந்தால் எதிர்வினைகள் என்னவாக இருக்கும்? எத்தனை இழப்புக்களை சந்தித்த நம் சமூகம் இதுபற்றி அலட்டிக்கொள்ளாதது ஏன்?

விளையாட்டுப்போட்டிகளில் வெற்றியினை வேண்டி இல்ல ஆசிரியர்கள் தங்கள் பொறுப்பினை அலட்சியம் செய்யவில்லையா? என்று சொன்னால் மறுப்பதற்கு அவர்கள் என்னதான் சொல்லப்போகிறார்கள்.

ஒரு பாடசாலையின் ஆசிரியராய் அதிபராய் சமூகத்தில் எவ்வளவு மதிப்பையும் மரியாதயையும் பெறும் இவர்கள் தம் பாடசாலை பொதுப்பரீட்சை பெறுபேறுகளில் அதிக சித்திகளை பெற்றால் பெருமைப்பட்டுக்கொள்ளும் இவர்கள் இந்த மரணத்திற்கான தார்மீகப்பொறுப்பை ஏற்கத்தயாரில்லை. உழைக்காத மரியாதை. ஒழுக்கவிதிகளை மதிக்காத வழிகாட்டல்கள் இது தான் வேதனை அதை சப்பை கட்டிக் கட்டி ஆதரிக்கும் வலைச்சஞ்சார மாந்தர்கள்.

பிரித்தானியாவில் வைத்தியராக கடமை புரிந்து யாழ் வைத்திய பீடத்திற்கு உடற்கூற்றியல் பகுதிக்கு விரிவுரையாளராக வந்தவர் ரஜனி திரணகம; முறிந்த பனையின் ஆசிரியர்களில் ஒருவர். இங்கு அப்போது அரங்கேறிக்கொண்டிருந்த அராஜகங்களை பொதுவெளியில் விவாதித்தார். எடுப்பார் கைப்பிள்ளை சமூகம் என்றும் விடுதலை அடையாது, குற்றம் செய்பவன் மட்டுமல்ல அதனை எதிர்க்காதவனும் பங்காளியே எனக்கருத்துப்பட சொன்னவருக்கு கிடைத்த வெகுமதி மரணம். அதனை வீரம் மிக்க தற்கொலை எனக்கூட விமர்சித்தார்கள். உண்மையான சமூக அக்கறை உள்ளவன் வாய்மூடி மவுனியாய் இருக்க முடிவதில்லை. நீதிமான்கள் என அவர்கள் தம்மைக்காட்டிக்கொள்வதல்ல. ஆதங்கம், கோபம், அறச்சீற்றம் என்றெல்லாம் புகழ்பாடத்தேவையில்லை. பிழை என்பதை துணிந்து சொல்ல முயல்வதுதான் சமூக அக்கறை.

இங்கு நடந்த இம்மரணத்தின்பின் அந்த குடும்பத்தின் அவலத்திற்கு யார் ஆறுதல் சொல்ல முயன்றார்கள். சிலாபத்தில் மரதன் போட்டியில் கலந்துகொண்ட மாணவியும் இறந்துபோனாள் அவளிற்கு மருத்துவ பரிசோதனை மூன்று நாட்களின் முன்பு செய்ததாக சொன்ன ஊடகங்கள் தாயாரின் கருத்தையும் பிரசுரித்திருந்தது. யாழ் போதனா வைத்தியசாலையில் காலில் சத்திரசிகிச்சைக்குப்போன குழந்தை பிழையான காலில் அறுவை சிகிச்சை நடந்ததை கண்ட தாய் அழுதுகுளற வைத்தியர் மன்னிப்புகேட்டு மறுபடியும் சத்திரசிகிச்சையை சரியாக செய்தார். பிழையான முடிவில் கை துண்டிக்கப்பட்ட சட்டக்கல்லூரி மாணவிக்கு நிவாரணமும் செயற்கை கை பொருத்த பண உதவியும் கிடைத்தது. இதனை ஊடகங்கள் கவனத்தில் எடுத்ததால் கிடைத்தது. முதலில் கவனிக்க வேண்டியது அசட்டைத்தனம். நடந்தபின்பு அது நடந்துவிட்டது என்ன செய்யலாம் என்று அசட்டையாய் இருந்தவர் கேட்பதும், எனக்கு எத்தனை வேலை என சாக்குப்போக்கு சொல்பவர்களையும் நாம் சகித்துக்கொண்டே போகவேண்டுமா?

சமூக நீதி கேட்பது ஒரு சாராரின் ஏகபோகம் அல்லவே யாரும் யாரையும் நீதியின் அடிப்படையில் கேள்வி கேட்கலாம். நீதியை தமக்கு ஏற்றமாதிரி வளைப்பதைத்தான் ஏற்கமுடியாது. யார் தம் கடமையிலும் மற்றும் பிற பல முறைகளிலும் நீதிக்குப் புறம்பாக நடந்து கொள்கிறார்களோ அவர்கள் அதற்கு சரியாக பதில் சொல்லவேண்டுமல்லவா. ஆனால் யார் பிழை செய்தார்கள் என்பதிலேயே நீதியின் அடிப்படையில் அதை அலசுவதா, நடவடிக்கை எடுப்பதா இல்லையா என முடிவு எடுப்பது தான் அவலம்.

ரிசானாவின் மரணம் எல்லோர் வாய்களிலும் புகுந்து புறப்பட்டது. தலை துண்டிக்கும் காண் ஒளியின் தீவிரமும் குடும்பத்தின் வறுமையும் பொறுப்பானவர்களின் அலட்சியமும் அவளின்மேல் எத்தனை பேரிற்கு அனுதாபத்தை வரவழைத்தது. அதன்பின்பு விவாதங்கள் மற்றையோருக்கு நடந்தவை என வந்து இன்று அந்நாட்டிற்கு இனிமேலும் பணிப்பெண்களை அனுப்புவதில்லை என அரசு முடிவுசெய்கிறது, வயதெல்லையை பெண்களிற்கு அதிகரிக்கிறது. இதை முன்பே செய்திருக்கலாம். இல்லையென்றால் சமாளிக்க முடிந்தளவு எதையும் திருத்திக்கொள்ள நாம் முயல்வதுகூட இல்லை. ஊடகங்கள் இதனை தொடர்ந்து காவி இருக்காவிடில் “துரதிஸ்டம்” என்பதுடன் முடிந்திருக்கும்.

இலக்கியத்தை மானிடத்தின் மகோ உன்னதங்களின் பிரதிபலிப்பாகக் கொண்டாடுகிறோம். படைப்பாளிகள், சமூகத்தின் கண்களாக காதுகளாக சமூகத்தை அவதானித்து படைப்புகளில் பிரதிபலிப்பவன். எழுதுவது மாத்திரம் படைப்பாளியின் வேலையல்ல பிழைகளை தட்டிக்கேட்கவும் அவனுக்கு மனப்பலம் இருக்கவேண்டும். இலக்கியம் படைப்பவர்களும் ஆர்வலர்களும் கண்டுகொள்ளாமலோ, நமக்கேன் வீண்வம்பு என விலகி இருக்கவோ தலைப்படும்போதுதான் படைப்பின் ஆழமும் விகாசிப்பும் பற்றி நாம் கேள்வி எழுப்பவேண்டியுள்ளது. “மன்னவனும் நீயோ” என குலோந்துங்கனைப் பார்த்து அறம் பாடிய துணிச்சலான கம்பனையும், “கன்றினைக் கொன்றேன்” என்று பதை பதைத்த மனுநீதிச் சோழனையும் “முல்லைக்கு தேர் ஈந்த” பாரியையும், “மயிலுக்கு போர்வை கொடுத்த” பேகனையும், அரசவையில் தனியாய் நின்று “தேரா மன்னா” என்று ஏக வசனத்தில் நீதி கேட்ட கண்ணகியின் காவியத்தையும் தலைமேல் வைத்து கூத்தாடவும் பேச்சுக்களிலும் பட்டிமன்றங்களிலும் சுவையூட்டியாய் பயன்படுத்தவுமா பழந்தமிழன் விட்டுச்சென்றான். நம் சமூகம் நாம் தான் கேட்கவேண்டும்… இதற்காக ஜ. நாவிற்கா போகமுடியும் ?