கருமை விழிகள்..

அந்த
கருமை விழிகள்..

என் வெண்படலத்தின் மீது
மாய கோலமிட்ட
முதல் கண்கள்!

திருட்டுத்தனம்
சிம்ம சொப்பனமாய் – அவள்
திருட்டுப்பார்வை.

francis amalraj

கவிஞர் பி.அமல்ராஜ்

அவள்
வெட்டி விழிக்கையில்
முட்டித் தெறிக்கும் போதை
என் கண்களில்.

என்
இமைகளுக்கு முட்டுக்கால் கொடுத்து
நிற்க வைத்ததும்
இந்த
ஒற்றை பார்வைக்காகவே!

காற்றில் வழிந்தோடும்
ஒளிக்கீற்றுக்களை பிடித்து
ஒரு மின்மினி செய்து
சொட்டு ஒளியில் – என் கண்கள்
உண்ணா நோன்பு நடத்தியதும்
இந்த
விழிகளை விழுங்கவே!

அந்த பார்வையின்
ஒரே வீச்சு,
ஒன்பதுமுறை செத்தது மூச்சு!

பிடிமானம் இன்றியே
என்
இமைகள் தொங்கியது
அவள்
ஓரப்பார்வையின்
ஒற்றைக்கீற்றில்!

அந்த
கரும் விழிகள்
கடன் கொடுக்கலாம் எனக்கு,
மரித்தலை விற்று
உயிர்த்தலை வாங்குவதற்கு!

  — கவிஞர் பி.அமல்ராஜ்

மகளிர்தினம் – பெண்களுக்கு ஒரு மடல்

அன்பின்
பெண்ணே,

அன்பனின்
அன்புக்கடிதம்.
francis amalraj
எனது பேனா,
சிலவேளை
உன்னை
சிரிக்கவைக்கலாம்.
சிலவேளை
கொதிக்கவைக்கலாம்..
கொதித்தாலும் பரவாயில்லை..
தண்ணீர்
கொதிக்கும்வரை – அது
தேநீராவதில்லை..

பெண்ணே,
எனக்கு – நீ
பெண்ணாய் தெரிந்தபோதேல்லாம்
என்
தெய்வமாகவே தெரிகிறாய்.

சிலவேளைகளில்
தெய்வமாயும்
சிலவேளைகளில்
பொய்மையாயும்.

புதுமைப்பெண் – உன்னை
கையெடுத்து கும்பிடுகிறேன்
புதுமையை
உனது
புத்தியில் வை.
கத்தியில் வேண்டாம்.

உன்னை
பலர்
விரும்புகிறார்கள்.
அவர்கள்தான் – உன்னை
பெண்ணாய் பார்ப்பவர்கள்.
சிலர்
வெறுக்கிறார்கள்.
அவர்கள் – இன்னும்
பேயாய்த்தான் பார்க்கிறார்கள்.
இந்த
பேயாய்ப் பார்ப்பவர்களுக்காய்
பெண்ணாய்ப் பார்ப்பவர்களை
தண்டிக்காதீர்கள்.

உங்கள்
உதடுகளை
சாயமிடுகிறீர்கள்
அழகுதான்,
அவற்றோடு – உங்கள்
வார்த்தைகளுக்கும்
கொஞ்சம் – நாகரீக
சாயம் கொடுங்களேன்..

பத்துமாதம் பொறுப்பது
உங்கள் குலம்.
தலைவணங்குகிறேன்.
அதற்காய்
பத்தே நிமிடத்தில்
எவரையும்
தூக்கி எறியாதீர்கள்
உங்கள் – சுடும்
வார்த்தைகளால்..

உங்களில்
ஒன்றுமட்டும்
எனக்கு
இன்றுவரை
புரிந்ததேயில்லை.
உங்கள்
மனதிற்கும்
உதட்டிற்கும்
ஏன்
இவ்வளவு இடைவெளி..??

உங்களுக்கு
வரம்
கண்ணீர்.
எதிரி
பிடிவாதம்.

உங்களுக்கு
இரண்டு
குறை
ஒன்று கோவம்
இன்னொன்று பாவம்.

ஊரையே
எரித்தவர்கள் நீங்கள்.
ஏன்
ஊர்வாய்க்குள்
முடிந்துபோகிறீர்கள்?

பெண்ணே,
உங்கள் புன்னகை
சூரியன்..
நாங்களோ
தாமரை..

தாமரைகள்
மலர்வதை
என்றுமே
சூரியன்
வெறுப்பதில்லை.

எப்பொழுதும்
புன்னகையுங்கள்.

உங்களுக்கு
அதிகம் தெரிந்தவை,
ஒன்று
வீட்டு வட்டம்.
இன்னொன்று
பாச விட்டம்.

இவை
இரண்டுமே
உங்களுக்கு
வியாதிகள்தான்..
வலி மட்டுமே கொடுப்பவை.

வீட்டு விட்டத்தை
தாண்டுபவள்
உலகை படிக்கிறாள்.
பாச விட்டத்தை
தாண்டுபவள்
வாழ்க்கையைப் படிக்கிறாள்..

நீங்கள்
உலகையும்
வாழ்வையும்
படித்தாலே போதும்..
பாரதியின் கனவை
பத்திரமாய்
காப்பாற்றி விடுவீர்கள்.

உங்களை
உலகம் சுமக்கவில்லை.
நீங்கள்தான்
உலகை
சுமக்கிறீர்கள்.
தளர்ந்து போகாதீர்கள்,
உலகம்
ஆட்டம் கண்டுவிடலாம்.

இறுதியாய்,
பெண் – எமக்கு
தாயுமானவள்,
தாரமுமாகுபவள்,
ஆக, – பெண்
எமக்கு
இரட்டைக் கடவுள்கள்.

இதை
நான்
வாழ்ந்திருக்கிறேன்.
வாழுவேன்.

பெண்களாய் வாழ
பெண்களுக்கு
வாழ்த்துக்கள்.

— கவிஞர் அமல்ராஜ்.

நண்பனும் தடுப்பும்!

அது
விரக்தி சப்பித்துப்பிய
பேய்கள் அற்ற சுடுகாடு!

காற்சட்டையும் வெள்ளை
மேற்சட்டையும் ஓட்டை
முதுகு விரிய நடந்தவன்
நிமிர்த்தி வைத்த மண்புழுவாய்
ஒட்டி ஒல்லியாய்…francis amalraj

மிருகக்காட்சி சாலைக்குள்
இலகுவாய் புகுந்த எனக்கு
இந்த
சிறைச்சாலைக்குள்
அத்தனை தடுப்புக்கள்..

ஐந்து ஆண்டுகள்
தன்னோடு மட்டும்
பேசிக்கொள்ளும்
அவனோடு பேச
‘ஐந்தே நிமிடம்’!
அங்கு,
செத்துப்போன
மனசாட்சியும் மனிதாபிமானமும்
எனக்கு
கொடுத்த சுதந்திரம்!

‘நண்பா’ தவிர
என்வாயில் வார்த்தைகள் இல்லை.
‘ம்ம்ம்’ தவிர
அவன்பேச சக்தியும் இல்லை.
எமக்கிடையிலிருந்த
கம்பி வலையில்
சிக்கி சீழ் வடித்துக்கொண்டிருந்தது
எம் நட்பு!

நான்கு நிமிடம்!
கண்நீரைத்தவிர
அவனிடம் – நான்
எதையும் எதிர்பார்த்திருக்கக் கூடாது!
ஆசையாய்
‘நண்பா’ என ஒரு வார்த்தைகூட…

அதையும்
கண்ணீராலேயே கழுவி
அவன்
கைகளை பற்றியிருந்த
எனது கைகளில்
சொட்டு சொட்டாய் கொட்டிவிட்டான்!

ஐந்து நிமிடம்!
விலக மனம் இல்லை
அகலவும் முடியவில்லை..
காவலாளி போ சொல்லும்வரை
அவன்
கண்ணீரை நிறுத்த முடியவில்லை.
இறுதியில்
ஒரே வார்த்தை!
“நண்பா,
என்னை
துரத்தி துரத்தி
இயக்கத்திற்கு பிடித்தாரே
அந்த அண்ணர் – அவரிடம்
என்னை வெளியில் எடுக்க
உதவி கேட்டுப்பார்..
அவரால் முடியும்..!”

— கவிஞர் பி. அமல்ராஜ்