===============================================
பேருந்திலிருந்து….
ஏற்றுக்கொண்டவள்
#வாழ்ந்து காட்டுவதைவிட மிகச்சிறந்த பழிவாங்கல் எதுவுமில்லை. #சும்மாவா சொன்னாங்க
மன்னார்…. இது நமது பூமி
======================= #மன்னார்_அமுதன்
இது நமது மண்
பாட்டன்களின் பூமி
நம் பிள்ளைகளின் சொத்து
இங்கேயே பிறந்தோம்
எங்கெங்கோ வாழ்ந்தாலும்
இங்கேயே இறப்போம்…
மண்ணின் எழுச்சியிலும்
மக்களின் வளர்ச்சியிலும் நாமிருப்போம்
நாம் மட்டுமே இருப்போம்…
நம்மை ஒதுக்கிவிட்டொரு மண்ணை
இங்கு… எவனும் படைக்க முடியாது…
காலைச்சுற்றும் பிள்ளைகளையும்
கண்ணீர் சிந்தும் மனைவியையும்
விட்டுவிட்டுப் போராடிக் கொண்டிருக்கிறோம்
அறியாமையின் விடுதலைக்காக….
யோசித்துப் பார் தோழா…!
இது சிவபூமியா…
கிறித்தவ மறைமாவட்டமா…
மதங்களை எப்போது கண்டடைந்தோம்…
மனிதத்தைத் தொலைத்த நாட்களில் தானே….
மூர்வீதி முஸ்தபாவிற்கு
ஈத் முபாறக் சொன்னபோது
ஈரக் கண்களோடு அணைத்துக்கொண்டான்
அவனது அணைப்பில்
அன்பு இருந்தது
எப்போதும் எமக்குள் இப்படியில்லையே..
எவனெவனோ எம்மை
ஆழ வந்தபின்தான் இப்படியாகிவிட்டது
நாளொரு குழுமம்
பொழுதொரு பதிவென
திரி தூண்டப்பட்டிருக்கிறது மதம்…
திகுதிகுவென எரிகிறது மனிதம்…
எம் மண்ணை….. எம் மக்களுக்கே…
எவனோ ஒருவன் அளந்து கொடுக்கிறான்…
அதற்கு வரி வேறு…
வட்டி வேறு…
பிரித்தாளும் சூழ்சியிலே
மதத்திற்கு முதலிடம்
இனத்திற்கு இரண்டாமிடம்
பாலியல் துஷ்பிரயோகத்திற்கு மூன்றாமிடம்…
மனிதத்திற்கு இடமேயில்லை…
இது எனது பூமியல்ல…
இது உனது பூமியுமல்ல…
இது நமது பூமி…
நமது உரிமை…
சர்க்காரின் அடிமையிடம் கேட்டுப்பெற
இது சலுகையுமில்லை …. உரிமை…
மக்களே…!
நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள்…
இது உங்கள் மண்…
உங்களுக்கு மட்டுமேயானது…
வரி இல்லை… வட்டி இல்லை…
சர்க்காரின் அடிமையாகிய அவனைப் போல்
டாஷைப் பிறப்பிடமாகவும்
டாஷை வசிப்பிடமாகவும் கொண்டு
வாழ்நாளெல்லாம் டாஷாக வாழ்ந்து
டாஷில் இறந்துவிடும்
அந்த டாஷ் நாமில்லையே…
டாஷை எதைக்கொண்டாவது நிரப்புங்கள்…
இதுவும் உங்களது உரிமைதான் …
#மன்னார்_அமுதன்
“ஏழைகளின் குதிரை” வரவும் வரலாறும்
அறிமுகம்:
மன்னார் மக்களின் அன்றாட வாழ்விலிருந்து பிரிக்கமுடியாத ஒரு விலங்கினமாக கழுதைகள் காணப்படுகின்றன. இன்று அளெசகரியத்தை ஏற்படுத்தும் ஒரு உயிரினமாக கழுதைகள் எதிர்ப்புணர்வோடு மலினமாகப் பார்க்கப்பட்டாலும், அவை மனிதவரலாறு முழுவதும் உதவும் கால்களுடனும், சுமைதாங்குவதற்கென்றே படைக்கப்பட்ட மிருகங்களாகவும் தம்மை அடையாளப்படுத்திக்கொண்டு எம்மோடு நடந்து வருகின்றன.
மன்னார் நகரசபைக்கு உட்பட்ட பகுதியில் 375 கழுதைகளும், மன்னார் நகரம் முழுவதுமாக ஆயிரத்திற்கும் மேற்பட்டதாகவும் இலங்கைத்தீவு முழுவதுமாக 3000ற்கு மேற்பட்ட கழுதைகள் காணப்படுவதாகவும் அண்மையில்(2012) மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் கூறுகின்றன. உலகம் முழுவதும் இதன் எண்ணிக்கை 41 மில்லியனாக (2006) இருக்கின்ற போதிலும் 1995 ஆண்டுடன் ஒப்பிடும் போது (43.7 மில்லியன்) இதன் தொகை குறைந்துள்ளது கவனத்திற்குரியது. இலங்கையில் புத்தளம், கற்பிட்டி, ஆகிய பகுதிகளில் கழுதைகள் வாழ்ந்தாலும் மன்னாரில் தான் அதிக அளவில் வாழ்கின்றன. இதனால் மன்னார் கடந்த காலங்களில் “கழுதை நகரம்” என்று செல்லமாக அழைக்கப்பட்டதுடன் அதிக எண்ணிக்கையிலான கழுதைகளைக் கொண்டவர்கள் பெரும் தனவந்தர்களாக அறியப்பட்ட காலப்பகுதிகளும் வரலாற்றில் உண்டு.
உடலுழைப்பிற்கு பெயர்பெற்ற கழுதைகளை உரிமைகோருவதற்கு எவருமற்ற சூழலை நவீன காலமும், அதன் நிமித்தமான தொழில்நுட்பமும் ஏற்படுத்தியுள்ள இன்றைய நாட்களில் கட்டாக்காலிகளாக சுற்றித்திரியும் கழுதைகளால் ஏற்படும் விபத்துகளின் அதிகரித்த எண்ணிக்கை காரணமாக அவற்றை மன்னார் பிரதேசத்தில் இருந்து வெளியேற்றுவதற்கான செயற்திட்டங்கள் மாவட்டமட்டத்தில் இடம்பெற்றன. எனினும் அவை பலனளிக்கவில்லை. இத்தகைய சூழலில் கழுதைகளைப் பழக்கி பிரதேச சுற்றுலாத்துறை வளர்ச்சியில் பயன்படுதுவதன் மூலம் கழுதைகளைக் காக்கவும், மக்கள் மத்தியில் அவற்றிற்கான புகழை மீண்டும் ஏற்படுத்தவும் பிரிஜ்ஜிங் லங்கா போன்ற நிறுவனங்கள் முயன்றுவருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
கழுதைகளின் வாழ்க்கையும், இயல்பும்:
ஈகியூஸ் அசினஸ் (Equus asinus) எனும் அறிவியல் பெயர்கொண்டு அழைக்கப்படும் காட்டுக்கழுதை இனமானது, குதிரை மற்றும் வரிக்குதிரை குடும்பத்தைச் சார்ந்த தாவர உண்ணியாகும். பொதி சுமக்கும் கழுதைகளின் வாழ்க்கைக் காலமானது ஏழைநாடுகளில் 12-15 வருடங்களாகவும் பணக்கார நாடுகளில் 30-50 வருடங்களாகவும் கணக்கிடப்படுகிறது. உரிய பராமரிப்பின் கீழ் சராசரியாக 40 வருடங்கள் வரை கழுதைகள் வாழும். எனினும் கழுதைகலின் வயதை 1 வருடத்திற்கு ஒரு முறை கணிப்பதில்லை. ஏனெனின் ஒரு பெண் கழுதையின் கற்பகாலமானது (gestation) ஒரு வருடமும் இரண்டு வாரங்களும் ஆகும்.
கழுதைகளின் அளவானது (size) அவற்றின் இனத்திற்கு ஏற்ப மாறுபடும். பொதிக்கழுதைகளின் தோள் உயரமானது 80-150 செ.மீட்டராகவும், வாலின் நீளம் 42 செ.மீ, தலைமுதல் பின்பகுதி வரையான நீளம் 200செ.மீட்டராகவும் உள்ளது. மார்புச்சுற்றளவையும் (Heart Girth squared) நீளஉயரத்தையும் பெருக்கி வரும் நிறையை 11,877 ஆல் வகுத்து இவைகளின் எடையைக் கணக்கிட(monograph) முடியும் (Source: Carroll& Huntington, 1988). கழுதைகள் தமக்குள் தொடர்புகளை ஏர்படுத்திக்கொள்ள மிகையொலிகளைப் பயன்படுத்துகின்றன. கழுதை கத்துவதன் மூலம் (bray) 12 கி.மீ அப்பால் உள்ள தனது இனத்தை தொடர்புகொள்ளக்கூடியது. இதற்கு அதன் நீண்ட காதுகளும், பலமான தொண்டையமைப்பும், சக்திமிக்க நுரையீரலும் உதவுகின்றன.
கருப்பு, சாம்பல், பழுப்பு / கபில நிறங்களைக் கொண்ட கழுதைகள் 80 – 275 கிலோ கிராம் நிறையுடையதாக உள்ளதோடு அதன் கால்கள் கற்பாறைகளிலும், உயரமான மேட்டிலும், உயர்ந்த கட்டிடப் படிகளிலும் ஏறக்கூடியவாறு நன்கு பலம் உள்ளதாக அமைந்துள்ளது. தனக்கோ, தன் குட்டிக்கோ அச்சுறுத்தல் ஏற்படுத்தப்படும் போதோ அல்லது கழுதைகள் குழப்பமடையும் போதோ எதிரில் இருப்பவர்களை கடித்தோ , முன்னங்கால்களால் அடித்தோ, பின்னங்கால்களால் உதைத்தோ தனது எதிர்ப்பை வெளிக்காட்டும்.
சுமார் 40மில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்ட காட்டுவிலங்குகளாக மனிதநாகரிகத்திற்கு அறிமுகமாகும் காட்டுக்கழுதைகள் (wild ass) கி.மு4000 முதல் கி.மு 3000 வரையிலான காலப்பகுதியில் வீட்டுவிலங்குகளாக பழக்கப்படுத்தப்பட்டு எகிப்து அல்லது மெசபடோமியாவிலிருந்து உலகின் பிறபகுதிகளுக்கு பரவலாக்கப்பட்டுள்ளது. இவை சுமார் 5000 ஆண்டுகளாக தொழிற்பாடுகளில் ஈடுபடுத்தப்பட்டுவருவதாக வரலாற்று ஆவணங்கள் கூறுகின்றன. கொலம்பஸ் அமெரிக்கா நோக்கிச் சென்ற போது அவருடன் 4 ஆண்கழுதைகளையும், 2 பெண்கழுதைகளையும் கொண்டு சென்றார் என்ற அரிய தகவலானது மிகவும் ஆச்சரிமூட்டக்கூடியதாக உள்ளது.
இன்று இலங்கையில் காணப்படும் கழுதைகளானது எகிப்து நாட்டைச் சேர்ந்த அட்லஸ், ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த சோமாலிய கழுதைகள் மற்றும் சிரியா நாட்டைச் சார்ந்த கழுதைகள் இனங்களாக அறியப்படுகிறது. இவற்றுள் மன்னார் பிரதேசத்தில் காணப்படும் கழுதைகள் சோமாலிய கழுதைகள் (Equus Africanus Asinus) வகையைச் சார்ந்தவையாகவும், வணிக நோக்கிற்காக கி.பி.8ஆம் நூற்றாண்டில் இலங்கைக்கு வருகை தந்த அரேபிய வணிகர்களால் இவை இங்கு கொண்டு வரப்பட்டு வர்த்தக நோக்கில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
பள்ளிக்கூடங்களில் மெள்ளக்கற்கும் சிறுவர்களையும், தொழிற்கூடங்களில் பணியாற்றாமல் சோம்பிக்கிடக்கும் தொழிலாளர்களையும் “முட்டாள் கழுதை” , “சோம்பேறிக் கழுதை” எனும் வசைமொழிகளைப் பயன்படுத்தி கீழ்மைப்படுத்துவதுண்டு. எனினும் இந்த வசைமொழிகள் கழுதைக்கு சற்றும் பொருத்தமற்றவை. மனிதர்களைச் சார்ந்து வாழும்(symbiotic) தன்மைகொண்ட கழுதைகள், நாய்களை ஒத்த அறிவுக்கூர்மையையும், விசுவாசத்தையும் தன் எஜமானர்களிடம் வெளிக்காட்டக்கூடியவை என்பன அறிவியல் ஆய்வுகளின் மூலம் நிரூபனமாகியுள்ளன. பெரும் பாரங்களைச் சுமக்கவும், பாரங்களுடன் மலைகளில் ஏறவும், மந்தைகளையும் பண்ணைகளையும் பாதுகாக்கவும் கழுதைகள் இன்றும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. கற்பாறைகளுடன் கூடிய மேட்டுநிலப்பரப்பிலோ அல்லது உலர்ந்த தாழ்நிலப்பாலைகளிலோ வாழுவதையே கழுதைகள் விரும்புகின்றன. அத்தகைய உலர்ந்த தாழ் மற்றும் வரண்ட நிலஅமைப்பைக் கொண்ட மன்னார் பிரதேசத்தில் கழுதைகள் அதிகரித்துக் காணப்படுவதற்கு இங்குள்ள பருவகாலமும், நிலஅமைப்பும் முக்கியப் பங்காற்றுகின்றன. கழுதைகள் கூட்டமாக வாழுவதையும், தாம் பிறரால் அரவணக்கப்படுவதையும் விரும்பும் தன்மை கொண்டவை. இவைகள் கூட்டமாகவோ, குதிரைகளுடனோ, மட்டக்குதிரைகளுடனோ (pony) சேர்ந்து திரிவதை மன்னார் பிரதேசத்தில் காணக்கூடியதாக உள்ளது.
சமூக அந்தஸ்து மற்றும் பொருளாதார வளர்ச்சியில் கழுதைகளின் தாக்கம்:
கழுதைகளினால் பல பயன்பாடுகள் இருந்தாலும் குறிப்பாக உப்பளங்களிலும், வயல்வேலைகளிலும் (புறநானூறு-15 நெட்டிமையார், ஹத்திகும்பா கல்வெட்டு, புறநானூறு 392 -ஒளவையார்), சலவைத் தொழிலிலும், மீனவர்கள் மீன்களையும் வலைகளையும் சுமந்து செல்லவும், விறகுகளை வெட்டிச் சுமக்கவும், மனிதர்களைச் சுமந்து செல்லவுமென பொதிக்கழுதைகளின் பயன்பாடு அதிகரித்துக் காணப்பட்டதுடன் இச்சமூகங்களில் கழுதைகள் மிகப்பெரிய சொத்தாக கணிக்கப்பட்டு வந்தன. சீதனம் வழங்கலில் கழுதைகளின் எண்ணிக்கை பிரதானமானதாகவும், அதிக கழுதைகளை வைத்திருப்பவர்கள் தனவந்தர்களாகவும் மதிக்கப்பட்டனர். இவை எல்லாவற்றிற்கும் மேலாக ஏளனத்துடன் நோக்கப்படும் இக்கழுதைகள் தான் போர்த்துகேயர்கள் மன்னார் பிரதேசத்தில் சென்.ஜோர்ஜ் கோட்டையைக் கட்டும் போது பெரும் பாறைகளை அனாயசமாக சுமந்து உதவிசெய்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் எழில்நிறைந்த மன்னாரின் பெருநிலப்பரப்பு எவ்வாறு நன்னீருக்கும், நெல்லுக்கும் பெயர்பெற்றதோ அதே போன்று மன்னார் தீவும், பிரதேச நிலப்பரப்பும் பெருமளவிலான தென்னந்தோட்டங்களின் அமைவிடமாக உள்ளது. குருத்துகளை அழித்து தெங்கு சாகுபடியை பெருமளவில் வீழச்செய்த தென்னம்வண்டுகளையும் (Coconut rhinoceros beetles), ஓலைகளை அழிக்கும் பூச்சியினத்தையும் (coconut caterpillar) எதிர்த்து எத்தகைய கிருமிநாசினிகளும், மனிதர்களின் எதிர்நடவடிக்கைகளும் பயனளிக்காத அக்காலப்பகுதியில் தோட்டங்களில் வளர்த்த கழுதைகள் எழுப்பும் மிகையொலிக் (>80dB) கத்தலானது காண்டாமிருக வண்டுகளை மரங்களின் அருகில் அண்ட விடாமல் துரத்தியுள்ளதாக அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படாவிட்டாலும் இன்றும் நம்பப்படுகிறது. அத்துடன் கழுதையின் விட்டை (dung), சிறுநீர் காரமணமானது இளங்குருத்துகளையும், ஓலைகளையும் தின்னும் வண்டுகள், பூச்சிகளை ஈர்க்கிறது. பூச்சிகள் விட்டையில் முட்டைகளை இடுகின்றன. குஞ்சுகள் பொரிப்பதற்கு முன்னமே கழுதை விட்டை விரைவாகக் காய்ந்து விடுவதால் மேற்கொண்டு இனவிருத்தி அடையாமல் அவ்வினம் அழிவடைகிறது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே இவைகள் பூச்சிக்கொல்லியாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளன. வளர்முக நாடுகளில் செல்லப்பிராணியாக கழுதைகள் வீடுகளில் வளர்க்கப்பட்டு வருகின்ற போதிலும் 96% கழுதைகள் ஏழைநாடுகளில் பொதிசுமக்கும் கழுதைகளாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மனித உழைப்பிற்கு வழங்கப்படும் கூலியோடு ஒப்பிடுகையில் கழுதைகள் தம் எஜமானர்களின் பொருளாதாரத்தைப் பெருக்குவதில் பெரும்பங்காற்றுவதை அறியமுடிகிறது. எனினும் மன்னார் பிரதேசத்தில் கழுதைகள் இன்று கைவிடப்பட்ட நிலையில், காட்டு விலங்குகளைப் போல் சுற்றித் திரிகின்றன.
எகிப்தின் குடும்ப ஆட்சி முறைகளில் (dynasty 4) கிமு 2675 க்கும் கி.மு 2565 இடைப்பட்ட காலப்பகுதியில் 1000ற்கும் மேற்பட்ட கழுதைகளை உடையவர்களே சமூகத்தில் கனவான்களாக போற்றப்பட்டனர். எகிப்தின் ஆட்சியாளர்களான அரசர் நேமர் , அரசர் ஹோர் அஹா (King Narmer or King Hor-Aha) அவர்களின் எலும்புக்கூடுகள் 2003 ஆம் ஆண்டில் தோண்டியெடுக்கப்பட்டன. அப்புதைகுளியில் 10 கழுதைகளும், மனிதர்களுக்கு வழங்கப்படும் அதியுச்ச கெளரவம் வழங்கப்பட்டு அரசனோடு சேர்த்து புதைக்கப்பட்டிருந்தமையானது கழுதைகளுக்கு வழங்கப்பட்ட முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது.
இத்தாலி மற்றும் சீனா ஆகிய நாடுகளில் கழுதைகளின் இறைச்சி உணவாகப் பயன்படுத்தப்படுவதுடன் இத்தாலியில் 2010 ஆண்டில் மட்டும் கிட்டத்தட்ட 1000 கழுதைகளுக்கு மேல் இறைச்சிக்காக கொல்லப்பட்டுள்ளன.
கதைகளிலும் பழமொழிகளிலும் கழுதைகள்:
ஆதிகாலம் தொட்டே எமக்கான வரலாறானது செவிவழிச் செய்திகளாகத் தான் கடத்தப்பட்டிருக்கிறது. கேட்பதில் இன்பம் மிகைகொள்ளும் எமது இளமைக்காலம் கதைகளால் நிரம்பி வழிந்திருந்தது. அன்றும், இன்றும் எமது பாட்டிகளும் தாயும் சொல்லும் கதைகளில் முல்லாவோடு, கழுதைகளும் கதைமாந்தர்களாக உலாவருகின்றன. மதப்புத்தங்கங்கள் முதல் கதைப்புத்தகங்கள் (பஞ்சதந்திரம், முல்லா, ஈசாப் நீதிக் கதைகள், விலங்குப்பண்ணை) வரை எல்லா இடங்களிலும் கழுதைகள் நீக்கமற நிறைந்திருக்கின்றன.
வரலாறு முழுவதும் கழுதைகள் விரவிக்கிடந்தாலும், நன்மைகள் பல செய்திருந்தாலும் கழுதைகள் மீதான எதிர்ப்புணர்வு உலகம் முழுவதும் எப்போதும் இருந்துகொண்டே தான் இருக்கிறது. கழுதை என்ற பதத்தைப் பயன்படுத்தி மனிதர்களைக் கீழ்மைப்படுத்துவதற்கான பழமொழிகளுக்கும் எம் சமூகத்தில் குறைவில்லை. அவ்வாறான வசைமொழிகளால் விலங்குகளுடன் மனிதனை ஒப்பிட்டு விலங்குகளைத் தான் கீழ்மைப்படுத்துகிறோம். கீழ்க்குறிப்பிடப்படும் பழமொழிகள் நாட்டாரியலில் வழங்கப்படும் சொலவடைகளை அச்சேற்றுவதற்கேயன்றி எச்சமூகத்தையும் தாழ்த்துவதற்காக அல்ல என்பதை இவ்விடத்தில் கருத்திற் கொள்ளவேண்டும்.
பழமொழிகள்:
ஜோர்ஜ் ஓர்வெல் (George Orwell) எழுதி மொழிபெயர்க்கப்பட்ட உருவகப்புதினமான விலங்குப்பண்ணையில் (Animal Farm – 1945) வரும் பெஞ்சமின் எனும் கழுதையைப் பற்றிய வர்ணணையானது இப்படி இருக்கிறது “ஆகக்கூடிய கோபக்குணம் கொண்ட கழுதைதான் அந்தப் பண்ணையின் ஆரம்பவிலங்காகும். கழுதை கதைப்பது குறைவு. கதைப்பினும் அவை உதவாக்கரை எண்ணங்களாகவே இருக்கும். உதாரணமாகக் கடவுள் தனக்கு வாலைப் படைத்தது ஈக்களைத் துரத்துவதற்காக என்றாலும் காலக்கிரமத்தில் தனக்கு வாலில்லாமல் போனதால் ஈக்களும் இல்லாமல் போய்விட்டன என்று கழுதை கூறியது”.
அப்பண்ணையில் வசித்து வந்த அறிவார்ந்த விலங்குகளில் ஒன்றாக இருந்ததோடு பன்றிக்கு இணையாகப் படிக்கத் தெரிந்த விலங்குமாக பெஞ்சமின் திகழ்ந்தது. கழுதைகள் வெளிக்காட்டும் மிகக்குறைவான எதிர்ப்புணர்வாலும், மிகையான சகிப்புத்தன்மையாலும், மெள்ள நகர்வதாலும் பிறவிலங்குகளை விட எளிதில் தாக்குதலுக்கு உள்ளாகிக் காயமடைகின்றன.
கழுதைகளின் மகத்துவமும் மருத்துவகுணமும்:
வேத காலத்தில் (ஹரிவம்சம்-57) கழுதைகளுக்கு மதிப்பு இருந்ததாகத் கூறப்படுகிறது. அதர்வன வேதமும் (9-6-4), ஐதரேய பிராமணமும் (4-9-1) முறையே இந்திரனும் அக்னியும் கழுதை வாகனத்தில் சென்றதாகக் கூறுகிறது. கிரேக்க நாட்டில் ஒலிம்பிய தெய்வமான ஹெபைஸ்டோஸ், டயோனிசிஸ், இந்திய கிராம தேவதையான சீதளா தேவி (மூதேவி) ஆகியோருக்கும் கழுதையே வாகனம் ஆகும். ரிக் வேதத்தில் கழுதைகள் “கர்தபா” எனும் சொல்லால் குறிக்கப்படுகின்றன. இருபதாம் நூற்றாண்டில் சதக்குப்புலவர் என்பவர் தான்வாழ்ந்த மன்னார் சூழலைக்கொண்டு “கழுதையும் மூடரும்” எனும் சிலேடைப்பாடல்களைப் பாடியுள்ளார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
பண்டைய கால கல்வெட்டுகளில் கழுதைச் சாபமும் காணப்படுகிறது. கல்வெட்டுகளில் சொன்ன விஷயங்களை மீறினாலோ, பின்பற்றாமல் விட்டாலோ அவர்கள் கழுதைகளைப் புணர்ந்த சாபத்தை அடைவார்கள் என்று கல்வெட்டுகளில் எழுதப்பட்டுள்ளன. மேலும் குற்றவாளிகளையும், பெண்களுக்கு எதிராக தவறிழைத்தோரையும் கழுதை மீது உட்கார வைத்து, அவன் முகத்தில் கருப்பு, சிவப்பு வர்ணங்களால் புள்ளிகளை வைத்து நகர் வழியாகக் கூட்டிச் செல்வர். இப்போதும் வட இந்தியாவில் இது நடக்கிறது. கழுதைகளை பாரம் சுமக்கவும், போக்குவரத்திற்கும் பயன்படுத்தும் வழக்கம் நீண்ட காலமாக உள்ளது. அக நானூறில் (89) மதுரைக்காஞ்சிப் புலவர் இது பற்றிப் பாடுகிறார். பதிற்றுப்பத்து, பெரும்பாணாற்றுபடையிலும் கழுதையின் புகழ் பாடப்பட்டுள்ளது. இதுதவிர வெடிபொருட்களைச் சுமந்து செல்வதற்காக முதலாம் உலகப்போரிலும், வெடிகுண்டுகளைக் கட்டிய தற்கொலைதாரிகளாக இன்றளவும் நடைபெறும் ஆப்கானிஸ்தான், ஈராக், லெபனான், காஸா போர்களிலும் கழுதைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. போரின் போது இராணுவவீரர்களுக்கு உணவுப்பஞ்சம் ஏற்பட்டால் கழுதைகளின் இறைச்சியை உணவாக உட்கொள்ளமுடியும் என்பதும் இதற்கு மற்றுமொரு காரணமாகும்.
கழுதைகளின் பாலில் புரோட்டீன் மற்றும் கொழுப்பு குறைவாகவும் லக்டோஸ் செறிவுள்ளதாகவும் காணப்படுவதால் தாய்பாலை ஒத்த தன்மையைக் கொண்டவையாக அறிவியல் ஆய்வுகளின் மூலம் நிரூபணமாகியுள்ளது. இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பகாலம் வரை தாய்ப்பாலுக்கு இணையாக கழுதை பால் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. மேலும் இவை அழகியல் சாதனங்கள், சவர்க்காரம், தோலின் மென்மையைப் பேணும் களிகளின் (moisturizers) உற்பத்திகளில் மூலப்பொருளாகவும் உணவுத்தேவைகளை நிறைவு செய்வதிலும் பெருமளவு தாக்கத்தைச் செலுத்துகின்றன. எகிப்து நாட்டின் அரசியாகவும் உலகின் பேரழியாகவும் நம்பப்படும் கிளியோபாட்ரா, ரோம் நாட்டின் அரசன் நீரோவின் இரண்டாம் மனைவி பொபே சபீனா, மாவீரன் நெப்போலியன் போனபட்டின் தங்கை பெளலின் போனபட் (1780–1825) ஆகியோர் கழுதைப்பாலில் குளிப்பதன் மூலம் தமது உடலின் அழகையும் இளமையையும் பாதுகாத்து வந்ததாகக் குறிப்பிட்டுள்ளனர். ஒருமுறை குளிப்பதற்கு 700 கழுதைகளிடமிருந்து பால் பெறப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. முற்காலத்தில் கழுதைகளின் பதப்படுத்தப்பட்ட தோல் (parchment) எழுதுவதற்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது. சீனாவின் மரபார்ந்த மருத்துவமுறைகளில் கழுதைகள் இன்றளவும் பயன்படுத்தப்படுகின்றன. விசேடதேவையுடையவர்களை ஆற்றுப்படுத்தும் மருத்துவ முறைகளிலும் (DAT – Donkey Assiated Therapy) கழுதைகள் பயன்படுத்தப்படுகின்றன.
மருத்துவத்தின் தந்தை என அழைக்கப்படும் ஹிப்போகிரடிஸ் (Hippocrates 460 – 370 BC) கல்லீரல் பிரச்சினை, தொற்றுநோய் பாதிப்புகள், நீர்க்கோர்வை, மூக்கால் இரத்தம் வடிதல், விசமுறிவு, காய்ச்சல், அயர்ச்சி, கண்நோய், பல்ஈறுப்புண், வயிற்றுப்புண், ஆஸ்மா மற்றும் காயங்கள் என பல்வேறு நோய்களுக்கும் கழுதைப் பாலை மருந்தாகப் பரிந்துரைத்துள்ளார்.
கழுதைகளைப் பார்த்தால் யோகம் வரும் என்றும் , சகுனம் சிறப்பாக அமையும் என்றும் இன்றும் நம்பப்படுவதுடன் நாட்டுமருத்துவத்தில் கழுதைகளின் பாலும் பயன்படுத்தப்பட்டுவருகின்றது. கழுதைகளின் காய்ந்த விட்டையை நெருப்பிலிட்டு புகையை வீடுகளிற்கும், குழந்தைகளுக்கும் பிடிப்பதை இன்றும் நாம் காண்கின்றோம். கழுதைப் பால் குழந்தைகளின் நோய்தடுப்பாற்றலை அதிகரிக்கும் எனக் கூறப்பட்டாலும் மருத்துவ அறிவு வளர்ச்சியடைந்துள்ள இன்றைய காலப்பகுதியில் அவ்வாறான செயல்கள் குழந்தைகளுக்கு நோய்த் தொற்றுகளை ஏற்படுத்துமென மருத்துவர்களால் எச்சரிக்கக்கப்பட்டுள்ளன.
நிறைவுரை:
மாடு தன் எஜமானையும், கழுதை தன் ஆண்டவனின் முன்னணையையும் அறியும்; இஸ்ரவேலோ அறிவில்லாமலும், என் ஜனம் உணர்வில்லாமலும் இருக்கிறது என்கிறார் – (ஏசாயா 1:3) ஆண்டவர். இவ்வாறு மக்களை விட இறைவனை உணர்ந்த அதியுன்னத நிலையில் கழுதைகள் வைக்கப்பட்டன. பைபிளில் கழுதைகள் இறைபணியாற்றியிருக்கின்றன. மரியாள் கற்பிணியாய் இருக்கும் போது கழுதையின் மேல் பயணித்தார் என்றும், இயேசு கிறிஸ்து கழுதையின் மேல் ஜெருசலேம் (மத்தேயு 21:1-11) நகருக்குள் ஊர்வலமாக சென்றார் எனவும் பைபிள் கதைகளில் கூறப்பட்டிருக்கின்றன. குருத்தோலை ஞாயிறன்று கிறிஸ்து கழுதையின் மேல் பயணித்ததால் கழுதைகளின் பின்பக்கமும், முதுகிலும் குருசு போன்ற அடையாளம் ஏற்பட்டதாக கிறிஸ்தவம் பரவிய காலப்பகுதியில் இருந்து இன்றுவரை நம்பப்படுகிறது. பைபிளைப் போலவே இஸ்லாமிய புனித நூலிலும், இந்துக்களின் நூல்களிலும் கழுதைகளைப் பற்றிக் கூறப்பட்டிருக்கின்றன. சுதனைச் சிலுவையில் அறைந்தவர்கள் மன்னிக்கப்பட்டார்கள். குருசு புனிதமடைந்தது. ஆனால் வாழ்க்கை முழுவதும் தனது மனிதர்களையும், ராஜாக்களையும், தீர்க்கதரிசிகளையும், எஜமானர்களை விசுவாசத்தோடு சுமந்த இந்த கழுதைகள் மட்டும் தமது ஆக்கினைகளில் இருந்து எவராலும் இரச்சிக்கப்படவில்லை. இவைகளின் விசுவாசமும் ஏக்கக்கதறலும் எந்த எஜமானனின் செவிகளையும் எட்டவேயில்லை. கர்த்தர் (எண்ணாகமம் 22: 28) பிலேயாமின் கழுதையின் வாயைப் பேசுமாறு திறந்த போது “நீர் என்னை இப்பொழுது மூன்று தரம் அடிக்கும்படி நான் உமக்கு என்ன செய்தேன்” , “நீர் என்னைக் கைக்கொண்ட காலமுதல் இந்நாள்வரைக்கும் நீர் ஏறின கழுதை நான் அல்லவா? இப்படி உமக்கு எப்போதாகிலும் நான் செய்தது உண்டா” (எண்ணாகமம் 22:29-30) என்று கேட்டது. இன்றைய சூழலில் கழுதைகளுக்கு பேசும் சந்தர்ப்பர்ப்பம் கிடைத்தால் அவை எம் பிரதேசத்தில் அனுபவிக்கும் துன்பங்களைக் கூறுவதற்கு நாம் அனுபவித்த 3 தசாப்தங்களும் காணாது எனும் வருத்தமே எஞ்சி நிற்கின்றது. காதுள்ளவர்கள் கேட்கக்கடவர்.
உசாத்துணை: