தழல் வாசகர் வட்டம் – ஐப்பசி – 2016

தழல் வாசகர் வட்டம் – ஐப்பசி – 2016

தழல் வாசகர் வட்ட கருத்தாடல் 08.10.2016 சனிக்கிழமை காலை 10.00 மனிக்கு மன்னார் பொது நூலகத்தில் இடம்பெற்றது. மன்னார் மாவட்ட பெண் எழுத்தாளர்கள் உட்பட, ஆழமான வாசிப்பனுபவம் கொண்ட எழுத்தாளர்களும், இலக்கிய மொழிப்பெயர்ப்பாளர்களும் கலந்துகொண்டனர். மன்னார் பொதுநூலகத்தின் பிரதான நூலகரான திரு.நிஷாந்தும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு வாசிப்பனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். எழுத்தாளர் வி.கெளரிபாலன் சிறப்பு விருந்தினராகக் கலந்து சிறப்பித்தார். மிகச் சொற்பமான நபர்கள் பங்குபற்றியிருந்ததால் பல காத்திரமான கருத்துகளை ஆறுதலாகப் பேசுவதற்கு எல்லோருக்கும் நேரம் கிடைத்தது.

தமிழினியின் “ஒருகூர் வாளின் நிழலில்” மற்றும் வெற்றிச்செல்வியின் “ஆறிப்போன காயங்களின் வலி” தொடர்பான தனது பார்வையை இலக்கியமொழிபெயர்ப்பாளர் அனோனிமா தேவாவும் கெளரிபாலனின் காற்றில் மிதக்கும் தழும்பின் நிழல் பற்றி எழுத்தாளர் எஸ்.ஏ.உதையனும் உரையாற்றினர். அதன் பின்னராக பொதுக்கலந்துரையாடலில் பங்குபற்றிய அனைவரும் கலந்துகொண்டனர்.செல்வி.சர்மிளா தனது கவிதை “பேய்களின் தாண்டவம்” எனும் கவிதையை வாசித்தார். கவிதையின் இணைப்பு


#ஒருகூர்வாளின்நிழலில் மற்றும் #ஆறிப்போனகாயங்களின்வலி  இருநூல்களிலும்  போருக்கு பிற்பட்ட காலப்பகுதியிலான, போராளிகளின் மனநிலைகள் வெவ்வேறான கோணங்களில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதில் தமிழினி ஓரடி முன்சென்று சில கேள்விகளை முன்வைக்கிறார். தனது கருத்துகளைப் பேசுவதற்கான துணிவும், சிந்திப்பதற்கான தகைமையும் தமிழினிக்கு சிறுவயதில் இருந்தே புகட்டப்பட்டிருப்பது அவரது பால்யகால நினைவுகளின் ஊடாக சொல்லப்பட்டிருக்கிறது. ஆறிப்போன காயங்களின் வலியானது சம்பவங்களின் தொகுப்பாக மட்டுமே உள்ளது. எனினும் அது ஜனரஞ்சக வாசகர்களிற்கு அனுக்கமான மொழிநடை.. மனதைத் தொடுமாறு சில பகுதிகள் அமைகின்றன என்று குறிப்பிட்ட பகுதிகள் சுட்டிக்காட்டப்பட்டன.  மேலும் பல கருத்துகளும் முன்வைக்கப்பட்டன.

கெளரிபாலனின் கதைகள் பெரும்பாலும் போரினால் பாதிக்கப்பட்ட விளிம்புநிலை மனிதர்களைப் பற்றி பேசுகிறது. பல்வேறு களங்களில் பணியாற்றிய அனுபவமும் மனிதர்களை புரிந்துகொள்ளும் பண்பும் கதைகளெங்கும் சிதறிக்கிடக்கின்றன. தயிர் முட்டிகளைப் பறித்துச் செல்லும் மனநிலை பாதிக்கப்பட்ட பெண் பற்றிய கதை அவர்களின் உலகை அப்படியே சித்தரித்துச் செல்கிறது. றெக்கி, தப்பு போன்ற கதைகள் ஏற்கனவே சிற்றிதழகளில் வாசித்திருக்கிறேன்… தப்பு தொடர்பாக ஒரு பதிவினையும் கடந்த காலங்களில் இட்டிருந்தேன்…. அதையே இங்கு மீள்பதிவு செய்கிறேன்… தலித் கதையாடல்கள் இப்போது பழமையாகிவிட்டாலும் மணக்க மணக்க எழுதிய எழுத்துகளை புரட்சி என்று சொல்லியவர்கள் கே.டானியலின் காலத்திலிருந்து உண்டு. தப்பு எனக்கு பிடித்திருந்தது…. பிள்ளையாரின் மேல் மலத்தைக் கொண்ட வேண்டிய தேவை கதையின் முடிவிற்கும், எழுதுபவர்களின் கொள்கைக்கும் தேவையாயிருக்கிறது…