குறும்படப்பாடல் (1023) – வரிகள் கவிஞர் அமல்ராஜ்

இப்பாடலுக்கு வரிகள் அமல்ராஜ், பாடல் இசை தர்சனன் (16 வயது மாணவன்). அத்துடன் மிக அருமையான பின்னணி இசை அமைத்து தந்த அருள்வாசகன் (இந்தியா) அவர்களுக்கும் எமது நன்றியை “1023 வருடங்கள்” குழு நன்றியை தெரிவிக்கிறது.

The song had been Composed by just 16 years old boy- Tharshanan. Lyrics – Amal Raj. As well as we need to say thanks to Arul vasagan (India) for awesome BGM.

என் மணமகன் எவன்?

நாளிகைகள்
கழியட்டும்..
கண்ணில் இட்ட மையும்,
முகம் காட்டும் பொய்யும்,
மறைப்பின்றி ஜொலிக்கிறது.

தோழிகள் அருகில்,
சோடனை வெளியில்,
அம்மா இட்ட வளையல் குலுங்க,
பாட்டி இட்ட கம்மல் சினுங்க,
கல்யாண சாம்ராட்சியத்தின்
கன்னிக்கதிரையில்
கன்னம் சிவக்க நான்.

francis amalrajகலியாணப் பொண்ணு
காந்தர்வ அழகு,
என்
கன்னக்குழியில் விழுந்து தெறிக்கிறது
செல்லக் கிள்ளல்கள்.

எல்லோருக்கும் மகிழ்ச்சி
எல்லோர் உதட்டிலும் கிளர்ச்சி
அது –
மணமகன் வரும் நேரம்!
எனக்கோ
மனமெங்கும் பெரும் பாரம்!!

மாங்கல்யம் ஜொலிக்கிறது
மணமேடையில் – எனக்கோ
மனமெல்லாம் வலிக்கிறது!

மணமகன் வருகிறான் – என்
மனம் புரிந்தவன் வருவானா?

கைகளுக்கு
வளையலிட்ட அம்மா – என்
மனதிற்கு
தையலிட்டதேன்??

திருமணம்
எனக்கானதெனின்,
மணமகன் மட்டும்??

மண மேடை
பாடையாவதும்,
என் மனமேடை
பூக்கள் பூப்பதும்
இன்றுதான்! இன்றுதான்!

என்னை அள்ளிக்கொள்ள
எவன் வருவான்??

இவர்கள்
மணமகனா?? – இல்லை
என்
மனமகனா??

நான்
காலாவதியாய் போனாலும்
போகட்டும்,
என்னை மட்டும்
தயவுகூர்ந்து
உங்கள் மணமகனுக்கு
தீர்த்து விடாதீர்கள்.
அவன்
பணம் கொண்டு வருகிறான்..
மனம்??

இல்லை,
இந்த பெண்ணொருத்தி
வாழ்ந்திடட்டும் என்றால்,
என்
மன்மதன்
மணமேடை வரட்டும்!
உங்கள் பிள்ளைக்கு
இறுதி பிச்சை போடுங்கள்
இந்த – ‘என்’
வாழ்க்கையை மட்டும்.
— கவிஞர் பி.அமல்ராஜ்