மன்னார் மின்சார சபையிடம் கையளிக்கப்பட்டுள்ள மக்கள் சார்பான மகஜர்

மன்னார் அமுதன் @
(ஜோசப் அமுதன் டானியல்)
இல: 23, வயல் வீதி,
சின்னக் கடை, மன்னார்
19.08.2015

சேரல்:
திரு.மிஸ்ரக்
மின் அத்தியட்சகர்
இலங்கை மின்சார சபை – மன்னார்.

தொடர் மின்தடையால் அவதியுறும் மன்னார் மாவட்ட மக்கள், மாணவர்களின் பிரச்சினைகளை மின்சார சபையின் கவனத்திற்கு கொண்டுவருதல் மற்றும் உரிய தீர்வினைப் பெற்றுத்தருமாறு கோருதல்

வணக்கம். தொடர் மின் தடையால் மன்னார் மக்கள் பெரும் துன்பத்திற்கு ஆளாகி வருவது அனைவரும் அறிந்த ஒரு விடயமாகும். குறிப்பாக ஒவ்வொரு ஆண்டும் புலமைப்பரிசில் தேர்வு, க.பொ.த. உயர்தரப் பரிட்சைகள் நடைபெறும் ஆகஸ்ட் மாதத்தில் மின்தடைப் பிரச்சினை உச்சமடைந்து மக்களின் பொறுமையை சோதிக்கும் ஒரு பாரிய விடயமாக உருவெடுத்து வருகிறது. எனவே மன்னார் மாவட்ட சகல மக்களும் அனுபவித்து வரும் இத்துன்பத்தை பொதுமைப்படுத்துவதற்கும் தீர்வு காண்பதற்கும் எவராவது முன்வரவேண்டும் எனும் நன்நோக்கில் இக்கடிதம் எழுதப்படுகிறது.

அதிகபட்ச வெப்பநிலையாக (சராசரி) 32 பாகை செல்சியஸ் பதிவுசெய்யப்படும் மன்னாரில் ஒவ்வொருவரும் மின்சாரவசதியையும், மின்உபகரணங்களின் தேவையையும் நாடியவர்களாக உள்ளனர். குறிப்பாக குழந்தைகள், வயோதிபர், நோயாளிகளுக்கு மின்சாதனங்களின் தேவை இன்றியமையாததாக உள்ளது. மன்னார் மக்கள் தொடர் மின்தடையால் எதிர்நோக்கும் பாரிய பிரச்சினைகளாவன:

1. கல்வி ஒன்றையே வாழ்வின் மூலாதாரமாகக் கருதி கல்வி கற்றுவரும் எம்மாணவர்களின் கற்றல் செயற்பாட்டிற்கு மின்சார தடையானது பெரும் இடையூறாக உள்ளது. அடிக்கடி ஏற்படும் மின்தடையின் விளைவாக மாணவர்கள் கற்றலில் முழுமையாக ஈடுபட முடியாமல் இருப்பதுடன், எதிர்பார்க்கும் பெறுபேறுகளைப் பெற முடியாமல் பல்வேறு உளவியல் தாக்கத்திற்கும் உள்ளாகுகிறார்கள். இந்த உளவியல் தாக்கத்தின் விளைவாக பரிட்சை பெறுபேறுகள் வெளியிடப்படும் காலத்தில் பல்வேறு விபரீத சம்பவங்களும் இடம்பெறுகின்றன. இதற்கு மின்தடையும் ஒரு மறைமுகக் காரணம் என்பதை மறுக்கவோ, மறைக்கவோ முடியாது.

2. மன்னார் மாவட்ட அரச பொது வைத்தியசாலையானது மாவட்டத்தின் பிரதான வைத்தியசாலையாகும். ஏலவே பல (போதிய மருத்துவர்கள் இன்மை, மருந்து வசதியின்மை, ஆளணியின்மை, கருவிகளின்மை,) குறைபாடுகளோடு செயற்பட்டு வரும் இவ்வைத்தியசாலை குறித்து சில கவனயீர்புப் போராட்டங்கள் நடந்தன என்பது நாம் அறிந்ததே. இந்நிலையில் தொடர்ந்து ஏற்படும் மின்தடையினால் அங்குள்ள நோயாளிகளுக்கு ஏற்படும் அசெளகரியங்கள் குறித்து நாம் கரிசனை கொள்ள வேண்டும். அவசர சிகிச்சைப் பிரிவிலும், அறுவை சிகிச்சைக்காகவும், கதிரியக்கப் படம் எடுப்பதற்காகவும் இன்னும் பல அதிமுக்கிய தேவைகளுக்காகவும் எத்தனை நோயாளிகள் நாள்தோறும் காத்திருக்கின்றனர். குறைந்தபட்ச மனிதாபிமானமுள்ள மனிதர்கள் கூட இது பற்றி சிந்திப்பார்கள்.
3. அரச, தனியார்துறை ஊழியர்களும், ஆசிரியர்களும், உடலுழைப்பை முதலாகக் கொண்டவர்களும் அதிகாலையில் எழுந்து சமைத்து தமக்குரிய காலை, மதிய உணவுகளை எடுத்துச் செல்வது மன்னாரில் வழமையாகும். தொடர் மின்தடையால் மக்கள் தங்கள் அன்றாடப் பணிகளை முன்னெடுக்க முடியாமல் இருப்பதுடன், புழுக்கம், நுழம்பு பிரச்சினைகளால் இரவுத்தூக்கத்தை தொலைப்பவர்கள் அதிகாலையில் எழுவதிலும், தூக்கத்தை இழப்பதால் ஏற்படும் மனச்சோர்வால் பணியிடங்களில் கடமையைச் சீராகச் செய்யமுடியாமலும் பல பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள்.

4. பொருளாதாரத்தில் வளர்ந்து வரும் மாவட்டமாகிய மன்னாரில் உள்ள சுயதொழில் முயற்சியாளர்களுக்கும், அரச நிறுவனங்களுக்கும் மின்தடையானது அன்றாடச் செயற்பாடுகளை முன்னெடுப்பதில் ஒரு பாரிய சவாலாக உள்ளது. விதவைகள் மற்றும் சுயதொழில் முயற்சியாளர்களுக்கென கடந்த காலங்களில் ரூ.40 மில்லியன் செலவில் மின்சாரத்தில் இயங்கும் தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக அறிகிறோம். இது தவிர மேலும் நூற்றுக்கணக்கானவர்கள் தமது வாழ்வாதாரத்திற்காக தையல் தொழிலை செய்துவருகின்றனர். சுற்றுலாத் துறையோடு தொடர்புடைய உல்லாச விடுதிகளையும், உணவகங்களையும், மின்சாரத்தோடு நேரடித் தொடர்புடைய சுயதொழில்முயற்சிகளையும் வங்கிகளில் கடன் பெற்று பலர் செய்து வருகின்றனர். தொடர் மின்வெட்டால் இவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதுடன் மின் உபகரணங்களும், உணவுப்பண்டங்களும் பழுதடைகின்றன. இதனால் நட்டத்தை எதிர்நோக்கும் இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாவதுடன் பெரும் பொருளாதார நெருக்கடிகளையும் எதிர்நோக்க நேரிடுகிறது.

5. ஒரு மணித்தியாளத்திற்கு 15 முதல் 20 தரம் வரை மின்னிணைப்பு கொடுக்கப்பட்டு உடனடியாகத் துண்டிக்கப்படுகிறது. கிறிஸ்மஸ் காலத்தில் வீடுகளில் பயன்படுத்தும் அலங்கார விளக்குகள் விட்டு விட்டு ஒளிர்வதை போன்ற மின் வழங்கலினால் வீட்டிலுள்ள சிறுவர்களுக்கு “இது கிறிஸ்மஸ் காலமோ” எனும் மயக்கத்தை மன்னார் மின்சார சபை ஏற்படுத்தியுள்ளது இந்நடைமுறை நாள்தோறும் நடைபெற்றுக்கொண்டே இருக்கிறது. இதனால் ஒரு சாதாரண குடிமகனின் வீட்டில் பயன்படுத்தப்படும் மின்விசிறி தொடக்கம் தொலைக்காட்சி, கணணி, குளிர்சாதனப் பெட்டி, ரைஸ் குக்கர் என அனைத்து மின் உபகரணங்களும் பழுதடையும் நிலையில் உள்ளன. பல பழுதடைந்தும் உள்ளன. சீரான மின்வழங்கலின்மையால் பழுதடையும் பொருட்களை திருத்துவதற்கோ, புதிதாகக் கொள்முதல் செய்வதற்கோ நாம் தயக்கம் காட்டவேண்டியுள்ளது.

6. மாதம் முடியும் போது மின்பட்டியலில் உள்ள தொகையை முழுவதுமாக செலுத்தும் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் நற்பிரஜைகளும், நுகர்வோருமாகிய எமக்கு நாட்டின் ஏணைய பகுதிகளில் உள்ள பிரஜைகளைப் போல சகல வளங்களையும் பெற்று வாழுவதற்கான உரிமை உள்ளது. அவ்வுரிமைகளில் ஒன்றை மன்னார் மின்சார சபை பறித்துள்ளதா எனும் எண்ணம் மேலிடுகிறது. மின் தடை குறித்து கேட்பதற்கு மின்சாரசபையின் தொலைபேசி இலக்கங்கள் வேலைசெய்வதில்லை. முறையான பதில் சொல்வதில்லை. அறிவியல் வளர்ச்சியில் பல உச்சங்களை தொட்டுள்ள இந்நவீன யுகத்தில் மின்தடைக்காக மின்சாரசபை கூறும் காரணங்கள் (மின்சார கம்பிகளில் தூசிபடிதல், பனி, உப்புக்காற்று, கம்பிகள் உடைதல்) ஏற்றுக்கொள்ளக் கூடியவையாக இல்லை. மன்னாரின் நிலஅமைப்பையும், காலநிலையையும் கொண்ட நாட்டின் பிறபகுதிகளிலும் இதே போன்றதொரு பிரச்சினை இருக்கிறதா? கொழும்பில் இல்லாத தூசியும், உப்புக் காற்றும், கடலும், வெயிலுமா மன்னாரில் உள்ளது. பின் ஏன் எமக்கிந்த நிலை…?

மேற்குறிப்பிட்டுள்ள சில பாரிய பிரச்சினைகள் மேலும் பல உபபிரச்சினைகளை உருவாக்கி வாழ்க்கையை சிக்கலும், குழப்பமும் நிறைந்த ஒன்றாக மாற்றியுள்ளது. மின் ஊடகங்கள் நிறைந்த அறிவியல் யுகத்தில் மன்னார் மக்கள் (மின்தடையால்) இன்னும் செவிவழிச் செய்திகளையே கேட்டுக்கொண்டிருக்கின்றனர் என்பது வருத்தத்திற்குரிய விடயம் அல்லவா?

ஆகவே நல்லாட்சி உறுதிப்படுத்தப்பட்டுள்ள இக்காலத்தில் தொடர்மின்வெட்டு குறித்து துறைசார்ந்த வல்லுநர்களோடு ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுப்பதன் மூலமும், எமது மக்கள் இனியும் இது போன்ற துன்பத்தை அனுபவிக்காமல் பாதுகாக்குமாறும் இதுகுறித்து மின்சார சபை எடுக்கும் நடவடிக்கைகளை ஊடகங்கள் வாயிலாக பொதுமக்களுக்கு அறியத்தருமாறும் தயவுடன் கேட்டுக்கொள்கின்றோம். தவறும்பட்சத்தில் மாவட்டத்தின் சகல மக்களையும் ஒருங்கிணைத்து இலங்கை மின்சார சபை –மன்னார் பிரிவுக்கு எதிராக சாத்வீக போராட்டங்களை மேற்கொள்ளும் நிலைக்கு நாம் தள்ளப்படுவோம் என்பதை மிகத் தெளிவாகவும் தாழ்மையுடனும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

மன்னார் அமுதன் @
(ஜோசப் அமுதன் டானியல்)
மன்னார் மக்கள் சார்பாக

குறிப்பு: (நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்களின் கையெழுத்து பிரதி, அடையாள அட்டை இலக்கத்துடன் இணைக்கப்பட்டுள்ளது)

பிரதி:
1. திரு.பிரபாகரன் – பிரதான மின் அத்தியட்சகர், இ.மி.ச, பூங்கா வீதி, வவுனியா
2. திரு.குணதிலக்க – பிரதிப் பொதுமுகாமையாளர், இ.மி.ச, (வடக்கு மாகாணம்), கே.கே.எஸ். வீதி, யாழ்.
3. மன்னார் பிரஜைகள் குழு
4. கெளரவ.சாள்ஸ் நிர்மலநாதன் – பா.உ
5. கெளரவ.ரிசாட் பதியுதீன் – பா,உ
6. கெளரவ. செல்வம் அடைக்கலநாதன் – பா.உ
7. கெளரவ. சிவசக்தி ஆனந்தன் – பா.உ
8. கெளரவ.பா.டெனிஸ்வரன் – வடமாகாண போக்குவரத்துதுறை அமைச்சர்

கையெழுத்துப் பிரதிகள்:


வட மாகாண சபை தேர்தலும் தமிழர் நிலைப்பாடும்

இன்றைய சமகால இலங்கையிலும், சர்வதேச அரங்கின் இலங்கைத்தீவின் கண்காணிப்புகளிலும் முதன்மை பெறுவது வட மாகாண சபை தேர்தலாகும். இது சாதாரண ஓர் ஜனநாயக வழமைச் செயல்முறைமை எனில் இந்தளவு முக்கியதுவம் காரியமற்றது. இன்று இலங்கை அரசிற்கு உள்ள இரண்டு பிரச்சினைகளாக போர்க்குற்றங்கள் மற்றும் இனப்பிரச்சனை தீர்வு. இனப்பிரச்சனைக்கான தோற்றுக்காரணி அழிக்கப்பட்டாலே போர்க் குற்றங்கட்கான அழுத்தக்காரணிகளும் நீக்கப்படும் என்பது திண்ணம்.

30 வருட இலங்கையின் கசப்பான அனுபவத்தையும் உலகின் தேசிய நலன் எனும் கோட்பாட்டிற்கு லங்காபுரியை பொறுத்தளவில்  சகிக்க முடியா உச்ச அச்சுறுத்தலை கொண்டிருந்தவர்களை நிர்மூலப்படுத்தியதாக அறிவித்த பின்பு அவ்அச்சுறுத்தலுக்காக தோற்றுவாயை ஒரேயடியாக சர்வதேசத்தின் முன்பு துடைத்தழிப்பதற்கு கிடைத்துள்ள பொன்னான வாய்ப்பு. முன்பு 13ம் திருத்தத்தில் ஒன்றுமில்லை என வாதிட்ட தமிழ் தேசியவாதிகள் இன்று அதை பற்றி விமர்சிக்கவும் பிச்சு புடுங்கவும் தொடங்கி விட்டார்கள்jr. எல்லாம் அதிகார வேட்கையும் அரசியல் ஆசையும் தான். ஓர் சட்டமாணவன் என்ற வகையில் எந்த வித அதிகார பகிர்வு ஆணைகளையோ சுயாட்சி அதிகாரத்தையோ முகத்தளவில் கூட கொண்டிராத 13ம் திருத்தம் இன்று தமிழ் தேசியவாதிகளாக தம்மை அடையாளப்படுத்தி கொள்வோரால் கூட உச்சளவில் பிரஸ்தாபிக்கப்படுகின்றது என்பது என்னை பொறுத்தளவில் சகிக்க முடியாத அல்லது நகைப்பிற்குரிய ஓர் விடயதானம்.

 ஆனால் அதைக்கூட இலங்கை தேசியவாதிகள் இறையாண்மையின் அச்சுறுத்தலாகவும் தமிழர்கட்கான தனிநாட்டின் முதற்படியாகவும் சித்தரிப்பதை என்னவென்று கூற முடியும். தற்போது அவர்கள் இலங்கை அரசாங்கத்திற்கு பிறப்பித்துள்ள கட்டளைகள். மாகாண முறைமை ஒழிக்கப்பட வேண்டும். இடைக்காலத்தில் அதாவது ஒழிப்பு முறைமையை முற்றுப்படுத்தும் வரைக்கும் 5 கட்டளைகளை உடனடியாக தேர்தலுக்கு முன்னர் நிறைவேற்ற வேண்டும்.

01. மாகாணங்களுக்குரிய பொலிஸ் அதிகாரங்கள் ரத்து செய்யப்பட வேண்டும்.

02. மாகாணங்களுக்குரிய காணி அதிகாரங்களை ரத்து செய்யப்பட வேண்டும்.

03. மாகாண இணைவிற்கான அதிகாரத்தை களைய வேண்டும்.

04. பெரும்பான்மை மாகாண சம்மதத்தின் பெயரல் ஓர் சட்டத்தை மத்திய அரசு ஆக்கின் அது அனைத்து மாகாணங்களையும் கட்டுப்படுத்த வேண்டும்.

05. மத்திய அரசு பிறப்பிக்கும் அனைத்து ஆணைகளும் மாகாண சபைகளை நேரடியாக கட்டுப்படுத்த வேண்டும். 

என்னை பொறுத்தளவிலே மேற்கூறப்பட்ட விடயங்களில் 04 ஐ தவிர அனைத்துமே 13ம் திருத்தத்தின் முகத்தளவிலேயே கோரிக்கைகளுடன் ஒத்துப்போவதாக உள்ளது. ஏனெனில் இங்கு மத்திய அரசு ஓர் சட்டமூலத்தை ஆக்கின் அது சம்மதளித்த மாகாண சபைகட்கு மட்டும் ஏற்புடையதாகுமே தவிர மற்ற சபைகளை பிணிக்கமாட்டாது.

ஆனால் இதில் உள்ள சூட்சுமம் இந்த தேர்தல் தமிழ் மக்களின் 60 வருட கால போராட்டத்திற்கு ஓர் முடிவை இட்டு விட்டதாகவும் தமிழர்கள் யுத்த முடிவு (POST WAR) என்ற தளத்தில் இருந்து முரண்பாட்டு முடிவு (POST CONFLICT) என்ற தளத்திற்கு தம்மை இந்த வட மாகாண சபை தேர்தல் மூலம் நகர்த்தி விட்டதாகவும் ஆனால் இதை ஏற்காத இலங்கை தேசியவாதிகளை கூட விஞ்சி இலங்கை அரசாங்கம் தமிழ் மக்கட்கு ஓர் ஜனநாயக ரீதியில் தீர்வை பெற்று கொடுத்து விட்டதாகவும் சர்வதேச சமூகத்திற்கு இலங்கை அரசின் சார்பில் இலங்கை அரசாங்கத்தால் காட்டி விட முடியும்.

அனைத்து கட்சிகளும் தேர்தலை புறக்கணிப்பதானது ஜனநாயன விழுமியங்னை தமிழர் மதிக்கவில்லை என்பதை நிகழளவில் விடுத்து வெற்றியின் தறுவாயில் உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு தனது அதிகார நாற்காலியை விட தயாரில்லை என்பதையும் அதை எதிர்க்கின்ற தமிழ்க் கட்சிகள் கூட அதே தறுவாயில் இருப்பின் இதை முடிவைத்தான் எடுப்பார்கள் என்பதையும் யாரும் மறைக்க வேண்டிய அவசியமில்லை. இதற்கு வரலாற்றிலிருந்து உதாரணங்களை பதிவிட ஆரம்பித்தால் 60 வருட கால வரலாற்றை மீள்பிரசுரம் செய்வதை விடுத்து எனக்கு மாற்றுபாயமும் இல்லை.

ஆனால் 13ம் திருத்தத்தினுாடான அதிகார பரவலாக்கம் வெறும் கானல் நீர்தான் அதை அதன் உட்பிரிவு அலசல்களுடன் கணித ரீதியாக அமைவுறுத்தியுள்ளேன். அதாவது அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ள சட்ட உறுப்புரைகளையும் அந்த அதிகாரங்கள் பறிக்கப்பட வழிசமைக்கும் சட்ட உறுப்புரைகளையும் நேர்ப்படுத்தி விளைவு பூச்சியம் என அதாவது அதிகார பகிர்வு என்பதே இல்லை என காட்ட முயற்சிக்கின்றேன்.

 இது சட்டவாக்கதுறையில் (Legislature) மாகாண சபைகளின் நிலைமையை காட்டுகின்றது.

Legislature

இது மாகாண சபைகளின் நிறைவேற்றுத்துறை (Executive) நிலைமையை காட்டுகின்றது.

Executive

முற்பிணை- Anticipatory Bail

முற்பிணை என்பது தழிழக சினிமாக்கள் ஊடாக முன்ஜாமீன் எனும் பெயரில் எமக்கு நன்கு அறிமுகமான ஓர் எண்ணக்கரு. ஆனால் அதன் சட்டவலிதார்ந்த தன்மை பற்றி இலங்கை சட்ட நியாயாதிக்கத்தினுள் ஆராய்ந்தறிவது மிக அவசியமானதும் பொருத்தமானதுமாகும்.

நாம் ஓர் குற்றச்செயலில் ஈடுபட்டு பொலிசாரால் கைது செய்யப்படுவோம் எனும் ஓர் நிலையிலேயே முற்பிணை பற்றி யோசிக்க துவங்குவோம். சாதாரண பிணை என்பது கைது செய்யப்பட்ட பிறகு சிறையில் இருந்து விடுவிக்கப்படுவதற்கான ஓர் செயன்முறை. ஆனால் முற்பிணை வேறுபட்டதாக, குற்றம் இழைத்தவர் அல்லது குற்றம் இழைத்ததாக கருதப்படுபவர் கைது செய்யப்படாமலே ( சிறைவாசம் அனுபவிக்காமலே) நீதிமன்றின் சில பொருத்தனை நிறைவேற்றங்களுடன் சமூக வாழ்வை தொடர்வதாகும்.

 இதன் நியாயப்பாடு 41வது இந்திய சட்ட சீர்திருத்த ஆணைக்குழுவால் ( 41st sitting if Indian Law Commission) ஒன்று கூடலின் போது பின்வருமாறு முன்வைக்கப்பட்டது. “ஒருவனை பிணை என்ற பொறிமுறை மூலம் சிறையில் இருந்து தண்டனை அனுமதிக்கப்பட்ட காலம் நிறைவுறும் முன்னே வெளியேற அனுமதிக்கின்ற சட்டம், அவனை ஏன் சிறையில் தள்ள முன்பு முற்பிணை என்ற பொறிமுறை மூலம் வெளியே அனுப்ப கூடாது ? மாறாக ஓர் கணநேர இடைவெளிக்குள் ஒருவனை சிறைக்குள் அமர்த்துவதன் மூலம் குற்றவியற் சட்டம் என்ன சாதிக்க முயல்கின்றது ?

நானறிந்த வகையில் முற்பிணை என்ற எண்ணக்கரு முதலில் நடைமுறையில் வெற்றிகரமான வகையில் முதலாவதாக சட்டமாக்கப்பட்டது பாரத தேசத்தில் தான்.

இந்திய குற்றவியல் நடைமுறைக்கோவையின் பிரிவு 438 முற்பிணை பற்றிய அமுலாக்கங்களை குறிக்க COPY CAT ஆன நாங்கள் எமது பிணைச்சட்ட இல 30 இன் 1997 சட்டசரத்து 21 ஊடாக முற்பிணை என்ற எண்ணக்கருவை இலங்கைக்கு அறிமுகப்படுத்தினோம்.

anti bail

இலங்கையை பொறுத்தளவில் முற்பிணைக்கான நீதிமன்ற பொருள்கோடலிற்கு பெயர் பெற்ற வழக்காக RUWAN GUNASEKARA AND ANOTHER V RAVI KARUNAYAKE என்ற மேன்முறையீட்டு நீதிமன்றினால் 13-தை-2005 இல் தீர்க்கப்பட்ட வழக்கு விளங்குகின்றது.

இவ்வழக்கில் ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருநாயக்க ஓர் பொது பேரணியில் Public Property Act No 17 of 1982  எனும் சட்டத்தின் கீழ் குற்றவாளியாக இனங்காணக்கூடிய தவறான, பொது சொத்துடமைக்கு அழிவை ஏற்படுத்தினார் எனும் குற்றத்திற்கு தான் குற்றஞ்சாட்டப்படக் கூடிய தகைமையை உணர்ந்ததால் கொழும்பு  கோட்டை நீதவான் நீதிமன்றில் முற்பிணைக்கான விண்ணப்பத்தை தாக்கல் செய்திருந்தார். பின்பு மேன்முறையீடுகள் பலவற்றின் பின் மேன்முறையீட்டு நீதிமன்றின் தீர்ப்பை நாம் அலசுவது பொருத்தமானது. ஏனெனில் முற்பிணைக்கான சட்டத்தத்துவார்த்தங்களை அலசுவது  இத்தீர்ப்பே.

 நான் முன்னைய பதிவில் குறிப்பிட்டதை போன்று பிரிவு 8(1) இன் பொது சொத்து பாதுகாப்பு சட்டம் ஆனது தனக்கென விஷேட பிணை ஏற்பாடு ஒன்றை கொண்டுள்ளது. ஆனால் மேன்முறையீட்டு தலைமை நீதியரசர் ஹீ கந்தராஜா பிரிவு 8(1) ஐ பற்றி விளக்குகையில் அது பிணை என்ற அம்சத்தை உள்வாங்குகின்றதே தவிர ஒருவரை பிணையில் வெளிவிடுவதற்கான நடைமுறை அம்சங்களை (Practical Prospective) வெளிக்காட்டவில்லை. எனவே 1997 ஆம் ஆண்டின் பிணைச்சட்டமே இங்கு செயற்படும். அச்சட்டத்தின் படி முற்பிணை இவ்வழக்கில் ரவி கருநாயக்கவிற்கு அனுமதிக்கப்பட்டது. இவ்வழக்கில் பாராளுமன்ற எண்ணக்கருவிற்கு விளைவு கொடுக்கும் வகையில் மன்று தனது பொருள்கோடலிற்கே வெளிப்பாட்டு முக்கியத்துவம் கொடுத்தது என்பது வெளிப்படையானது. எனவே இலங்கை நீதித்துறையின் அண்மைய போக்கு தனிமனித சுகந்திரத்தை பாதுகாப்பதில் உச்ச விருப்பு நிலையை காட்டுகின்றது எனலாம். அதோடு Thilanga Sumathipala V Attorney General என்ற வழக்கிலும் உயர் நீதிமன்றம், எமது அரசியலமைப்பின் 13 உறுப்புரையை மேற்கோள் காட்டி பிணையை அனுமதித்தமை குறிப்பிட்டு காட்டக்கூடியதாகும்.

மிக சமீபமாக 2010  இல் இலங்கை மேன்முறையீட்டு நீதிமன்றினால் WICKREMA SINGHE V ATTERNOY GENERAL, தனி மனித சுகந்திரம் (Individual Liberty) என்ற எண்ணக்கருவிற்கு உச்சபாதுகாப்பு வழங்கியமை அண்மைய உதாரணங்களாகும்.

ஆனாலும் முற்பிணை விண்ணப்பம் ஒன்றை விண்ணப்பிக்க போதுமாக தாம் கைது செய்யப்பட கூடியதான நியாயமான காரணத்தை மன்றின் முன் எண்பிக்க வேண்டியதானது விண்ணப்பதாரியின் மேலுள்ள கடப்பாடாகும். அதோடு ஒரு பயம் அல்லது தாம் கைது செய்யப்படுவோம் என்ற சந்தேகம் மட்டுமே முற்பிணை ஒன்றை பெற போதுமான தகுதியாகிவிடாது என்பதை கவனிக்க வேண்டும். அத்தோடு இந்த முற்பிணை Remand persons Act no 8 of 1991 ஐ விஞ்சி நடைமுறையில் எதிரியை பிணையில் அனுமதிக்காது.

அதோடு ஓர் குறிப்பிட்ட குற்றத்திற்கான முற்பிணை அக்குற்றத்திற்காக நீங்கள் கைது செய்யப்படுவதில் இருந்து மட்டுமே உங்களை பாதுகாக்குமே தவிர பொதுவில் அனைத்து குற்றங்கட்கும் பாதுகாப்பு அளிக்காது. காண்க Gurthish Singh V State of Punjab

இங்கு குறிப்பிடக்கூடியது முற்பிணை என்பது ஓர் உரிமையா ? அல்லது ஓர் சலுகையா ? முன்னாள் மேன்முறையீட்டு நீதியரசர் ஜெயரெட்ண ஆங்கில வாரப்பத்திரிகை ஒன்றிற்கு அளித்த ஆக்கத்தில் முற்பிணை ஓர் சலுகையே தவிர அது குடிகளின்  உரிமை அல்ல என வாதாடுகின்றார். அவரது நிலைப்பாட்டின் படி நீதிமன்றின் தற்துணிபே நீதியியலின் விளைவாக முற்பிணை விண்ணப்பங்களில் தென்படுகின்றது. எனது முன்னைய பதிவில் குறிப்பிட்ட பிணையில் வெளியிலுள்ளவரின் கடப்பாடுகள் இங்கு பொருந்தும்.

நடைமுறை அவதானிப்பின் முற்பிணை விண்ணப்பம் ஒன்றை விண்ணப்பிக்கையில்

01.Motion–பிரேரணை

02.Petittion–பிராது

03.Affidafit—சத்தியக்கடதாசி

 

அதோடு விண்ணப்பதாரியின் கல்வி,தொழில், சுகாதார நிலமை என்பவற்றையும் குறிப்பிடல் பொருத்தமானதாகும்.

Jaharki and Mukti Morch Bribery என்ற வழக்கில் நீதியரசர் மகஜன் பின்வரும் காரணங்களை முன்னிறுத்தியே முற்பிணையை இந்திய பிரதமருக்கு அனுமதித்தார் என்பது குறிப்பிடக்கூடியது.

01.வி்ண்ணப்பதாரி உடல் குன்றி காணப்பட்டார்.

02.விண்ணப்பதாரியின் குடும்பம் இந்தியாவில் தான் உள்ளது.

03.விண்ணப்பதாரியின் வசிப்பிடம் மன்றின் நியாயாதிக்கத்திற்கு உட்பட்டதாகும்.

 விண்ணப்பதாரி மன்றுக்கு தாக்கல் செய்யும் போது அதன் பிரதியொன்றை பொறுப்பான பொலிஸ் நிலைய ( தாம் எந்த பொலிஸ் நிலைய பொலிசாரால் கைது செய்யப்படுவோம் என நம்புகிறாரோ ) அதிகாரிக்கு அனுப்ப வேண்டும். ஆனால் இன்று பொலிஸ் அதிகாரிகள் இப்பிரதியை உதாசீனப்படுத்தி விட்டு தங்களுக்கு பிரதி கிடைக்கவில்லை என கூறிக்கொண்டு கைது நடவடிக்கைகளை தொடர்கின்றார்கள். இது இன்று சட்டத்தின் நடைமுறை வெற்றிடமாக ( Procedural Lacuna) ஆக காணப்படுகின்றது.

அதோடு இன்று குற்றவாளிகள் என கருதப்படுவோரை குற்றப்புலனாய்வு திணைக்களம் ( Criminal Investigation Department), தீவிரவாத புலனாய்வு திணைக்களம் ( Terrorist Investigation Department), சிறப்பு பொலிஸ் படைகள் (Special Police Units) என்பவற்றின் அதிகாரிகள் கைது செய்கின்றனர். ஆனால் பிணைச்சட்டத்தின் பிரிவு 21 பொலிஸ் அதிகாரிகளின் செயற்பாடுகளோடு மட்டுமே மட்டுப்படுகின்றது.

இறுதியாக இந்த முற்பிணை என்ற கருத்துப்பாடு இந்தியாவில் அரசியற் பழிவாங்கல்களில் இருந்து தம்மை பாதுகாத்து கொள்ள கொணர்ந்த ஓர் முறைமை கீழ்வரும் இந்திய வழக்குகள் மூலம் உங்களுக்கு மேலும் விளங்க உதவியாக இருக்கும்.

01.Balchand V State Of Mathiya Pradesh

02.Poker Ram V State of Rajastan

இன்று இலங்கையின் அரசியற்பழிவாங்கட்கட்கு அப்பாற் பட்டு தனி மனித சுகந்திரம் எனும் அடிப்படை உரிமையை நிலைநாட்டுவதற்கான நீதித்துறையின் தற்றுணிபினால் பயன்படுத்தப்படும் கருவியாக முற்பிணை உள்ளது என்பது எனது பார்வைக் கோடாகும்.

 பிணைச்சட்டத்தை தரவிறக்க இங்கே சொடுக்குங்கள்