தான் தோன்றித் தாண்டவராயர்கள்

                                                   இணைக் கட்டுரையாளர்கள் : தேவா -சிவா

“பெரும்பான்மையின் மவுனம் அது சிறுபான்மையின் மீதுபிரயோகிக்கும் வன்முறையையும் விடக் கொடியது”

மனிதன் தன்னைச் சமூகமாக தகவமைத்துக் கொண்டகாலம் தொட்டே அவன் கூடிமகிழ்ந்திருக்கும் தேவையைப் புரிந்து கொண்டான். விழாக்களை ஏற்படுத்திய மனிதன் காலப்போக்கில் தன் பயணத்தில் சேர்த்துக் கொண்ட சமய அடிப்படையிலும் விழாக்களை உருவாக்கிக் கொண்டான். சமூக, சமயரீதியான விழாக்கள் பிரத்தியேக சமூக, சமயமக்களால் அனுசரிக்கப்பட்டு பின்பு ஓரின, பல்லின சமூகங்களில் அவை விடுமுறைகளாக மாறின. இன்றைய அரசியலின் அசைவு குறிப்பாக வடமாகாணசபை தேர்தலின் பின்பு, இன ரீதியான நல்லிணக்கத்தினை நோக்கிய நகர்வாய் இருக்க வேண்டிய தேவையைப் புரிந்து கொண்டுள்ளது.

இனரீதியான நல்லிணக்கம் முதலில் தொடங்க வேண்டிய ஆரம்பப் புள்ளியாக தமிழ்குழுமங்களுக்கு இடையிலான இணக்கத்தைக் கொள்ளலாம். மாகாணசபை முதல்வரின் ஆரம்ப உரையில் வலியுறுத்தியவை நம்பிக்கை தருவதாகவும் திசையறியாது குழம்பியிருந்த தமிழ்மக்களுக்கு திசைகாட்டிபோலவும் அமைந்தது. இனங்களுக்கான உறவுப்போரில் பாரிய சீரழிவினை எட்டியதுடன் ஒருவர் மீதான மற்றையவரின் நம்பாத்தன்மையையும் வளர்த்துவிட்டது. தன்குழுமத்தின் நியாயத்தினை அது நியாய அடிப்படை இல்லாவிடினும் நியாயமாக சித்தரிக்கும் போக்கும் மற்றைய இனக்குழுமங்களைவிட தன்னை முன்னிலைப்படுத்தும் முயல்விலும் நீடித்திருக்கும் நிலைதொடர்கிறதே அன்றி சிந்தனை மாற்றத்துடன் ஆக்கபூர்வமான நம்பிக்கை அடிப்படையை கட்டியெழுப்ப எந்தவிதத்திலும் தயாராக இல்லை என்பது வருத்தத்துக்குரிய யதார்த்தம்.

பெரும்பான்மை, சிறுபான்மையை அடக்குவதும் அல்லது படிநிலையில் சிறுபான்மைக்கு அதிகாரம் வாய்ப்பின் பெரும்பான்மையை ஒடுக்குவதும் நடந்துகொண்டே தான் வருகிறது. தான் ஒடுக்கப்படும் போது அலறுகிறவன் மற்றவனைதான் அடக்குவதை ஒப்புக் கொள்ள மறுக்கின்றான். சமத்துவம் கோருபவன் சமூக அடுக்கில் தனக்கு கீழ் உள்ளவனை சமமாகப்பார்க்க சம்மதிப்பதில் மனிதநாகரீகத்தின் தோற்றம் அவனை நெறிப்படுத்தவும் சமூகத்தின் ஓர் அங்கமான அவன் சமத்துவத்தினை சமூக நலன்களின் தேவையாகக் கொண்டு வளர்த்தெடுக்கவுமே உருவானது.
இந்த முயற்சியில் பல்லாயிரம் ஆண்டுகள் கழிந்தும் ஆரம்பப் புள்ளியிலேயே சுழன்றுகொண்டோ அல்லது பின்னடைவுகளில் மேன்மைத்துவம் அடைந்து கொண்டு வந்திருப்பதுடன் சந்ததிக்கடத்தல்களில் இன்னும் அழிவிற்கான முன்னெடுப்புக்களையே தந்து விட்டுப் போகின்றான்.

சமத்துவத்தில் மனிதனின் நம்பிக்கையின்மை தொடரக்காரணம் என்ன என்பதனை உளவியல், தத்துவார்ந்த, வாழ்நிலை, சமூகச்சூழல் என பல பிரிவுகளில் பகுத்தும் தொகுத்தும் ஆராய்ந்தவர்கள் இதனைவிட இன்னும் பலதுறைகளாக நுணுக்கி ஆராய்ந்தவர்கள் எல்லோருமே ஓர் அடிப்படையை விட்டு விலகி செல்ல முடியாது. நம்பிக்கை இல்லாவிடின் எந்தமாற்றமும் சமூகத்தில் அரும்பவோ வேரூண்றி நிலைக்கவோ வாய்ப்பில்லை.

எனவே பல்கூறுகளாகப் பிரிந்து எதிர் எதிர்த்திசைகளில் பிரயாணித்துக்கொண்டு சிதறிக்கிடக்கும் சமூகக் குழுமங்களும் அதன் அங்கத்துவமான தனிமனிதர்களும் சமத்துவத்தின் மீது நம்பிக்கை வைக்காவிடில் முரண்கள் தீரப்போவதில்லை. இலங்கை இனக்குழுமங்களின் பிரிவினை அடையாளப்போக்கு, சமூகத்தை தனித்தனிதீவுகளாக்கி, ஒன்றிணைந்த வளர்ச்சிப்போக்குக்குத் தடையாக இருந்தது. இந்தப் பிரிவினைகளைச் சமூக, மொழி, இன, பிராந்திய, சாதி, சமயம் என்று வளர்த்துவிட்ட அந்தந்தக் குழுமங்களின் “இனமானஉணர்வாளர்”களுக்கு வேண்டுமானால்அவர்களின்சமூக அதிகாரநிலைக்கும்நல்வாழ்க்கைக்கும் உதவியதே அன்றி, சமூக முன்னேற்றத்திற்கும் தனிமனிதசுதந்திரத்திற்கும் மதிப்பிற்கும் எதையுமே செய்து விடவில்லை.

சிங்களப்பாடசாலைகள், இசுலாமிய பாடசாலைகள், தமிழ்பாடசாலைகள் என இலஙகைப் பாடசாலைகள் மூவகைப்பிரிவினுள் அடங்கும். கடந்த தீபாவளி வாரவிடுமுறைநாளில் வந்ததால் முதல்நாளான வெள்ளிக்கிழமை தமிழ்பாடசாலைகளுக்கு விடுமுறைநாளாக அறிவிக்கப்பட்டது. இந்துக்கள், கிறீத்தவர்கள், இசுலாமியர்கள் என மூன்று மதமாணவர்களும் தங்கள் மதம்சார் பாடசாலைகளில் தனியனாக மாத்திரம் கற்பதில்லை, ஆங்காங்கே பிறமதமாணவர்களும் ஒருபாடசாலையில் பெரும்பான்மை மதமாணவர்களுடன் சிறுதொகையில் கல்வி கற்பதும் வழமையும் நடைமுறையும்.
ஆனால் அரசால் கொடுக்கப்பட்ட சலுகை விடுமுறையை சிலபாடசாலை அதிபர்கள் தங்கள் சுயஅதிகாரத்தில் இரத்துச் செய்து தீபாவளிக்கு கொடுக்கப்பட்ட விடுமுறையில் பாடசாலையை “கர்மசிரத்தையாக”நடாத்தியுள்ளனர்.

மன்னாரில் ஆறுபாடசாலைகள் இவ்வாறு அவ்விடுமுறையில் கற்பித்தலை நடாத்தியதாக தெரிகிறது. அறியப்படாததன்எண்ணிக்கை?
முதலில் ஒருபாடசாலை அதிபருக்கு அரச சலுகைவிடுமுறையை இரத்துச்செய்யும் அதிகாரம்இருக்கின்றதா என்பதனை அந்தத்திணைக்கள அதிகாரிகளுக்கு விட்டுவிடுவோம். வெள்ளி பாடசாலைக்குப் போகாவிடில் வரவில் குறைவு, போனால் என் பண்டிகையின் விடுமுறை எனக்கு மறுக்கப்படுகின்றது என்ற மாணவனின் நிலையை ஒருபக்கம் புரிய முனைவதுடன் களியாட்டங்களுக்காகவும் விளையாட்டிற்காகவும் வரவேற்புக்கள், பிரியாவிடைகளுக்காக எத்தனை முறைகள் இதேபாடசாலைகள் பகுதியாகவோ முழுதாகவோ இயங்காமல் இடைநிறுத்தப்பட்டிருக்கின்றன? அப்போதெல்லாம் இந்த “கடமைவீரர்கள்”ஏன் பாடசாலையை தொடர்ந்து நடாத்தவில்லை?

இங்கு தான் நாம் சமூகமுரணான காரணிகளை பார்க்கமுடிகிறது. பெரும்பான்மை என்றஅலட்சியம், சமத்துவத்தில் நம்பிக்கை இல்லை, மாணவர் நலனில் அக்கறை என்ற போலித் தோற்றப்பாட்டை உருவாக்கல் என அவை விரிந்து கொண்டே போகும். மீண்டும் ஆரம்பப் புள்ளிக்கே வருவோம், இன்றைய அரசியல் சூழலில் சமூக நல்லிணக்கம், பரஸ்பர நம்பிக்கை என்பனவற்றின் தேவை அதனை நோக்கிய நகர்வு என்பன எவ்வளவு முக்கியத்துவம் பெறுகின்றது என்பதெல்லாம் கணக்கில் எடுக்கப்படவில்லை. என் அதிகார எல்லைக்குள் நான் எடுக்கும் முடிவு எவற்றையெல்லாம் அரும்ப முன்னே கிள்ளிவிடுகிறது என்ற கவனமில்லாத தான்தோன்றித்தனம், இன்னும் எத்தனை சந்ததிக்குத்தான் நாம் இந்த அலட்சியத்தையும் அழிவையும் விதைத்து விடப் போகின்றோம்?

ஏன் நம்“சமூகத்தலைமைகள்”இது பற்றி பேசுவதில்லை? ஏன் என்பதற்கு இக்கட்டுரையில் எங்கோ பதிலும் ஒழிந்திருக்கலாம்.

நன்றி:  இணைக் கட்டுரையாளர்கள் : தேவா -சிவா

ஸ்ணோடனும் பாப்பரசரும்

                                                                             பிரதியாக்கம் – சிவா – தேவா

கத்தோலிக்க திருச்சபையின் ஊசல்வாடை நிறைந்த அறைகளை ஊடறுத்துப்பாயும் புதிய காற்றாய் பாப்பரசர் பிரான்சிஸ் மக்கள் மனதில் அலை அலையாய் உணர்ச்சிகளை உருவாக்கிக்கொண்டிருக்கின்றார். சிவப்பு வெல்வெற் காலணிகளை தவிர்த்து சாதாரண காலணிகளை அணியும் இவரது வாசினைப்பட்டியலில் Dostoevsky , Cervantes எழுத்தாளர்களும் அடக்கம். திருச்சபையின் ஒழுக்கக்கோட்பாட்டை மறுக்கவில்லை என்றாலும் ஓரினச்சேர்க்கையாளரின் வாழ்க்கைமுறையை மனிதாபிமான கண்ணோட்டத்துடன் பார்க்கிறார்.

ஓர் அவிசுவாசி தன் மனச்சான்றின்படி வாழ்வானேயாயின் அவன் நரக நெருப்பிலிருந்து தப்பித்துக் கொள்வான் என இத்தாலிய பத்திரிகை லா றிப்பப்ளிக்காவிற்கு அவிசுவாசிகள் பற்றி அவர் எழுதிய கடிதம். இவை எல்லாவற்றையும்விட ஆச்சரியமும் அதிர்சியூட்டுவதுமாக அமைந்தது அவரின் தீர்க்கமான முடிவான “ தன் மனச்சான்றிற்கு காதுகொடுத்து அதன்படி நடப்பது என்பதின் பொருள் நன்மை, தீமை என்பனபற்றி உணர்ந்து முடிவெடுத்தல்”.

அதனை இன்னொருவிதமாக சொல்வதாயின் கடவுளோ , திருச்சபையோ நாம் எப்படி வாழவேண்டும் என்று நமக்குச் சொல்லத்தேவையில்லை, எங்கள் மனச்சான்றே போதுமானது. பற்றுறுதியுடைய புரட்டஸ்தாந்து கூட இத்துணைதூரம் போகமாட்டார்கள். புரட்டஸ்தாந்து கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையில் இணைப்பாளனாய் மதகுரு தேவையில்லை எனக்கூறுகிறது. பாப்பரசரின் கூற்றோ மனிதனிற்கு கடவுளே தேவையில்லை, அதனையும் வெட்டிவிடு எனக்கூறுவதுபோல் இருக்கிறது.

கால ஓட்டத்திற்கேற்ப கத்தோலிக்க திருச்சபை தயாரில்லாதிருந்திருந்தால் அது இந்த நீண்ட நெடிய காலத்தை கடந்து வந்திருக்காது. அதீத தாரண்மியவாதகாலமான இக்காலத்தை பிரதிபலிப்பது போலவே பாப்பரசரின் கூற்றும் அமைந்துள்ளது. இருப்பினும் இது சிறிது குழப்பமாகத்தான் இருக்கின்றது. ஒரு கிறித்தவ நம்பிக்கையாளனாக பாப்பரசர் நல்லவை, தீயவை பற்றிய கேள்வியை எழுப்பி ஒழுக்கரீதியாக எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்பதற்கெல்லாம் திருச்சபையின் சட்டதிட்டங்களுக்கும் புனிதமறைநூல்களுக்கும் அமையவே தன் வாதத்தினை வைத்திருக்கவேண்டும். கி்றித்தவர்கள் எது சரி எது பிழை என்பதனை பரிசுத்தத்தின் அடிப்படையில் பார்ப்பதுடன் ஒழுக்கத்தினை உலகளாவியதும் ஒரு கூட்டுமுயற்சியாகவுமே பார்க்கின்றனர்.

அமெரிக்க அரசின் முன்நாள் இரகசியத்தகவல் சேகரிப்பாளரான எட்வேட் . ஜே. ஸ்ணோடன் தன் அரசு குடிமக்களை வேவுபார்ப்பதை எதிர்த்து இரகசியத்தகவல்களை வெளியிட்டார். அவர் ஒரு கிறித்தவர், ஏன் கடவுள் நம்பிக்கை அற்றவராகக்கூட இருக்கலாம். புதிய பாப்பரசரின் ஒழுக்கம் பற்றிய கருதுகோளுக்கு அவர் மிகப்பொருத்தமானவராக தெரிகிறார். ஸ்ணோடன் தான் செய்ததை உள் உணர்வின் அடிப்படையில் செய்ததாகவே சொல்கிறார். பொதுநன்மை என்பது முற்றும் முழுவதுமாக அவர் பார்வையில் தனிமனித நடவடிக்கையாகவே இருந்துள்ளது.

சமயம் தோன்றாக்காலத்தில் ஒழுக்கநடைமுறைகள் , தனிமனித மனச்சான்று அடிப்படையாகவே இருந்திருக்கலாம். சமயப்புனிதநூல்கள் நன்மை, தீமை பற்றி கூறமுடியாவிடில் நாங்களே அதுபற்றிய முடிவை எடுக்கவேண்டியுள்ளது. சனநாயகத்தால் இதுபற்றிய முடிவை தரக்கூடிய தோற்றப்பாட்டைக்கூட ஏற்படுத்தமுடியாது. சனநாயகம் முரண்களுக்கான தீர்வினை சட்டப்படி அமைதிக்கு பங்கமின்றி உருவாக்கவே வடிவமைக்கப்பட்டது. வாழ்வின் நோக்கம், ஒழுக்கம் என்பன அதன் செயற்பரப்பெல்லைக்குள் இல்லாதது.

ஆயினும் சனநாயக அரசியல், சமய ஆதிக்கத்தைக்கொண்டதாக இருக்கவாய்ப்புண்டு, சமய ஆதிக்கத்துடன் இருப்பதும் தெரிந்தவிடயமே. அய்ரோப்பிய அரசியலில் கிறித்தவசனநாயகக்கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. இஸ்ரேயல் பழமைவாத யூதமதக்கட்சி அரசியலில் உள்ள நாடு, அமெரிக்க அரசியலில் கிறித்தவச்சிந்தனைகள், அடையாளங்களின் நிரம்பல் இருப்பினும் அதுமட்டுமே தனியான செல்வாக்குச் செலுத்துவதாக கூறமுடியாது. இஸ்லாமியர்கள் தங்கள் நம்பிக்கையை அரசியலில் சனநாயகம் அற்ற முறையில் நுழைக்கமுயல்கின்றனர். சமயநீக்கம் செய்யப்பட்ட சோசலிசம் போன்ற அரசியல் சித்தாந்தங்களுமுள்ளன. இவை கூட வலுவான ஒழுக்க விதிகளை பகுதிப்பிரிவாகக்கொண்டவை. சோசலிச கொம்யூனிசகட்சிகள், கத்தோலிக்க திருச்சபைக்கு எந்தவிதத்திலும் குறைவற்ற கறாரான நல்லவை, தீயவை பற்றிய பார்வை உள்ளவை, அத்துடன் பொதுநன்மை பற்றி தீர்க்கமான கொள்கையுடையவை. மக்கள் சனநாயகம், பல நாடுகளில் கிறித்தவ அடிப்படை கொண்டவையாக இருக்கின்றது என்பதையும் பார்க்கப்படவேண்டியதொன்று.

ஜேர்மனிய அரசுத்தலைவர் அங்கலா மார்களின் கிறித்தவ சனநாயகக்கட்சி கடந்த தேர்தலில் மாபெரும் வெற்றியை ஈட்டியது, இருந்தும் கிறித்தவம், அய்ரோப்பிய அரசியலில் விரைவாக செல்வாக்கு இழந்துவரும் ஒரு சக்தி. எல்லா இடதுசாரிகட்சிகளும் கிறித்துவத்தை விட வேகமாக செல்வாக்கை இழந்துகொண்டுபோகின்றன. சோசலிச சித்தாந்தத்தின் மீதான கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் எண்பதுகளின் இறுதியில் சோவியத் ஒன்றியத்தின் உடைவுடன் சிதறிப்போய்விட்டது.

1960 களின் சமூக எழுச்சி, 1980 களின் பொருளாதாரப் பெருவெடிப்புக்கள் புதுவகையானதொரு தாராளவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு தெளிவான ஒழுக்க அடிப்படை ஒன்று இல்லாததுடன் பல அரசுகள் தனிமனித சுதந்திரத்தை தங்குதடையின்றி மீறவும் வழிவகுத்துள்ளது. பல வழிகளில் நாம் நுகர்வோராகவே அன்றி குடிமக்களாக பார்க்கப்படுவதில்லை. முன்நாளைய இத்தாலிய பிரதமர் சில்வியோ பேர்லூஸ்கோணியின் கட்டற்ற தனிப்பட்ட, பொருளாதார நடவடிக்கைகள் அவரை தற்போதைய தாராளக்கொள்கைக்காலத்தின் பொருத்தமான அரசியல்வாதியாக மாற்றியது.

சமூகம்சார் நடவடிக்கைகளுக்கு ஒரு ஒழுக்க அடிப்படையை உருவாக்க ஏதேனும் புதிய வழிவகைகள் உள்ளனவா? சில Utopian கள் இணையத்தளம், சமூக வலைத்தளங்கள் மூலம் உலகை மாற்றி அமைக்கும் என நம்புகின்றனர். சமூக வலைத்தளங்கள் மக்களை ஒன்றுதிரட்ட உதவும் என்பதில் சிறிது உண்மை உள்ளதென்பதை மறுக்கமுடியாது. ஆயிரக்கணக்கான சீனமக்கள் , சீன அரசு அங்கு நடந்த நிலநடுக்கத்தகவல்களை மட்டுப்படுத்தி வெளியிட்டபோது சமூக வலைத்தளங்களினால் ஒன்றுதிரண்டு தம் சக குடிமக்களுக்கு உதவியிருக்கிறார்கள்.

உண்மையில் இணையம் நம்மை எதிர்த்திசையை நோக்கியே நகர்த்துகிறது. மனிதனை தற்காதல்( Narcissistic) கொண்ட நுகர்வோன் ஆக்குகிறது. தனது “லைக்ஸ்” களை வெளிப்படுத்துபவனாகவே அன்றி யாருடனும் ஆழமான தொடர்பற்றவனாக தன் தனிப்பட்ட வாழ்வின் எல்லா விபரங்களையும் பகிர்ந்துகொள்பவனாக மாறத்தூண்டுகிறது, அதனை செய்ய உற்சாகப்படுத்துகிறது. பொதுக்கருத்தை வளர்த்தெடுகக்வும் பொதுநோக்கை உருவாக்கவும் சரி,பிழை என்பனவற்றை அலசி ஆராய வரையறுக்க இது ஓர் அடித்தளமாக அமையாது.

இணையத்தளம் செய்ததெல்லாம் வியாபாரத்திற்கு நம் வாழ்க்கைபற்றிய தகவல் குவியலை சேகரிக்க உதவியதுதான். பெரிய வியாபாரங்கள் இத்தகவல்களை பெரிய அரசுகளிடம் கொடுத்தன. இதனால்தான் ஸ்ணோடனின் மனச்சாட்சி அரசின் இரகசியத்தகவல்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளத்தூண்டியது.

சிலவேளை ஸ்ணோடன் எங்களுக்கு ஓர் உபகாரம் செய்திருக்கலாம் , அவ்வளவு தானே ஒழிய தனது நம்பிக்கைக்கும் இன்றைய அதீத தாராண்மியவாதத்திற்கும் இடையிலான இடைவெளியை நிரப்ப முயலும் பாப்பரசர் தேடும் மனிதனாக ஸ்ணோடனை என்னால் பார்க்கமுடியவில்லை.

Utopian – நடைமுறைக்கு சாத்தியமற்ற முழுமையை நம்புபவன்

Narcissistic – தன்மேல் அதீத காதல்கொண்டவன் – Narciss கிரேக்கத்தொன்மத்தில் ஒரு பாத்திரம்.

Ian Buruma is Professor of Democracy, Human Rights and Journalism at Bard College, USA.

மூலம்: http://www.project-syndicate.org/commentary/pope-francis-and-the-morality-of-individualism-by-ian-buruma
                                                                  பிரதியாக்கம் – சிவா – தேவா

தனக்குத் தானே பூமழை பொழிந்துகொண்ட “மன்னார் சைவக் கலை இலக்கிய மன்றம்“

                                                     இணைக்கட்டுரையாளர்கள் –தேவா சிவா

தோழர் தேவா

தேவா

துரையூரான் சிவானந்தன்

சிவா

 

 

 

 

 

அண்மையில் “மன்னார் சைவக் கலை இலக்கிய மன்றம்“ மன்னார் நகர சபை மண்டபத்தில் முத்தமிழ் விழா ஒன்றைச் சிறப்பாக நடாத்தியது. ஒரு விழாவினை ஏற்பாடு செய்து நடத்துவது என்பது சாதாரண விடயமல்ல. விழாவுக்கு முன்னும் பின்னும் ஏகப்பட்ட நிதியும் பொருளும் உழைப்பும் தேவை. பார்வையாளர்களாக வருவோர் விழா நடக்கின்ற இரண்டு அல்லது மூன்று மணிநேரங்கள் மட்டும் இருந்து பார்த்துவிட்டு விழா பற்றிய விமர்சனங்களை முன்வைப்பர். அதிலும் ஓரிரு நிகழ்ச்சிகளை மட்டுமே பார்த்துவிட்டுச் செல்பவர்களுங்கூட முழு நிகழ்ச்சி பற்றிய பாராட்டையோ அல்லது குறைகளையோ கூறுவதும் சாதாரணமாகிவிட்டது. எனினும் குறிப்பிட்ட முத்தமிழ் விழா நிகழ்வுகளில் சில அங்கு அமர்ந்திருந்த கலை ஆர்வலர்களின் மனதைப் புண்படுத்தும் விதமாக இருந்தமை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. இதற்கான காரணங்களையும் பின்னணிகளையும் நோக்கி, தவறுகளைச் சுட்டிக்காட்டி, எதிர்காலத்தில் இவற்றை நிவர்த்திக்க, சம்பந்தப்பட்டவர்களின் கவனத்திற்குக் கொண்டு வருவதே இக் கட்டுரையின் நோக்கம்.

மன்னார் மாவட்டமானது இலங்கையின் பின்தங்கிய மாவட்டங்களுள் ஒன்று என்பதும் றோமன் கத்தோலிக்கச் சமயத்தைச் சார்ந்தவர்களைப் பெரும்பாண்மையாகக் கொண்டது என்பதும் யாவரும் அறிந்த விடயமே. ஐரோப்பியரின் வருகைக்கு முன்னர் பெரும்பாலும் சைவர்களாக இருந்த மக்களே கத்தோலிக்கராயினர் என்பதும் புதிய விடயமன்று. எனினும் நிருவாகக் கட்டமைப்புக்கும் உலகளாவிய சிறந்த வலையமைப்புக்கும் எடுத்துக்காட்டாகத் திகழும் கத்தோலிக்கத் திருச்சபையின் ஓர் அங்கமான மாவட்டத் தலைமை போன்று சைவம் சார்பாக இலங்கை முழுமைக்கும் எவ்வாறு ஒரு தலைமை இல்லையோ அவ்வாறே மன்னார் மாவட்டத்திற்கும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

மன்னார் மாவட்டமானது இரண்டு நிலப்பகுதிகளை உள்ளடக்கியது. தீவுப் பகுதி, பெருநிலப் பகுதி என்பனவே அவையாகும். இதில் பெரு நிலப்பரப்பிலேயே சைவ மக்கள் அதிகமாக வாழ்கின்றனர். சைவ மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்த ஏக தலைமை இல்லாததன் காரணமாகப் பல்வேறு கோவில்கள் சார்ந்த, சாராத அமைப்புக்கள் தனித்தனியே இயங்கி வருகின்றமையும் ஒரு பொதுப் போக்காக இருந்து வருகின்றது. இத் தனித்தனி அமைப்புக்களுக்குத் தலைமை தாங்குபவர்களாகவோ, காப்பாளர்களாகவோ பெரும்பாலும் அரச உத்தியோகம் மற்றும் வணிக நோக்கம் கருதி மன்னாரில் வாழும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்களே இருந்து வருகின்றனர். இவர்களின் தலைமையின் கீழும் ஆலோசனைகளின் வழியும் மன்னார் மாவட்டத்து நிலங்கள் தனியே ஒரு மதத்தவரின் ஆளுகைக்குக் கீழ் மொத்தமாகச் செல்லுகின்ற முன்னெடுப்புக்கள் குறைக்கப்பட்டன. கோவில்கள் பாதுகாக்கப்பட்டன. சைவக் காப்பகங்கள், நலன்புரி இல்லங்கள் உருவாக்கப்பட்டன.

மொத்தத்தில் இவர்கள் மன்னாரின் சைவ நிலைத்திருக்கைக்கு ஏராளமான பங்களிப்பைச் செய்துள்ளார்கள் என்பதுவும் கவனத்திற் கொள்ள வேண்டிய விடயமாகும். எனினும் மன்னார் மாவட்டத்தையே சொந்த மாவட்டமாகக் கொண்ட சைவத் தலைமைகளை இவர்கள் உருவாக்கவில்லை. தங்களுக்கு மாற்றீடாகச் சுய தலைமைகள் உருவாகுவதை ஊக்குவிக்கவும் இல்லை. ஆங்காங்கு சில தலைவர்கள் உருவானாலுங்கூட பொறுத்துக் கொள்ளமுடியாத சில உள்ளூர் பெரும்புள்ளிகளே முன் குறிப்பிட்ட தலைமைகளோடு கூட்டுச் சேர்ந்து முளையிலேயே கிள்ளியெறிந்து விடுவதும் வழக்கமாகி விடுகிறது. இது எப்படியென்றால் தன்னால் செய்ய முடியாதவற்றை தன்னையொத்தவர்களும் செய்துவிடக் கூடாது. ஆனால் தனக்குப் போட்டியில்லாத பிறர் செய்ய அனுமதிக்கலாம் என்ற மனநிலை. மொத்தத்தில் மேற்குறிப்பிட்டவர்களின் தலைமையை ஏற்றுக் கொள்வதைத் தவிர இங்குள்ள சைவ மக்களுக்கு மாற்று வழியில்லை எனும் நிலைமை வலிந்து உருவாக்கப்பட்டுள்ளது. ( இதற்குக் காரணமாக, பெரும்பாண்மையாக வாழும் கத்தோலிக்கச் சகோதரர்களின் தலைமைகள் எந்த நிபந்தனையுமற்று, சைவ மக்களையும் அவர்களின் தனித்துவங்களையும் அங்கீகரித்து, அரவணைத்துச் செல்லத் தவறியமையாகவும் இருக்கலாம்.)

யாழ்ப்பாணத்தில், தங்கள் சொந்த ஊரில் சாதாரணமாகச் செய்கின்ற செயற்பாடுகளையொத்தவை கூட இங்கே பெரிய சாதனையாகப் போற்றப்படுகின்றன. விழாக்கள் வைத்துப் பேசப்படுகின்றன. இங்கேயுள்ள சைவ மக்களே பெரும்பாலும் போற்றுகின்றவர்களாக மாற்றப்படுகின்றார்கள். தாங்கள் ஏற்பாடு செய்கின்ற விழாக்களிலேயே தங்களை போற்றிப் புகழ்ந்துரைப்பதற்காக பேச்சாளர்களை வரவழைக்கிறார்கள். அவர்களும் இவர்களை வானளாவப் புகழ்கிறார்கள். (புகழ்ச்சி நல்லதுதான் அது மற்றவர்களை இகழ்வதாக அமையக் கூடாது) ஆலய நிருவாகங்கள் உட்பட பல்வேறு சைவ அமைப்புக்களுக்கும் இவர்களே நிதியைப் பெற்று வழங்குபவர்களாக உள்ளார்கள். இவர்களின் சொற்படிதான் எல்லாமே நடந்தேறும். ஏதேனும் பிரச்சினைகள் என்றால் இவர்களின் ஆலோசனைப்படிதான் முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்படும். இந்த நிலைமையின் தொடர்ச்சியாகத்தான் அண்மையில் நடைபெற்ற முத்தமிழ் விழா அமைந்தது. அவ் விழாவில் பேசப்பட்ட, நிகழ்த்தப்பட்டவைகளின் சாராம்சத்தைப் பார்ப்போமேயானால் உண்மை விளங்கும்.

விழா ஆரம்பித்தது முதல் இறுதிவரை (அழைக்கப்பட்ட விருந்தினர்களில் ஒருவரைத் தவிர) மன்னார்த் தமிழ் (பேச்சுத் தமிழ்) பேசப்படவில்லை. சாதாரண உரையாடல்களில் கூட மன்னார் பேச்சுத் தமிழ் மேடையில் கேட்கவேயில்லை. மன்னார் மாவட்டத்தில் உள்ள எந்தவோர் ஊரின் பெயரும் எடுத்துக்காட்டாகக் கூட உச்சரிக்கப்படவில்லை. இதற்குக் காரணம் மன்னாரைச் சேர்ந்த யாரும் எந்த நிகழ்விலும் பேச நிகழ்ச்சி நிரலில் அனுமதிக்கப்படவில்லை. பார்வையாளர்களாக மட்டுமே இருந்தார்கள். இந்த நிலைமை ஒரு கோடலான கண்ணோட்டமாக இருக்கலாம் எனச் சிந்திக்க இடமுண்டு என்றாலும் அந்தச் சிந்தனைக்குச் சாதமாக இல்லாமல், பேசியவர்களே இத்தகைய நிலையை உறுதிப்படுத்தவும் செய்தார்கள்.

நிகழ்வில் நடைபெற்ற பட்டி மன்றத்திற்குத் தலைமை தாங்கியவர் (நடுவர்) கூறினார் ”யாழ்ப்பாணத்தில் இருந்து இடம் பெயர்ந்து வந்து, திரும்பிச் செல்லும் வழியில் சில முத்துக்கள் சிதறி, இங்கேயே (மன்னாரில்) தங்கிவிட்டன. அவைதான் இன்று இதுபோன்ற விழாக்களைச் செய்து மின்னிப் பளிச்சிடுகின்றன.” மேலும் ஒரு சந்தர்ப்பத்தில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியை எடுத்துக்காட்டாகக் குறிப்பிட வந்தவர் வெளிநாட்டில் இருந்து வந்திருந்த ஒருவர் ஓர் ஆலயத்தில் யானையின் மீதேறி வலம் வந்து தன் பகட்டைக் காட்டினாராம். அப்போது ஆலயத் தொண்டு செய்யும் அடியார் ஒருவர் வைத்தியத்திற்காக பணம் கேட்டாராம். அதற்கு யானைமேல் வலம் வந்த வெளிநாட்டவர் “வந்திட்டுது சிணி” என்றாராம். (சிணி – தலித்) இதை இவர் கூறி, தன் மேட்டிமைத் தனத்தை வெளிப்படுத்தினார். பிறிதொரு சந்தர்ப்பத்தில், ”இந்த (கல்வி) அதிகாரிகளுக்கு மண்டையில ஒன்றுமேயில்ல” ஏதேதோ பாட்டையெல்லாம் தமிழ்த்தாய் வாழ்த்து என்று பாடுகிறார்கள், பாட வைக்கிறார்கள் என்று குறைபட்டு, தனக்கு மட்டுமே தெரிந்த ஒரு கவிதையைத் தான் தமிழ்த்தாய் வாழ்த்தாக வைக்க வேண்டும் என்றார். இவ்வாறு நேரத்தைக் கவனத்தில் கொள்ளாத எத்தனையோ அர்த்தமற்ற பேச்சுக்கள். மனனம் செய்யப்பட்ட சில வெண்பா வரிகளை ஒரு சேரக் கோர்வையாகக் கூறிப் பேசினால் விளங்குகிறதோ, இல்லையோ கூட்டம் கைதட்டும். இந்த உற்சாகத்தில் பல பொருத்தமற்ற, சபையைப் பற்றிய பிரக்ஞையற்ற பேச்சாகவே அவரது பேச்சு இருந்தது.

ஆரிய மொழியான சமஸ்கிருதத்தை ஆதரிக்க வேண்டும் என்றார். தமிழரின் கலாசாரப் பண்பாடுகளை மழுங்கடித்து, மூழ்கடித்துத் தமது ஆதிக்கத்தை நிலைநாட்டிய விஜய நகரப் பேரரசர் காலத்திய வைதிக ஆரியப் பண்பாடுகளையே தூக்கலாகப் பேசுகின்ற போக்கு மேட்டிமையின் குரலாக ஒலித்ததேயன்றி உண்மைச் சைவத்தையோ, மன்னார் சைவ மக்களையோ பிரதிபலிக்கத் தவறிவிட்டது. பட்டி மன்றத்தில் உதாரணமாகச் சொல்லப்பட்ட ஊர்கள்கூட யாழ்ப்பாண ஊர்களாகவே இருந்தன. அதிலும் தனது ஊர் சார்ந்த பெருமைகளை அதிகம் பேசிக் கொண்டார்.

விழாவில் பல்வேறு துறை சார்ந்தவர்களுக்கும் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டது. எப்போதுமே விருது வழங்குகின்ற நிகழ்வு பலத்த சர்ச்சைகளை உருவாக்கக் கூடியதுதான் என்றாலும் மன்னாருக்குரிய பிரதிநிதித்துவம் போதாமையாக இருந்தது. தொகுத்து நோக்கின், யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு விழா அங்கே மண்டபம் கிடைக்கப் பெறாமையால் மன்னார் நகர மண்டபத்தில் நடத்தப்பட்டதோ என்றதொரு தோற்றத்தையே தந்தது.

இக் கட்டுரை வெறுமனே பிரதேச வாதம் பேசுவதாகவோ, சமயம் சார்ந்த கசப்புணர்வாகவோ எழுதப்படவில்லை. அவ்வாறு எழுத வேண்டிய தேவையும் கட்டுரையாளர்களுக்கு இல்லை. மன்னார் மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அமைந்த தலைப்பைக் கொண்ட ஒரு மன்றம் மன்னாரைக் கவனத்தில் கொள்ளவில்லை என்பதைச் சுட்டிக்காட்டவும் மன்னாரின் சைவ வளர்ச்சிக்கு அன்பர்கள் புரிந்த சேவையினை மதிப்பதோடு, மன்னாரால் தாங்கள் அடைந்த மேன்மையையும் சற்று சுய நினைவு கூர்தல் செய்து பார்ப்பதற்காகவும், மேடைகளில் பேசும் போது கேட்போரின் மனது புண்படாமல் பேசும் பண்பாட்டைப் பேணுவதில் கவனமாக இருக்கவும் தங்கள் மேன்மைத் தனத்தைக் காட்ட, மனிதரைத் தாழ்த்தி, வேறுபடுத்திக் காட்டும் சொற்களைத் தவிர்த்துக் கொள்ளவும் ”சிந்தித்துப் பாருங்கள் அன்பானவர்களே…” என்று கூறிக் கூறியே அவர்களின் சுய சிந்தனையை மழுங்கடித்து, அடிமைச் சிந்தனைகளைத் திணிப்பதைத் தடுக்கவும் சம்பந்தப்பட்டவர்களின் கவனத்திற்குக் கொண்டு வருவதற்காகவே எழுதப்பட்டது.

மேலும் தமிழரின் பண்பாடு, மரபுகளை உண்மையாகவே அறிவதற்கும் அவற்றைப் பின்பற்றுவதற்கும் இளந் தலைமுறையினரை வழி நடத்தும் வகையில் தமிழ் மன்றங்களும் மேடைப் பேச்சாளர்களும் முன்னெடுப்புக்களை மேற்கொள்ள வேண்டும். மேட்டிமையின் சின்னமாக திணிக்கப்பட்ட, தமிழர் மரபல்லாத, அதிக பணச் செலவுடன் கூடிய சடங்குகளை, விழாக்களை, பண்டிகைகளை, நம்பிக்கைகளைத் தங்கள் சுய இலாபத்திற்காகப் போற்றிப் புகழுகின்ற போக்கை மாற்ற வேண்டும். எவை எமது சுய மரபு, எவை எம்மீது திணிக்கப்பட்டவை, அவற்றால் நமக்கும் நமது சந்ததிக்கும் ஏதாவது பயனுண்டா என்பன குறித்துச் சிந்தித்துச் செயற்பட வேண்டும்.

ஓரிரு உயர் குடிகள் தொடர்ந்தும் தமது மேன்மைத் தனத்தைக் காட்டவும் தக்கவைத்துக் கொள்ளவும் சமூக, பொருளாதார, அரசியல் நிறுவனங்களை மேலாண்மை செய்யவும் பாமர மக்களையும், உத்தியோகத்திற்காக மட்டுமே படித்தவர்களையும், மந்தைகளைப் போல சிந்திக்காமலே பின்தொடர்பவர்களையும் இட்டுக் கட்டிய கட்டுக் கதைகளைச் சுவைபடக் கூறி, ஏமாற்றித் தலையாட்ட வைக்கும் போக்கு மாற்றப்பட வேண்டும். தாங்கள் இம்மையிலேயே சுகபோகத்தை அனுபவிப்பதற்காக, மறுமையின் சொர்க்கத்தை ஆசையாகக் காட்டி, அடக்கி வைத்து அல்லலுறச் செய்த அந்த இருண்ட காலத்தின் தொடர்ச்சி இனியும் தொடராமல் இருப்பதற்கும் ஆவன செய்தல் வேண்டும்.

இளைய தலைமுறையினரே, சீரிய சிந்தனை செழுமை தரும். எதையும் அப்படியே ஏற்றுக் கொள்வது அடக்கமாகாது. அடிமைத்தனத்தையே விதைக்கும். பகுத்தறிவைப் பயன்படுத்தி மனிதருக்குரிய சிறப்பைப் பெறுங்கள்.

                                    ஆக்கம்:  இணைக்கட்டுரையாளர்கள் –தேவா சிவா