புதியசொல் 3

‪#‎புதியசொல்3‬ சனிக்கிழமையே வாசித்துவிட்டேன்.

யாழில் தொழில்முறையிலான மெய்ப்புப்பார்ப்பவர்கள் இன்றுவரை கிடைக்கவில்லை என்பது பரிதாபம் தான். பதிப்புத்துறை சார்ந்த சந்தைவாய்ப்புகளை மேம்படுத்தமுனைவது வரவேற்கத்தக்கது.

ஜே.கே யின் மெல்லுறவு கதையை யூகிக்க முடிந்தாலும் அந்த முடிவையும் தாண்டியதாக தேவகியின் தாயின் உரையாடல் அமைந்துள்ளது. இந்தக்கதையை வாசித்த போது “தான் போகத் தெரியாத மூச்சிறு விளக்குமாற்றையும் காவிக்கொண்டு போனதாம் எனும் பழமொழி தான் ஞாபகம் வந்தது… இது கதையோடு தொடர்புடைய பெண்ணுரிமை செயற்பாட்டிற்கு இந்தப்பழமொழி உவப்பானதாக இல்லாததால் யானைக்கும் அடிசறுக்கும் பழமொழியை மீண்டும் நினைத்துக்கொண்டேன். தேவகியின் அம்மாவின் வார்த்தைகள் தான் இதில் முதிர்ச்சியானவை.. கதையின் தொடர்ச்சியாய் இருக்கும் முகநூல் நிலைக்கூற்றும் பதில்களும் அன்றாட இலக்கிய அக்கப்போரை ஞாபகமூட்டி சிரிக்க வைக்கிறது.

மிளகாய்ச்செடி தொடர்பாக அனோஜனோடு உள்பெட்டியில் கதைத்தேன். குறுநாவலுக்குரிய காலநீட்சி.

திசேராவின் மொழிநடை அழகு. ஆங்காங்கே கவிதை மொழிச்சாரல். புதியசொல்லில் இடம்பெற்றிருக்கும் கவிதைகளை நானே கவிதை என்றாலும் அவர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். தலைப்பில்லாமலும் (அ) பெயரில்லாமலும் பிரதி உள்ளது என நண்பன் பொருமினான்.

ஏதாவது புதுமையான கட்டுடைத்தல் முயற்சியாக இருக்கலாம் என நான் தேற்றிவிட்டேன்.

பின் நவீனம், வெளிப்பாட்டுவாதம் பற்றிய கட்டுரைகள் ஆய்வறிக்கைச் சுருக்கம் (thesis) போல இருக்கின்றன. பின் நவீனம் ஒரு வலிந்த மொழிபெயர்ப்பு. “‪#‎விஞ்ஞானமும்_அகராதியும்‬” , ‪#‎யாழ்_நூலகம்‬,‪#‎தித_சரவணமுத்துப்பிள்ளை‬ , ‪#‎கலாநிதி‬ , நேர்காணல் ஆகியவை சிறப்பு.

எழுத்துப்பிழைகள் தவிர்க்கமுடியாதவை தான். எனினும் தற்போது மெய்ப்புப்பார்ப்பவர்களே “வலிமிகும் இடங்கள்” பற்றியும் அறிந்துகொண்டால் பிழைகளைக் குறைக்கலாம்.

11ஆம் இலக்கக்கோவையும் தப்பும் #புதியசொல்

11ஆம் இலக்கக்கோவையும் தப்பும்
=================================‪#‎புதியசொல்‬

‪#‎காலச்சுவடு‬ http://www.kalachuvadu.com/issue-148/page34.aspமு.பொவின் இக்கட்டுரையை வாசித்ததால் எழுதுகிறேன்
— மன்னார் அமுதன்

ஹார்மோனைத் தூண்டும் பாலியல் எழுத்தைக் கையில் எடுப்பவர்கள் எளிதில் கவரப்படுவது உண்மை தான்.. ஏனென்றால் வயோதிபத்தில் இருப்பவர்களுக்கும் ((ஜெ.மோ வின் ”ஒரு கணத்திற்கு அப்பால்” வாசிக்கலாம்… ) இன்னும் பாலியல் புத்தகங்களைப் படிக்காதவர்களுக்கும், உடலுறவு கொள்வதற்கான சந்தர்ப்பம் அற்றவர்களுக்கும் இந்த எழுத்து ஒரு உடனடிக் கிளர்ச்சியை, பரவசத்தை ஏற்படுத்தும். மேற்குறித்த அனுபவம் உடையவர்களுக்கு அவற்றை நினைவுபடுத்தும். இந்தப் பரவசம் எழுத்தால் ஏற்பட்டது என்பதை விட ஹார்மோனால் ஏற்பட்டது என்பதே மெய். இதை உணரும் நிலையில் தீவிர வாசகர்கள் இருப்பார்கள் என்று நினைக்கின்றேன். புதியசொல்லில் பதினோரம் இலக்கக் கோவை வாசிக்கும் போது அவரது வாசகரைப் பாத்திரமாக்கும் கதையாடல்முறை பிடித்திருந்தது. ஆனால் பாலியலைத் தவிர்த்து அந்த நடையின் மூலம் வாசகரை அடையமுடியுமாக இருந்தால் அது பெருவெற்றியாக இருக்கும்.

மறைபொருளாக இருக்கும் ஒரு விசயத்தை அப்படியே எழுதுவதை எதிர்ப்பதற்கும், ஆதரிப்பதற்கும் குழுக்கள் இருக்கும். ஆனால் எதிர்க்கும் தரப்பும் வாசிக்கும். ஏனென்றால் இந்த இரு தரப்புமே குறிகளை பெயர்சொல்லி அழைக்க மறுக்கப்பட்ட சமூகத்திலிருந்தே வந்திருக்கிறது. எழுதத் தெரிந்தவர்கள் இந்தமுறையைக் கையாள்வது கடினமல்ல…

சமைக்கத் தடுமாறும் நாட்களில் நான் சமையல் குறிப்புகள் வாசிப்பேன். இப்போது சமையல் குறிப்புகள் படத்துடன் வருகிறது. அது போல ராகவனின் கதைகளை படத்துடன் பிரசுரிக்க நேர்ந்தால் அந்த புத்தகத்தை என்னவென்று சொல்வார்கள்…

வி.கெளரிபாலனின் தப்பு வாசித்தேன்… தலித் கதையாடல்கள் இப்போது பழமையாகிவிட்டாலும் மணக்க மணக்க எழுதிய எழுத்துகளை புரட்சி என்று (இப்போது ராகவனை சொல்வது போல) சொல்லியவர்கள் கே.டானியலின் காலத்திலிருந்து உண்டு. தப்பு எனக்கு பிடித்திருந்தது…. பிள்ளையாரின் மேல் மலத்தைக் கொண்ட வேண்டிய தேவை கதையின் முடிவிற்கும், எழுதுபவர்களின் கொள்கைக்கும் தேவையாயிருக்கிறது…

இது கதைக்கு மட்டுமல்ல… அப்படியென்றால் யாருக்கென்று சொல்லுங்கள்…

(இடையிடையே மானே தேனே பொன்மானே போட்டு “சொல்லுங்க”ளோடு நிறுத்திவிட்டால் அது ராகவன் சாயல்…”

யாருக்கு என்பதிலிருந்து தான் விமர்சனங்கள் உருவாகின்றன..

#காலச்சுவடு

புதியசொல் – அறிமுகக் குறிப்புகள்

புதிய சொல் இலங்கையிலிருந்து வெளிவரும் மும்மாத கலை இலக்கிய எழுத்துச் செயற்பாட்டிற்கான இதழ்… முதலாவது இதழிலேயே எழுத்தாளருக்கான விளக்கம் சொல்லப்போய் வில்லங்கமாகி இருக்கிறது.

இலக்கியம் என்பது நுண்சித்தரிப்புகளின் ஊடாக உட்பொருளையும், வாசிப்பிலிருந்து அடுத்த கட்ட தேடுதலையும், வாழ்வியல் அனுபவங்களையும் வாசகனுக்குக் கொடுக்கவேண்டும். வாசகனும் பிரதியையும் அது கூறும் வாழ்வியலையும், கருத்தையும் முன்வைத்தே கருத்துரைக்க வேண்டும். அவ்வாறு செயற்படும் பொழுது தான் நாம் முன்னோக்கிச் செல்ல முடியும்.

ஓர் எழுத்திற்கும், ஒவ்வொரு சொல்லிற்கும் அர்த்தம் கண்டுபிடிக்க முயல்வது ஆக்கபூர்வமான இலக்கியச்செயற்பாட்டை திசைதிருப்பும் நோக்கமாகவே இருக்கும். செயற்பாட்டைச் செய்ய முனைந்தவர்களே திசைதிருப்பலையும் செய்திருப்பது தான் வேதனை. எவ்வளவோ பேசியிருக்கிறது புதியசொல்.. ஆனால் அதையெல்லாம் விட்டுவிட்டு ஒருவார்த்தைக்குள் இன்று மறைக்கடிக்கப்பட்டுள்ளது

‪#‎புதியசொல்‬லில் எழுத்தாளாருக்கு அறிமுகக்குறிப்பில் அர்த்தம் சொல்லிவிட்டு பின்பு எழுத்தர் என்றும் பாவிக்கப்பட்டுள்ளது.

எழுத்தர் என்பதும் எழுத்தாளர் என்பதும் ஒன்றா… எனக்குத் தெரிந்து பொலிஸ் நிலையங்களில் (writer), அலுவலகங்களில் சிலர் இருப்பார்கள் … யாராவது சொல்லுவதை, முறைப்பாட்டை அப்படியே எழுதிக் கொள்வார்கள்… அதைவிட அவர்களுக்கு வேறு எதுவும் தெரியாது.. புதிதாக சேர்க்கவும் முடியாது….

எழுத்தாளன் எனும் சொல்லை விளங்கிக்கொள்வதிலும் பொருள் கொடுப்பதிலும் ஏற்பட்டுள்ள சிக்கல் “உளச்சிக்கல்” மட்டுமே..

ஒருவனை எழுத்தாளனாக ஏற்றுக்கொள்வதில் உள்ள சிக்கல் மட்டுமே. மற்ற எல்லாமே அகராதியில் உள்ளது. ”எழுதாதீர்கள், காட்டுங்கள்” என்பது பிரபல்யமான வாக்கியம் … யார்சொன்னதென்று தெரியவில்லை… அதிலுள்ள காட்டுங்கள் என்பதற்கு எத்தனையோ அர்த்தம் உண்டு. எழுத்தின் ஊடாக காட்டுதல்… அகராதியையும் தாண்டி அதை உணரத்தான் முடியும்…

இலக்கிய முன்னெடுப்பு, கலைச்சொல் உருவாக்கதிலோ பொருள் கொடுப்பதிலோ, தெரிதாவை முன்வைப்பதிலிருந்தோ நிலைநிறுத்தப்படுவதில்லை. அவற்றை கடைப்பிடித்து எவ்வளவு தூரம் நகர்கிறோம் என்பதிலிருக்கிறது.

எழுதத் தொடங்கும் போது பலர் இருப்பவர்களை விமர்சித்துக் கொண்டே தான் தொடங்குகின்றனர். இங்கு எழுதுவதை விட விமர்சிப்பதும் அதனூடான வளர்ச்சியும் எல்லோருக்கும் மிக எளிதாக உள்ளது.

இத்துறையில் நீண்டகாலம் எழுதுவதன் ஊடாக நிற்கமுடியும்… வீரியமாக எழுதி குறைந்தகாலத்தில் புகழ்பெற முடியும்… உருப்படியாக எழுதவும் முடியவில்லை, வாசித்து கருத்துரைக்கவும் முடியவில்லை என்றால்  சஞ்சிகைகளை வெளியிடலாம். ஆனால் நிலைத்து நிற்பது என்பது கனவு தான்.

மன்னாரிலிருந்து வெளிவந்த சஞ்சிகை , தினசரி நாளிதழ் முயற்சிகளைக் கூட வரலாறு ”இடம் பிடிக்கும் செயற்பாடாக” மட்டுமே பதிவுசெய்து கொள்ளும்.

புதியசொல்லில் அறிமுகக் குறிப்பை தவிர மீதமெல்லாம் விளங்கிவிட்டது என்றுதான் சொல்லவேண்டும். அப்படிச் சொல்லாவிட்டால் என்னை ஏளனமாய் பார்க்க ஒரு எழுத்தர் கூட்டம் இருக்கலாம்.

ஏன் தெரிவு செய்தீர்கள் என கேட்கமாட்டேன். ஒவ்வொரு சஞ்சிகைக்கும் ஒரு அரசியல் இருக்கும். பின்புலம் இருக்கும். எனக்கு அதுவொன்றும் இல்லை. தாக்குபிடிக்க முடியாது.

ஆனால் கனதியான கட்டுரைகள், (நவீன ஓவியம்) நேர்காணல், கவிதைகள் நிறைந்தது “புதிய சொல்”. அழகான வடிவமைப்பு கூட.

ஜேகே யின் கட்டுரை வாசித்து முடித்த பின்பு அவர் அதில் குறிப்பிட்டிருக்கும் நாவல்களைத் தேட தொடங்கியுள்ளேன்.

இலக்கிய வாசிப்பினால் மனம் பரந்துபட்டால் போதும். எழுத்தாளன் எனும் ஒரு சொல்லும், பிரதியின் பொருளும் உங்களை எதுவும் செய்துவிடாது.

— மன்னார் அமுதன்

#புதியசொல் ‪#‎எழுத்தாளர்‬