ஆருடம்

மன்னர் வருகையின்
மகத்துவம் பேசியோர்
இன்னும் ஓய்வின்றி
ஏதேதோ சொல்கிறார்,
வந்து போயொரு
வாரமாய் ஆகியும்
சிந்தை குளிர்ந்திட
சிறப்பினை மெல்கிறார்

மன்னூரான் ஷிஹார்

மன்னூரான் ஷிஹார்

மந்திரி சபையதன்
மகத்தான வெற்றிக்கு
மன்னரின் வருகையோ
மகுடமாய் ஆனதாம்
என்ன சொல்லநான்
எவர்பேச்சை நம்ப நான்
மென்று துப்பிடும்
மெல்லிலை ஜெயிக்குமாம்
ஆளாளுக்காய் வந்து
ஆருடம் மொழிகிறார்
ஆங்காங்கே நின்றுமே
அரட்டையில் கொல்கிறார்

ஆறேழு நாட்களில்
அவர் கொட்டம் அடங்கலாம்
அதுவரை ஓடட்டும்
ஆட்டமும் போடட்டும்
ஆரென்ன சொன்னாலும்
அடிக்கவே வந்தாலும்
மார்தட்டி இறுமாப்பாய்
மல்லுக்கு நின்றாலும்
நாளொன்று இனிவரும்
நல்லதாய் விடிந்திடும் – ரத்த
நாளங்கள் எங்கிலும்
நம்பிக்கை பாய்ந்திடும்!
                     – மன்னூரான் ஷிஹார்

எனக்கு நீ

DSC011001

மன்னூரான் ஷிஹார்

உன் பளிங்குக் கண்களின்
பார்வைபட்டதும்
எனக்குள்
பரவசம் வந்து
பற்றிக்கொள்கிறது.

நீ உதடுகள் குவித்து
என் முகமெங்கும்
எச்சில் பதிக்கையில்
எங்கோ புதுக்கிரகத்தில்
சஞ்சரிக்கிறது மனது.

தயங்கித் தயங்கி
நீயென்
விரல் பற்றுகையில்
வெண்பஞ்சுக் குவியலின்
மிருதுவையுணர்கிறேன் நான்.

உன் நாவிலிருந்து
கோர்வையாய் உதிரும்
கொச்சைத்தமிழில்
என்
கோபதாபங்களெல்லாம்
என்னோடு
கோபித்துக்கொள்கின்றன.

நீ உறங்கும் அழகை
உற்று ரசித்தே
நான்
உறங்காமல் விழித்த
இரவுகள் அதிகம்.

நீ அழுகின்றபோதுகூட
அழகாய்த்தான் இருக்கிறாய்
ஆனாலும் உன்னை
அரைநொடிநேரம் அழவிடவும்
அனுமதிப்பதில்லை மனது.

‘அப்பா’ என்று நீ
அழைக்கும் அழகிலென்
அத்தனை சோகமும்
அடிபட்டுப்போகுதடா.

மகனாய்ப் பிறந்தெனை
மகிழ்விக்கும் மகனேயுன்
மகனாய்ப் பிறந்திடவென்
மனமது துடிக்குதடா!
-மன்னூரான் ஷிஹார்