ஜே.ஆர். மயூரனின் “மனப்பூக்கள்”

விமர்சனம்: நன்றி: சூரன் – சுடர் ஒளி

“வருடிய இளமைக்காற்று”(2010) “நிழலில்லா தடயங்கள்” (2011) ஆகிய கவிதை நூல்களின் மூலம் வாசகர்களின் மனதில் இடம்படித்த ஜே.ஆர். மயூரனின்” மனப்பூக்கள் “எனும் கவிதைத் தொகுதி அண்மையில் மன்னாரில் வெளியிடப்பட்டது.

வாசகர்களுக்கு இலகுவாகப் புரிந்து கொள்ளும் வகையில் இலகுவான நடையில் கவிதை புனைந் துள்ளார்.இப்புத்தகத்தில் 40 கவிதைகள் உள்ளன. யதார்த்தங்கள், ஏக்கங்கள், எதிர்பார்ப்புகள் என்பன இவரது கவிதைகளில் முன்னிலை வகிக்கின்றன. தான் கல்விகற்ற மன்னார் புனித சவேரியர் ஆண்கள் தேசிய பாடசாலைக்கு தனது கவிதை புத்தகத்தை சமர்ப்பணம் செய்துள்ளார்.பஸ்மிபாஸில் அஹமட் வரைந்த ஓவியங்கள் கவிதைகளிடையே கதை சொல்கின்றன.

“நிறமிழக்கா ஞாபகம்” எனும் தலைப் பிலான கவிதை பாடசாலை காலத்தை மனதில் நிழலாட வைக்கிறது.
கணிதப் பாம்பு கக்கிய உணர்வுகளில்
தழும்புகள் பாயும்
ஆங்கில முதலை தின்கிற பசியால்
தூக்கம் கண் சொருகும் “கணிதமும் ஆங்கில மும் விருப்பமில்லாப் பாடங்கள் என்பதை அழகாக விபரிக்கிறார்.

“புத்தகப் பொந்துக்குள்
எழுத்துப் பறவைகள் அங்குமிங்குமாய்
சிறகடிக்கும்
சிலநேரம் சிவப்புக் குருவிகள்
எச்சமிடும் “புதுமையான கற்பனை

துன்பப்படும் மனிதர்கள் கவலை எல்லை மீறும்போது அழுவார்கள். மனிதனின் துன்பம் கண்டு கடவுள் அழுததுண்டா?”கடவுளும் அழுகிறார்” என்றார் மயூரன்.

“படைத்ததை ஆழ்கவென
வழங்க,
மனிதன் ஆழ்கிறான்
கடவுளையும் சேர்த்து
அறிவுதின்ற இனத்து வேஷ‌ ‌த்தினால்
தினசரி செய்திகள்
அயல் நாட்டின் தலைப்புச்
செய்தியாக”
எதிர்காலத்தை அறிவதற்காக கைரேகை பார்ப்பார்கள்.”கைரேகை” என்ற கவிதை மூலம் மனிதனின் துன்பதுயரங்களை அழகாக வெளிப் படுத்தியுள்ளார்.

“இளமை கொழுவிய நாளில்
இயந்திரமாய்
சுழற்றினார்கள்
தோல்பையும், பேனாமுனையும்
கொண்டு சென்ற வேளையில்
ஆயுதங்களை பரிசளித்தார்கள்.”

“உணர்வுத் துகள்கள்” என்ற கவிதையில் மயூரன் கேட்கும் கேள்விகளுக்கான விடையை யார் தருவார் கள்.
“நாடு விட்டு நாடு
அகதி கடந்தால் தானே
ஏன் சொந்த நாட்டுக்குள்
நாங்கள் அகதியெனும்
முத்திரையோடு ?
விதியின் கம்பத்தில்
நூலறுந்த மின்குமிழாய் தமிழ்
கழுத்தறுத்து நிற்பதேன் கூறு?”
இந்தக் கேள்விக்கான பதில் எங்கிருந்து வரும்?

“மனச்சிறை” என்ற தலைப்பலான கவிதையில் விலைவாசியால் திண்டாடுவதை யுத்தம் தந்த பரிசென அழகாக விவரிக்கிறார்.
“யுத்தம்
கொப்பளித்த வடுக்கள்
விலை வாசியின் குழந்தையால்
இன்னும் தொடர்கிறது
எங்கள் அகதிப்பயணங்களிலே”

தீபாவளி என்றால் மகிழ்ச்சியும் கொண்டாட்டமும் களைகட்டும்.தீபாவளி நரகத்தில் நடந்தால் எப்படி இருக்கும் என்ற மயூரனின் கற்பனை மூலம் வெளிப்படுகிறது.காதல் உணர்வு எப்படி இருக்கும் என்பதை இளமையில் இன்பம் என்ற கவிதையின் மூலம் வெளிப்படுத்துகின்றார். நவநாகரிகம் என்ற பெயரில் சில பெண்கள் அணியும் ஆபரணங்கள் மயூரனின் மனதை காயப்படுத்தியுள்ளன. நக்கலான கோபத்துடன் சாட்டையடி கொடுக்கிறார்.

மனப்பூக்கள் என்ற இந்த கவிதைப் புத்தகத்தில் உள்ள 40 கவிதைகளும் சிரமமின்றி இலகுவாகப் படிக்கும் வகையில் உள்ளன.கவிதைகளைப் போன்றே கவிதை யின் தலைப்புகளும் மனதில் அழுத்தமாகப் பதியும் வகை யில் கவிதை போல் உள்ளன.

நன்றி : சூரன்
சுடர் ஒளி

குண்டு சேர் – எஸ்.ஏ.உதயனின் சிறுகதைகள்

குண்டு சேர் – எஸ்.ஏ.உதயனின் சிறுகதைகள் — ஒரு வாசகனின் பார்வையில் — ஆக்கம்: தேவா

“ஒரு சொல் அதுவாகவும் அதனுள்ளும் விசையாற்றல் கொண்டது. ஒன்றுமில்லாமலிருந்து ஒலியாய் கருத்தாய் உருப்பெற்று எல்லாவற்றிற்கும் பிறப்புமூலமாகும் சொல்லினூடு உலகில் சமனாய் தொடர்பாட முடிகிறது. எனவே சொல்  புனிதமானது”. Scott Momaday  ஆதிக்குடி அமெரிக்க எழுத்தாளன்.

ஆக்கம் : “தழல்” தோழர் தேவா

ஆக்கம் :  தோழர் தேவா

மனிதனின் மிகப் பெரியதும்  முதன்மையானதுமான  சாதனை  தன் நாவையும் தொண்டையும் ஓசைகளுக்கு தகவமைத்துக்கொண்டதே அவ்வோசைகளின் மூலம் தன் தொடர்பாடலைத் தொடங்கிய அவன்  தன் தொடர் முயற்சியில் என்றோ இலக்கியத்தையும் கண்டடைந்தான்.  இலக்கியங்களின் வடிவமைப்பும் போக்கும் மாறுபட்டாலும் இன்றுவரை அவை தம் ஆதித்தேவையினை விட்டு விலகவில்லை. சொல்வதே படைப்பாளியின் நோக்கம். அதை அவன் சமூகத்திடமிருந்து பெறும் யதார்த்தத்தைச் சொல்வதோ சமாந்தர யாதர்த்தத்தில் படைப்பது அவன் கையாளும் உத்தி.

எஸ் .ஏ உதயனையும் அவர் படைப்பாற்றலையும் வாசகனுக்கு அறிமுகப்படுத்தியதும் நிலைத்திருக்கச்செய்வதும் அவர் பொறியில் அறையும் யதார்த்தங்களே. 1999  இல் தொடங்கி 2010 வரை எழுதிய சிறு கதைகளை ஒரே எடுப்பில் வாசிக்கும்போது  வன்செயல் காலமென வாய்மொழிப்பேச்சில் புரளும் ஒரு சொல்லாடலின் மெல்லிய இழை கதைகளினூடு இடையறாது ஓடுவதைப் புரிந்துகொள்ளமுடியும்.

சமூக உறவுகளுக்கிடையிலான  வன்முறைகளை குண்டுசேரில் தொடங்கி மாற்ற மயக்கம்வரை தனக்கே உரியபாணியில்  பதிவுசெய்துள்ளார். மேட்டிமைக்காரனின் இலக்கியத்திற்கும்  உதயன்போன்ற  down to earth  இலக்கியக்காரகளுக்குமான வித்தியாசங்களில் ஒன்று சொற்கள்.  சாதாரணபேச்சுவழக்கில் உள்ள சொற்கலின் ஆற்றல் அவைகளைச் சரியாகக்கோறபதில் காணும் வெற்றி. ஒன்றுக்கு மேற்பட்ட கதைகளில்  சூ என்ற ஓர் எழுத்து ஒரு பந்தி விபரணைக்குச் சமமாகக் கச்சிதமாகப் பொருந்துவதை பார்க்கலாம்.  இது ஒரு பிராந்திய விளிப்பாயினும்  இலக்கியமாதலில் எவ்வித துருத்தலுமின்றி இணைந்துகொள்கிறது.

குண்டுசேர் :   வன்முறைப்பிரதேசத்திலிருந்து தப்பி வந்த மாணாக்கச்சிறுவனுக்கும் நிறுவணப்படுத்தப்பட்ட வன்முறைக்குமான மோதல் . அவன் துப்பரவான சீருடை , உடற்சுகாதாரம் பேணாமை என்பதற்காக தண்டிக்கப்படுவது (துணியை உருவி  பிட்டத்தில் பிரம்படி ) அவனை அங்கிருந்து விரட்டப்பார்க்கிறது.  இறுதியில் டேவிற்றுக்கும் கோலியாத்துக்கும் சமரசம். வலியவன் மெலிந்தவனை அவனின் இயலாமைக்குத்தண்டிப்பதும் பின்பு பரிவுகாட்டலும் பொதுநீதியில் ஒத்துக்கொண்டதொன்றாய் பார்ப்பினும்  இன்னும் ஆழமாக பரிசீலிக்கும்போது தேவையற்ற வன் முறை எனவும் புரிந்துகொள்ளமுடியும்.

பாவம் சந்திரா:   புலம்பெயர் அண்ணனுக்கும் ஊர்தங்கைக்குமான உறவுச்சிக்கல் . எதிர்பார்ப்புக்களை பேசுகிறது, ஏமாற்றத்தை பேசுகிறது.

இனிவிடிந்துவிடும் :   என்னை அங்கு சிலுவையில் தொங்கவிட்டு விட்டு… யேசுவும் இருளனதும் சம்பாசணையில் யேசு பேசுகிறார். சிலுவையிலும் கருவறையிலும் கண்ணாடிப்பெட்டியினுள்ளும்  சட்டமிட்டும் தொங்கும் எல்லாச் சமயக் கடவுள்களின் அங்கலாய்ப்பை யேசு சொல்வதுபோல் சமயம் பெயரளவுக்கும் மனிதன் தன்னளவிலும் இருக்கும் நிலையைப் பதிவுசெய்துள்ளது.

காணமல்போனவன் :  பத்துவருடங்கள் கணவனைப்பற்றிய தகவல்கள் இல்லாமலிருந்தும் தந்தையின் மறுமணயோசணைக்கு இணங்காமலும்  காத்திருந்த மனைவி இறுதியில் கணவனைக்கண்டபோது இவனை யாரெனத்தெரியாது  என மறுதலிப்பது நம் சமூகத்தின் வாழ்வுச்சூழலில் நடக்குமா என்று கேட்டால் நடக்கலாம் என்ற பதிலையன்றி நடக்காது என உறுதியாகச் சொல்லமுடியாது. பெண்ணியப்பிரதியாக இதைப்பார்க்கலாம் , தனிமனிதனின் தேர்வுச்சுதந்தரமாகவும் இதனைப்பார்க்கலாம்  நிறையவே சிந்திக்க வைக்கும் கதை.

ஊரைத்தெரிஞ்சுக்கிட்டு:    பொருளீட்டலுக்காக பிரதேசம் செல்லல் ஆண்களுக்கு மட்டுமன்றி பெண்களுக்கும் புறப்பட திறந்த வாய்ப்பு மத்தியகிழக்கு நாடுகள். பணிப்பெண் வேலையின் பரிதாபங்கள் செய்திகளாய் கதைகளாய் பல பதிவாகி இருந்தும் தொடர்ச்சியில் ஊரைத்தெரிந்துகிட்டு பேசுவது வேறு ஒரு செய்தியை.

ஸ்கொலர்சிப்:  சமூக அங்கீகாரம் பெற்ற வன்முறை , கல்வியின் பெயரால் ஏறத்தாள எல்லாக்குடும்பங்களிலும் அரங்கேறுவது. யாரும் எளிதில்  தெளிவாக பேச முன்வராத விடயம் இயல்பாகச்சொல்லப்பட்ட கதை.

ஓவியக்காதல்:  நுண்கலைகளைப் பயில்பவனை சமூகம் மதிப்பதில்லை ஓவியன் சூரியும் அதற்கு விதிவிலக்கல்ல.  தன் முயற்சியில் ஓவியனாகி ஒரு பெண்மேல் கொண்ட காதலால், எந்த அழகு அவனை ஆட்கொண்டதோ அது அழிந்தபின்பும் அக்காதல் மாறாதிருப்பதைப் பேசுகிறது.

கடற்குளிப்பு:   வெளிநாட்டு வேலைக்காரனும் அவன் மனைவியும் அவரவர்கள் வாழ்க்கைப்பார்வையும் . கரையோரவாசிகளுக்கும் நாளாந்தம் கடலைப்பார்த்தாலும்  அதன் கவர்ச்சி குறையாதென்பதை விவரணையில் கூறும் ஆசிரியன்  குடும்பமென்பது ஆணின் சிந்தனைக்கும் பெண்ணின் சிந்தனைக்குமான முரணை சொற்சிக்கனத்துடன் பேசியிருக்கிறார். ஆணுக்கு குடும்பம் வேண்டும் உழைப்பும் வேண்டும் இரண்டையும் தராசில் இட்டால் உழைப்பு தாழ்ந்து பெறுமதிமிக்கதாகிவிடுகிறது . பெண்ணிற்கு குடும்பமென்ற முழுமை வேண்டும். பிள்ளைகளுக்கு தந்தை வேண்டும் தனக்கு கணவன் வேண்டும் ஒன்றாக ஒரு சிறு கூட்டாக வாழவேண்டும்.  விடுமுறைக்கு வந்துபோகும் கணவனுக்கும் அவனது கூடல்கள் மாத்திரம் அவளுக்குப்போதாது. என்னருகே என்னுடனே இரு என்பதை அவன் ஏற்றுக்கொள்ளாததில் சீ என வரும் வெறுப்பு. இதை ஆண் பெண் முரண் என்றுப்பார்ப்பதா இல்லை வெளிநாட்டுப்பணமிருந்தால் என் குடும்பம் சீராக இருக்குமென்று அவன் நினைப்பதைப் பார்ப்பதா. பங்குனியில் வரும் கடல்நுரையாய் நீ இருக்காதே  பங்குகொள்ளும் துணைவனாய் நீ என்னருகே இரு என மனைவி கேட்பதில் இருக்கும் நியாயத்தைப்பார்பதா இன்னும் பல பிற கேள்விகள்.

காத்திருப்பு:   முதுவயது வாழ்க்கைக்கு உத்தரவாதமில்லாத சமூகச்சூழல் சார்ந்திருத்தலே ஒரேவழி. சூசையின் அம்மாவுக்குப் போக்கிடமில்லை, மூத்தமகனும் கைவிட்டநிலையில் சூசையின் வீட்டில் நாளாந்த உதாசீணங்கள் அதிகரிக்கச் சூசை எடுத்த முடிவு  எந்த நியாத்துக்கும் பொருந்திவராது. சூசைக்கு ஒரு  நியாயம் இருக்கிறதென்பதை அது அவலமாயினும் கண்முன் நாளாந்தம் அலைகழிக்காதென அவன் நினைப்பது அவன் முடிவா சூழலின் அழுத்தமா.

யசோதா:  சித்தார்த்தன் நல்லிரவில் கோழைபோல் மனைவியிடம் சொல்லாமல்கொள்ளாமல் ஓடிப்போய் “ ஞானம்” பெற்றுத்திரும்ப நியாயம் கேட்கப்போகும் மனைவி . ஜீவகாருண்யம் , நிர்வாணம், புத்தம் சரணம், தம்மம் சரணம் , சங்கம் சரணமெல்லாம் வெற்றுக்கோசந்தானே கவுமதா. கணவனாய் தந்தையாய் உன் கடமைகளை விட்டு விட்டு நான் உள் ஒளியைப்பெருக்கப்போனேன் என்று சொன்னால் இது எந்த தருமத்தில் சேர்த்தி. சம்சார சாகரத்தை கடக்கும் தோனியை  சுமந்து செல்லமுடியாதென்றால் உன் சித்து விளையாட்டுக்கு  நான் என தொட்டு நுகர்ந்து தூரவீசும் ஓர் இளிபொருளா. உன் உள்ளொளிக்கு நானும் குழந்தையுமா பலி அறச்சீற்றமான கேள்விகள்.  “இரவோடு இரவாகச் சொல்லிக்கொள்ளாமல் போன உன்னிடம் பகல் ஒளியில் சொல்லிப்போக வந்தேன்” யசோதா சொல்ல வேண்டியதெல்லாவற்றையும் ஒற்றைவரியில் சொன்னது ஒரு காத்திரமான பார்வை.

கிரீடம்:  கூத்துக்கலைஞர்களின் மகுடப்போட்டி . வாசாப்பு நாவலின் பாத்திரங்களிக்கிடையிலான சர்ச்சை.

ஆசை மரிப்பு:  வயதான நோயாளியின் சுவைக்கான போரில் வென்றது யாரெனவும் வயோதிபமும் நோயும், சுமையாகிப்போனவனின் கதை.

மாற்றமயக்கம்:  நாளை எதுவாக விடியுமென இன்று பார்க்கும் கதை. நுகர்வு மனிதனின் எல்லா வளத்தையும் வியாபாரமாக்கி இறுதியில் அவனையும் விலை கேட்கும் நிலையும்  பணமுள்ளவனின்  வேட்டைக்காடாக  நம் போன்ற நாடுகள்  மாறிவருவதையும்  மாற்றமெனும்  மயக்கத்தில்  சுயமிழந்து மதிப்பிழந்து பண்டங்களாய் போவதையும் கிராமம் அதற்கான ஆயத்த கோலங்களை பூணுவதைப்பற்றியும் பேசுகிறது.

கொதிப்பு:  தென்னகத்துக் கூத்தாடி இனவாதத்தை மேடையில் கக்க மன்னாரிலிருந்துபோன கலைஞனின் மனப்பாடுகள். பெரும்பான்மை இனத்தின் திமிருக்கு பதிலடி கொடுக்க அவன் சொல்லும் பதிலுடன் முடியும் கதை.

அபத்தம்:  என்றும் சமூகத்தின் அதீத கவனத்தைப்பெற்றது தாரமிழந்த பெண்ணின் வாழ்க்கை ,”நடத்தை” . ஓயாத பார்வையையும் எண்ணற்றக்கருத்துக்களையும்  கதை கதையாய் உற்பத்தி செய்யும் அயலவர்கள் தெரிந்தவர்கள்  “பிடித்து பிசைந்தவந்தமாதிரி இருக்க” அவளால் முடியவில்லை . இந்த குரூர மனப்பாங்கும் வளரும் பருவப்பிள்ளைகளுடன் அவளது தனிமை மனப்போராட்டங்களைச் சொல்லும் கதை. கதையின் இறுதியில் அவள் தன் முடிவினை உறுதுசெய்துகொண்டபோது  நடக்கும் சம்பவம் எல்லாவற்றையும் புரட்டிப்போடுகிறது. தன்னிச்சையாய் பெண் தன் முடிவுகளை இன்றும் எடுக்க முடியாது இருப்பதுடன் இன்று நாட்டில் தாரமிழந்த இளம்பெண்களின் சமூகச்சிக்கலையும் தொட்டுச்செல்கிறது.

நான்கு நாவல்கள் , நாடகம் , ஓவியம் , கூத்து, குறும்படம் என பலதளங்களில் உதயனின்  படைப்புலகம் விரிவடைகிறது. கதைசொல்லி உதயனின்  குண்டுசேர்  தொகுப்பு  அவரின் பரிமாணவளர்ச்சியையும் பிராந்தியமொழி  கையாளலின் திறனையும் சொல்லிச் செல்லும் இப்பதினைந்து கதைகளும் வெவ்வேறானவை. அவை எழுதப்பட்ட காலங்களும் வெவ்வேறானது. ஆற அமர உட்கார்ந்து ஆழமாக வாசிக்கவேண்டிய தொகுப்பு.

முனைவென்றி நா.சுரேஷ்குமாரின் “அழகிய ராட்சசி”

முனைவென்றி நா.சுரேஷ்குமாரின் “அழகிய ராட்சசி
– மன்னார் அமுதன்

தோழர் முனைவென்றி நா.சுரேஷ்குமாரின் கவிதைகளை ஒரே இருப்பில் வாசித்து முடித்துவிட்டேன். தன் உணர்வுகளுக்கு எழுத்துக்களால் உருக்கொடுத்து வாசகர் உள்ளங்களில் உலாவவிட்டுள்ளார். சுரேஷ்குமார் தன் கவிப்பயணத்தைக் காலம் காலமாய்க் கவிதைகள் போற்றும் காதலைத் தொட்டுத் தொடங்குகின்றார். தன்னை ஆட்கொண்ட ஒரு தேவைதயைப் பற்றி சிறிதும் பெரிதுமாய் ஒன்றைத் தலைப்பின் கீழ் பாடியுள்ளர். காலம் தோறும் பருவம் மாறாது பூக்கும் பூ காதல். அது காய்த்தும் பின் கனிந்தும் பல தனிமரங்களை பெருந்தோப்பாக்கி விடுகிறது.

நின்று கதைப்பதற்கு நேரமற்ற இன்றைய நவீன யுகத்தில் காதல் அரிதான ஒன்றாகிவிட்டது. பொருளாதாரத் தேடலில் குடும்ப உறவுகளையே தொலைத்து நிற்கும் தோழர்களுக்கு மத்தியில் உற்ற துணைக்கு முன்னுரிமை அளித்து காதல் கவிதைகளை வார்த்துள்ளார் கவிஞர். பெரும்பாலான எழுத்தாளர்கள் முதலில் எழுதத் தொடங்குவது கவிதையைத் தான்… காதலைத் தான்… காலம் போற்றும் காதலைக் கருவாய்க் கொண்டு “அழகிய இராட்சசி” எனும் இந்நூலை உருவாக்கியிருக்கிறார் கவிஞர். அடிப்படையில் ஒரு மனிதனிடம் அழகியல் சிந்தனைகளையும், கற்பனைகளையும் உருவாக்கி அவனைக் கவிஞனாக்குவது காதல் தான். காதல் வந்த பின் உலகமே அழகாகிவிடுகிறது. Continue reading