துளிர்விடும் துயரங்களும், நம்பிக்கைகளும்: வெற்றிச் செல்வியின் கவிதை நூல் வெளியீடு

Mannar (2)mவெற்றிச்செல்வி (செல்வி வேலு.சந்திரகலா) எழுதிய ‘துளிர்விடும் துயரங்களும் நம்பிக்கைகளும்’ கவிதைநூல் தைமாத முழுநிலா நாளாகிய நேற்று (15) மன்னார் ‘கலையருவி’ மண்டபத்தில் நடைபெற்றது.

மன்னார் எழுத்தாளர் பேரவையினரும் தழல் இலக்கிய வட்டத்தினரும் ஒழுங்குபடுத்திய இந்த நிகழ்வு, மன்னார் தமிழ்ச்சங்கத்தின் செயலாளர் துரையூரான் திரு.எம்.சிவானந்தன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமான இந்நிகழ்வில் முதல் பிரதியை யாழ் பல்கலைக்கழக தமிழ்த்துறை பகுதிநேர விரிவுரையாளர் திரு.ம.ந.கடம்பேஸ்வரன் (காப்பியதாசன்) அவர்கள் வைபவரீதியாக வெளியிட்டு வைக்க, முதல் பிரதியைப் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் பெற்றுக் கொண்டார்.

மன்னார் எழுத்தாளர்கள் பலர் கலந்து கொண்ட இந்நிகழ்வில் துளிர்விடும் துயரங்களும் நம்பிக்கைகளும் கவிதைநூலின் மதிப்பீட்டுரையினை ஊடகவியலாளர் பொ.மாணிக்கவாசகம் நிகழ்த்தினார்.

Mannar (9)mஇதே நூலாசிரியரின் ‘போராளியின் காதலி’ நாவல் பற்றிய பார்வைப் பகிர்வினை நாவலாசிரியர் எஸ்.ஏ.உதயன், ‘ஈழப்போரின் இறுதிநாட்கள்’ நூல் பற்றிய உணர்வுப் பகிர்வினை சைபர்சிற்றி பதிப்பக உரிமையாளர் சதீஸ், ‘காணாமல்போனவனின் மனைவி’, ‘முடியாத ஏக்கங்கள்’ ஆகிய சிறுகதைத் தொகுதி நூல்கள் பற்றிய பார்வைப் பகிர்வினை எழுத்தாளர் கானவி, ‘இப்படிக்கு அக்கா’, ‘இப்படிக்கு தங்கை’ ஆகிய கவிதைத் தொகுதிகள் பற்றிய உணர்வுப்பகிர்வை கவிஞர் வேல் லவன் ஆகியோர் நிகழ்த்தினார்கள்.

ஏற்புரை மற்றும் நன்றியுரையினை நூல்களின் ஆசிரியர் செல்வி வெற்றிச்செல்வி நிகழ்த்தினார். இவர்களுடன் இந் நிகழ்வில் மன்னார் நகரசபை உறுப்பினர் து.குமரேசன், மன்னார் பிரதேசசபை உப தவிசாளர் சகாயம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

மனதின் மடல்

பிரியமானவனே,
கனவுகளோடும் கேள்விகளோடும்
கழிகிறது வாழ்நாள்.

வெற்றிச்செல்வி

நீயும் நானுமாய்
கண்ட கனவுகள்
கட்டிய கோட்டைகள்
மண்ணோடு மண்ணாகிப்போனது
உண்மைதான்.
என்றாலும்
உன்னோடு வாழ்ந்த
காலங்கள் போதுமென்று
எப்படி நான் ஆறிக்கொள்ள?

என்னவனே,
உன்னைப்போல்
நம் உறவுகளும்
ஊரவரும்
கண்ட கனவுகள் கொஞ்சமல்ல.
கிழக்கிலே உதயமும்
வடக்கிலே வசந்தமும்
வீசத் தொடங்கியபோதுதான்
நம் கனவுகள் கலைந்தன.
அட, அதுவரையும்
நாம் கனவிலேதான் வாழ்ந்தோமா?
நம்பத்தான் முடியுதில்லை.

இப்போதும்
எல்லாம் கனவுபோலத்தான் இருக்கிறது.

நல்லவனே,
உன் மௌனங்களை
எவரும் எனக்கு
மொழி பெயர்த்துச் சொல்லவில்லை.
அதை புரிந்து கொள்ளாதது
என் மடத்தனமா?
புரிய வைக்காதது
உன் மடத்தனமா?
புரியவே இல்லை.

உன்னோடு வாழ்ந்த
காலங்கள் கொஞ்சமே
என்றாலும் சுகமே.
நிழலின் அருமை வெயிலில் தெரியும்
என்பதைப்போல,
உனது அருமையும் பெருமையும்
இப்போது புரிகிறது.
இருந்துமென்ன
நீயில்லாத வாழ்வை
வாழப்பிடிக்குதில்லை.
உன்னோடு பழகிய
அழகிய ஞாபகங்கள்
குடையென விரிந்து
நிழல்களை நினைவுபடுத்துகின்றன.
நம்வீட்டு ரோஜாக்களும்
மல்லிகைகளும்
உதிர்ந்து போனாலும்
அவைதந்த நறுமணங்கள்
மனசைவிட்டு அகலுதில்லை.

தோழனே,
நீ சொல்லித் தந்த தோழமையை
பற்றுப் பாசத்தை
தன்னம்பிக்கையை
மரணம் தாண்டியும்
மறக்க முடியாது.

என் ஆன்மா
அவற்றின் பதிவுகளோடேயே
அடுத்த பிறவி எடுக்கும்.

நெஞ்சம் நிறைந்தவனே,
உன்னை
காதலித்த காலங்களை
பவுத்திரப்படுத்துகிறது மனசு.

நீ இருக்கிறாயா?
இல்லையா?
என் குங்குமத்தை அழித்துக்கொள்ள
எனக்கு விருப்பமில்லை.
அதனால்
நீ இல்லை என்பதை
நான்
ஏற்றுக்கொள்ளப் போவதில்லை.

நீ தந்த
நம்பிக்கைளோடேயே
காத்திருப்பேன்.
 — வெற்றிச்செல்வி