மன்னார்…. இது நமது பூமி #மன்னார்_அமுதன்

மன்னார்…. இது நமது பூமி
======================= #மன்னார்_அமுதன்

இது நமது மண்
பாட்டன்களின் பூமி
நம் பிள்ளைகளின் சொத்து

இங்கேயே பிறந்தோம்
எங்கெங்கோ வாழ்ந்தாலும்
இங்கேயே இறப்போம்…

மண்ணின் எழுச்சியிலும்
மக்களின் வளர்ச்சியிலும் நாமிருப்போம்
நாம் மட்டுமே இருப்போம்…
நம்மை ஒதுக்கிவிட்டொரு மண்ணை
இங்கு… எவனும் படைக்க முடியாது…

காலைச்சுற்றும் பிள்ளைகளையும்
கண்ணீர் சிந்தும் மனைவியையும்
விட்டுவிட்டுப் போராடிக் கொண்டிருக்கிறோம்
அறியாமையின் விடுதலைக்காக….

யோசித்துப் பார் தோழா…!

இது சிவபூமியா…
கிறித்தவ மறைமாவட்டமா…
மதங்களை எப்போது கண்டடைந்தோம்…
மனிதத்தைத் தொலைத்த நாட்களில் தானே….

மூர்வீதி முஸ்தபாவிற்கு
ஈத் முபாறக் சொன்னபோது
ஈரக் கண்களோடு அணைத்துக்கொண்டான்
அவனது அணைப்பில்
அன்பு இருந்தது

எப்போதும் எமக்குள் இப்படியில்லையே..
எவனெவனோ எம்மை
ஆழ வந்தபின்தான் இப்படியாகிவிட்டது

நாளொரு குழுமம்
பொழுதொரு பதிவென
திரி தூண்டப்பட்டிருக்கிறது மதம்…
திகுதிகுவென எரிகிறது மனிதம்…

எம் மண்ணை….. எம் மக்களுக்கே…
எவனோ ஒருவன் அளந்து கொடுக்கிறான்…
அதற்கு வரி வேறு…
வட்டி வேறு…

பிரித்தாளும் சூழ்சியிலே
மதத்திற்கு முதலிடம்
இனத்திற்கு இரண்டாமிடம்
பாலியல் துஷ்பிரயோகத்திற்கு மூன்றாமிடம்…
மனிதத்திற்கு இடமேயில்லை…

இது எனது பூமியல்ல…
இது உனது பூமியுமல்ல…
இது நமது பூமி…
நமது உரிமை…
சர்க்காரின் அடிமையிடம் கேட்டுப்பெற
இது சலுகையுமில்லை …. உரிமை…

மக்களே…!
நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள்…
இது உங்கள் மண்…
உங்களுக்கு மட்டுமேயானது…
வரி இல்லை… வட்டி இல்லை…

சர்க்காரின் அடிமையாகிய அவனைப் போல்
டாஷைப் பிறப்பிடமாகவும்
டாஷை வசிப்பிடமாகவும் கொண்டு
வாழ்நாளெல்லாம் டாஷாக வாழ்ந்து
டாஷில் இறந்துவிடும்
அந்த டாஷ் நாமில்லையே…

டாஷை எதைக்கொண்டாவது நிரப்புங்கள்…
இதுவும் உங்களது உரிமைதான் …

#மன்னார்_அமுதன்

“ஏழைகளின் குதிரை” வரவும் வரலாறும் #மன்னார்_அமுதன்

 “ஏழைகளின் குதிரை” வரவும் வரலாறும்

 • மன்னார் அமுதன்

அறிமுகம்:

மன்னார் மக்களின் அன்றாட வாழ்விலிருந்து பிரிக்கமுடியாத ஒரு விலங்கினமாக கழுதைகள் காணப்படுகின்றன. இன்று அளெசகரியத்தை ஏற்படுத்தும் ஒரு உயிரினமாக கழுதைகள் எதிர்ப்புணர்வோடு  மலினமாகப் பார்க்கப்பட்டாலும், அவை மனிதவரலாறு முழுவதும் உதவும் கால்களுடனும், சுமைதாங்குவதற்கென்றே படைக்கப்பட்ட மிருகங்களாகவும் தம்மை அடையாளப்படுத்திக்கொண்டு எம்மோடு நடந்து வருகின்றன.

மன்னார் நகரசபைக்கு உட்பட்ட பகுதியில் 375 கழுதைகளும், மன்னார் நகரம் முழுவதுமாக ஆயிரத்திற்கும் மேற்பட்டதாகவும் இலங்கைத்தீவு முழுவதுமாக 3000ற்கு மேற்பட்ட கழுதைகள் காணப்படுவதாகவும் அண்மையில்(2012) மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் கூறுகின்றன. உலகம் முழுவதும் இதன் எண்ணிக்கை 41 மில்லியனாக (2006) இருக்கின்ற போதிலும் 1995 ஆண்டுடன் ஒப்பிடும் போது (43.7 மில்லியன்) இதன் தொகை குறைந்துள்ளது கவனத்திற்குரியது. இலங்கையில் புத்தளம், கற்பிட்டி, ஆகிய பகுதிகளில் கழுதைகள் வாழ்ந்தாலும் மன்னாரில் தான் அதிக அளவில் வாழ்கின்றன. இதனால் மன்னார் கடந்த காலங்களில் “கழுதை நகரம்” என்று செல்லமாக அழைக்கப்பட்டதுடன் அதிக எண்ணிக்கையிலான கழுதைகளைக் கொண்டவர்கள் பெரும் தனவந்தர்களாக அறியப்பட்ட காலப்பகுதிகளும் வரலாற்றில் உண்டு.

உடலுழைப்பிற்கு பெயர்பெற்ற கழுதைகளை உரிமைகோருவதற்கு எவருமற்ற சூழலை நவீன காலமும், அதன் நிமித்தமான தொழில்நுட்பமும் ஏற்படுத்தியுள்ள இன்றைய நாட்களில் கட்டாக்காலிகளாக சுற்றித்திரியும் கழுதைகளால் ஏற்படும் விபத்துகளின் அதிகரித்த எண்ணிக்கை காரணமாக அவற்றை மன்னார் பிரதேசத்தில் இருந்து வெளியேற்றுவதற்கான செயற்திட்டங்கள் மாவட்டமட்டத்தில் இடம்பெற்றன. எனினும் அவை பலனளிக்கவில்லை. இத்தகைய சூழலில் கழுதைகளைப் பழக்கி பிரதேச சுற்றுலாத்துறை வளர்ச்சியில் பயன்படுதுவதன் மூலம் கழுதைகளைக் காக்கவும், மக்கள் மத்தியில் அவற்றிற்கான புகழை மீண்டும் ஏற்படுத்தவும் பிரிஜ்ஜிங் லங்கா போன்ற நிறுவனங்கள் முயன்றுவருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

கழுதைகளின் வாழ்க்கையும், இயல்பும்:

ஈகியூஸ் அசினஸ் (Equus asinus) எனும் அறிவியல் பெயர்கொண்டு அழைக்கப்படும் காட்டுக்கழுதை இனமானது, குதிரை மற்றும் வரிக்குதிரை குடும்பத்தைச் சார்ந்த தாவர உண்ணியாகும். பொதி சுமக்கும் கழுதைகளின் வாழ்க்கைக் காலமானது ஏழைநாடுகளில் 12-15 வருடங்களாகவும் பணக்கார நாடுகளில் 30-50 வருடங்களாகவும் கணக்கிடப்படுகிறது. உரிய  பராமரிப்பின் கீழ் சராசரியாக 40 வருடங்கள் வரை கழுதைகள் வாழும். எனினும் கழுதைகலின் வயதை 1 வருடத்திற்கு ஒரு முறை கணிப்பதில்லை. ஏனெனின் ஒரு பெண் கழுதையின் கற்பகாலமானது (gestation) ஒரு வருடமும் இரண்டு வாரங்களும் ஆகும். 

கழுதைகளின் அளவானது (size) அவற்றின் இனத்திற்கு ஏற்ப மாறுபடும். பொதிக்கழுதைகளின் தோள் உயரமானது 80-150 செ.மீட்டராகவும், வாலின் நீளம் 42 செ.மீ, தலைமுதல் பின்பகுதி வரையான நீளம் 200செ.மீட்டராகவும் உள்ளது. மார்புச்சுற்றளவையும் (Heart Girth squared) நீளஉயரத்தையும் பெருக்கி வரும் நிறையை 11,877 ஆல் வகுத்து இவைகளின் எடையைக் கணக்கிட(monograph) முடியும் (Source: Carroll& Huntington, 1988). கழுதைகள் தமக்குள் தொடர்புகளை ஏர்படுத்திக்கொள்ள மிகையொலிகளைப் பயன்படுத்துகின்றன. கழுதை கத்துவதன் மூலம் (bray) 12 கி.மீ அப்பால் உள்ள தனது இனத்தை தொடர்புகொள்ளக்கூடியது. இதற்கு அதன் நீண்ட காதுகளும், பலமான தொண்டையமைப்பும், சக்திமிக்க நுரையீரலும் உதவுகின்றன.

கருப்பு, சாம்பல், பழுப்பு / கபில நிறங்களைக் கொண்ட கழுதைகள்  80 – 275 கிலோ கிராம் நிறையுடையதாக உள்ளதோடு அதன் கால்கள் கற்பாறைகளிலும், உயரமான மேட்டிலும், உயர்ந்த கட்டிடப் படிகளிலும் ஏறக்கூடியவாறு நன்கு பலம் உள்ளதாக அமைந்துள்ளது. தனக்கோ, தன் குட்டிக்கோ அச்சுறுத்தல் ஏற்படுத்தப்படும் போதோ அல்லது கழுதைகள் குழப்பமடையும் போதோ எதிரில் இருப்பவர்களை கடித்தோ , முன்னங்கால்களால் அடித்தோ, பின்னங்கால்களால் உதைத்தோ தனது எதிர்ப்பை வெளிக்காட்டும்.

சுமார் 40மில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்ட காட்டுவிலங்குகளாக மனிதநாகரிகத்திற்கு அறிமுகமாகும் காட்டுக்கழுதைகள் (wild ass) கி.மு4000 முதல் கி.மு 3000 வரையிலான காலப்பகுதியில் வீட்டுவிலங்குகளாக பழக்கப்படுத்தப்பட்டு எகிப்து அல்லது மெசபடோமியாவிலிருந்து உலகின் பிறபகுதிகளுக்கு பரவலாக்கப்பட்டுள்ளது. இவை சுமார் 5000 ஆண்டுகளாக தொழிற்பாடுகளில் ஈடுபடுத்தப்பட்டுவருவதாக வரலாற்று ஆவணங்கள் கூறுகின்றன. கொலம்பஸ் அமெரிக்கா நோக்கிச் சென்ற போது அவருடன் 4 ஆண்கழுதைகளையும், 2 பெண்கழுதைகளையும் கொண்டு சென்றார் என்ற அரிய தகவலானது மிகவும் ஆச்சரிமூட்டக்கூடியதாக உள்ளது.

இன்று இலங்கையில் காணப்படும் கழுதைகளானது எகிப்து நாட்டைச் சேர்ந்த அட்லஸ், ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த சோமாலிய கழுதைகள் மற்றும் சிரியா நாட்டைச் சார்ந்த கழுதைகள் இனங்களாக அறியப்படுகிறது. இவற்றுள் மன்னார் பிரதேசத்தில் காணப்படும் கழுதைகள் சோமாலிய கழுதைகள் (Equus Africanus Asinus) வகையைச் சார்ந்தவையாகவும், வணிக நோக்கிற்காக கி.பி.8ஆம் நூற்றாண்டில் இலங்கைக்கு வருகை தந்த அரேபிய வணிகர்களால் இவை இங்கு கொண்டு வரப்பட்டு வர்த்தக நோக்கில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

பள்ளிக்கூடங்களில் மெள்ளக்கற்கும் சிறுவர்களையும், தொழிற்கூடங்களில் பணியாற்றாமல் சோம்பிக்கிடக்கும் தொழிலாளர்களையும் “முட்டாள் கழுதை” , “சோம்பேறிக் கழுதை” எனும் வசைமொழிகளைப் பயன்படுத்தி கீழ்மைப்படுத்துவதுண்டு. எனினும் இந்த வசைமொழிகள் கழுதைக்கு சற்றும் பொருத்தமற்றவை. மனிதர்களைச் சார்ந்து வாழும்(symbiotic)  தன்மைகொண்ட கழுதைகள், நாய்களை ஒத்த அறிவுக்கூர்மையையும், விசுவாசத்தையும் தன் எஜமானர்களிடம் வெளிக்காட்டக்கூடியவை என்பன அறிவியல் ஆய்வுகளின் மூலம் நிரூபனமாகியுள்ளன. பெரும் பாரங்களைச் சுமக்கவும், பாரங்களுடன் மலைகளில் ஏறவும், மந்தைகளையும் பண்ணைகளையும் பாதுகாக்கவும் கழுதைகள் இன்றும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. கற்பாறைகளுடன் கூடிய மேட்டுநிலப்பரப்பிலோ அல்லது உலர்ந்த தாழ்நிலப்பாலைகளிலோ வாழுவதையே கழுதைகள் விரும்புகின்றன. அத்தகைய உலர்ந்த தாழ் மற்றும் வரண்ட நிலஅமைப்பைக் கொண்ட மன்னார் பிரதேசத்தில் கழுதைகள் அதிகரித்துக் காணப்படுவதற்கு இங்குள்ள பருவகாலமும், நிலஅமைப்பும் முக்கியப் பங்காற்றுகின்றன. கழுதைகள் கூட்டமாக வாழுவதையும், தாம் பிறரால் அரவணக்கப்படுவதையும் விரும்பும் தன்மை கொண்டவை. இவைகள் கூட்டமாகவோ, குதிரைகளுடனோ, மட்டக்குதிரைகளுடனோ (pony) சேர்ந்து திரிவதை மன்னார் பிரதேசத்தில் காணக்கூடியதாக உள்ளது.

சமூக அந்தஸ்து மற்றும் பொருளாதார வளர்ச்சியில் கழுதைகளின் தாக்கம்:

கழுதைகளினால் பல பயன்பாடுகள் இருந்தாலும் குறிப்பாக உப்பளங்களிலும், வயல்வேலைகளிலும் (புறநானூறு-15 நெட்டிமையார், ஹத்திகும்பா கல்வெட்டு, புறநானூறு 392 -ஒளவையார்), சலவைத் தொழிலிலும், மீனவர்கள் மீன்களையும் வலைகளையும் சுமந்து செல்லவும், விறகுகளை வெட்டிச் சுமக்கவும், மனிதர்களைச் சுமந்து செல்லவுமென பொதிக்கழுதைகளின் பயன்பாடு அதிகரித்துக் காணப்பட்டதுடன் இச்சமூகங்களில் கழுதைகள் மிகப்பெரிய சொத்தாக கணிக்கப்பட்டு வந்தன. சீதனம் வழங்கலில் கழுதைகளின் எண்ணிக்கை பிரதானமானதாகவும், அதிக கழுதைகளை வைத்திருப்பவர்கள் தனவந்தர்களாகவும் மதிக்கப்பட்டனர். இவை எல்லாவற்றிற்கும் மேலாக ஏளனத்துடன் நோக்கப்படும் இக்கழுதைகள் தான் போர்த்துகேயர்கள் மன்னார் பிரதேசத்தில் சென்.ஜோர்ஜ் கோட்டையைக் கட்டும் போது பெரும் பாறைகளை அனாயசமாக சுமந்து உதவிசெய்தன என்பதும்  குறிப்பிடத்தக்கது.

மேலும் எழில்நிறைந்த மன்னாரின் பெருநிலப்பரப்பு எவ்வாறு நன்னீருக்கும், நெல்லுக்கும் பெயர்பெற்றதோ அதே போன்று மன்னார் தீவும், பிரதேச நிலப்பரப்பும் பெருமளவிலான தென்னந்தோட்டங்களின் அமைவிடமாக உள்ளது. குருத்துகளை அழித்து தெங்கு சாகுபடியை பெருமளவில் வீழச்செய்த தென்னம்வண்டுகளையும் (Coconut rhinoceros beetles), ஓலைகளை அழிக்கும் பூச்சியினத்தையும் (coconut caterpillar) எதிர்த்து எத்தகைய கிருமிநாசினிகளும், மனிதர்களின் எதிர்நடவடிக்கைகளும் பயனளிக்காத அக்காலப்பகுதியில் தோட்டங்களில் வளர்த்த கழுதைகள் எழுப்பும் மிகையொலிக் (>80dB) கத்தலானது காண்டாமிருக வண்டுகளை மரங்களின் அருகில் அண்ட விடாமல் துரத்தியுள்ளதாக அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படாவிட்டாலும் இன்றும் நம்பப்படுகிறது. அத்துடன் கழுதையின் விட்டை (dung), சிறுநீர் காரமணமானது இளங்குருத்துகளையும், ஓலைகளையும் தின்னும் வண்டுகள், பூச்சிகளை ஈர்க்கிறது. பூச்சிகள் விட்டையில் முட்டைகளை இடுகின்றன. குஞ்சுகள் பொரிப்பதற்கு முன்னமே கழுதை விட்டை விரைவாகக் காய்ந்து விடுவதால் மேற்கொண்டு இனவிருத்தி அடையாமல் அவ்வினம் அழிவடைகிறது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே இவைகள் பூச்சிக்கொல்லியாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளன. வளர்முக நாடுகளில் செல்லப்பிராணியாக கழுதைகள் வீடுகளில் வளர்க்கப்பட்டு வருகின்ற போதிலும் 96% கழுதைகள் ஏழைநாடுகளில் பொதிசுமக்கும் கழுதைகளாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மனித உழைப்பிற்கு வழங்கப்படும் கூலியோடு ஒப்பிடுகையில் கழுதைகள் தம் எஜமானர்களின் பொருளாதாரத்தைப் பெருக்குவதில் பெரும்பங்காற்றுவதை அறியமுடிகிறது. எனினும் மன்னார் பிரதேசத்தில் கழுதைகள் இன்று கைவிடப்பட்ட நிலையில், காட்டு விலங்குகளைப் போல் சுற்றித் திரிகின்றன.

எகிப்தின் குடும்ப ஆட்சி முறைகளில் (dynasty 4) கிமு 2675 க்கும் கி.மு 2565 இடைப்பட்ட காலப்பகுதியில் 1000ற்கும் மேற்பட்ட கழுதைகளை உடையவர்களே சமூகத்தில் கனவான்களாக போற்றப்பட்டனர். எகிப்தின் ஆட்சியாளர்களான அரசர் நேமர் , அரசர் ஹோர் அஹா (King Narmer or King Hor-Aha) அவர்களின் எலும்புக்கூடுகள் 2003 ஆம் ஆண்டில் தோண்டியெடுக்கப்பட்டன. அப்புதைகுளியில் 10 கழுதைகளும், மனிதர்களுக்கு வழங்கப்படும் அதியுச்ச கெளரவம் வழங்கப்பட்டு அரசனோடு சேர்த்து புதைக்கப்பட்டிருந்தமையானது கழுதைகளுக்கு வழங்கப்பட்ட முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது.

இத்தாலி மற்றும் சீனா ஆகிய நாடுகளில் கழுதைகளின் இறைச்சி உணவாகப் பயன்படுத்தப்படுவதுடன் இத்தாலியில் 2010 ஆண்டில் மட்டும் கிட்டத்தட்ட 1000 கழுதைகளுக்கு மேல் இறைச்சிக்காக கொல்லப்பட்டுள்ளன.

கதைகளிலும் பழமொழிகளிலும் கழுதைகள்:

ஆதிகாலம் தொட்டே எமக்கான வரலாறானது செவிவழிச் செய்திகளாகத் தான் கடத்தப்பட்டிருக்கிறது. கேட்பதில் இன்பம் மிகைகொள்ளும் எமது இளமைக்காலம் கதைகளால் நிரம்பி வழிந்திருந்தது. அன்றும், இன்றும் எமது பாட்டிகளும் தாயும் சொல்லும் கதைகளில் முல்லாவோடு, கழுதைகளும் கதைமாந்தர்களாக உலாவருகின்றன. மதப்புத்தங்கங்கள் முதல் கதைப்புத்தகங்கள் (பஞ்சதந்திரம், முல்லா, ஈசாப் நீதிக் கதைகள், விலங்குப்பண்ணை) வரை எல்லா இடங்களிலும் கழுதைகள் நீக்கமற நிறைந்திருக்கின்றன.

வரலாறு முழுவதும் கழுதைகள் விரவிக்கிடந்தாலும், நன்மைகள் பல செய்திருந்தாலும் கழுதைகள் மீதான எதிர்ப்புணர்வு உலகம் முழுவதும் எப்போதும் இருந்துகொண்டே தான் இருக்கிறது. கழுதை என்ற பதத்தைப் பயன்படுத்தி மனிதர்களைக் கீழ்மைப்படுத்துவதற்கான பழமொழிகளுக்கும் எம் சமூகத்தில் குறைவில்லை. அவ்வாறான வசைமொழிகளால் விலங்குகளுடன் மனிதனை ஒப்பிட்டு விலங்குகளைத் தான் கீழ்மைப்படுத்துகிறோம். கீழ்க்குறிப்பிடப்படும் பழமொழிகள் நாட்டாரியலில் வழங்கப்படும் சொலவடைகளை அச்சேற்றுவதற்கேயன்றி எச்சமூகத்தையும் தாழ்த்துவதற்காக அல்ல என்பதை இவ்விடத்தில் கருத்திற் கொள்ளவேண்டும்.

பழமொழிகள்:

 1. கழுதை வளையற்காரன் கிட்டபோயும் கெட்டது, வண்ணான் கிட்டபோயும் கெட்டது.
 2. கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை?
 3. கழுதை கெட்டால் குட்டிச் சுவர்….
 4. கழுதை தேஞ்சு கட்டெறும்பானது….
 5. ஏழு கழுதை வயசாச்சு…
 6. கழுதைக்கு வாக்கப்பட்டால் அடியும் உதையும் தான்…
 7. அழுத பிள்ளை சிரிச்சதாம், கழுதைப் பாலைக் குடிச்சதாம்
 8. ஊருக்குப் போனானாம் வண்ணான், ஒசந்துச்சாம் கழுதை
 9. ஊர் மேய்ந்த கழுதை உருப்படாது.

ஜோர்ஜ் ஓர்வெல் (George Orwell) எழுதி மொழிபெயர்க்கப்பட்ட உருவகப்புதினமான விலங்குப்பண்ணையில் (Animal Farm – 1945) வரும் பெஞ்சமின் எனும் கழுதையைப் பற்றிய வர்ணணையானது இப்படி இருக்கிறது “ஆகக்கூடிய கோபக்குணம் கொண்ட கழுதைதான் அந்தப் பண்ணையின் ஆரம்பவிலங்காகும். கழுதை கதைப்பது குறைவு. கதைப்பினும் அவை உதவாக்கரை எண்ணங்களாகவே இருக்கும். உதாரணமாகக் கடவுள் தனக்கு வாலைப் படைத்தது ஈக்களைத் துரத்துவதற்காக என்றாலும் காலக்கிரமத்தில் தனக்கு வாலில்லாமல் போனதால் ஈக்களும் இல்லாமல் போய்விட்டன என்று கழுதை கூறியது”.

அப்பண்ணையில் வசித்து வந்த அறிவார்ந்த விலங்குகளில் ஒன்றாக இருந்ததோடு பன்றிக்கு இணையாகப் படிக்கத் தெரிந்த விலங்குமாக பெஞ்சமின் திகழ்ந்தது.  கழுதைகள் வெளிக்காட்டும் மிகக்குறைவான எதிர்ப்புணர்வாலும், மிகையான சகிப்புத்தன்மையாலும், மெள்ள நகர்வதாலும் பிறவிலங்குகளை விட எளிதில் தாக்குதலுக்கு உள்ளாகிக் காயமடைகின்றன.

கழுதைகளின் மகத்துவமும் மருத்துவகுணமும்:

வேத காலத்தில் (ஹரிவம்சம்-57) கழுதைகளுக்கு மதிப்பு இருந்ததாகத் கூறப்படுகிறது. அதர்வன வேதமும் (9-6-4), ஐதரேய பிராமணமும் (4-9-1) முறையே இந்திரனும் அக்னியும் கழுதை வாகனத்தில் சென்றதாகக் கூறுகிறது. கிரேக்க நாட்டில் ஒலிம்பிய தெய்வமான ஹெபைஸ்டோஸ், டயோனிசிஸ், இந்திய கிராம தேவதையான சீதளா தேவி (மூதேவி) ஆகியோருக்கும் கழுதையே வாகனம் ஆகும். ரிக் வேதத்தில் கழுதைகள் “கர்தபா” எனும் சொல்லால் குறிக்கப்படுகின்றன. இருபதாம் நூற்றாண்டில் சதக்குப்புலவர் என்பவர் தான்வாழ்ந்த மன்னார் சூழலைக்கொண்டு “கழுதையும் மூடரும்” எனும் சிலேடைப்பாடல்களைப் பாடியுள்ளார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

பண்டைய கால கல்வெட்டுகளில் கழுதைச் சாபமும் காணப்படுகிறது. கல்வெட்டுகளில் சொன்ன விஷயங்களை மீறினாலோ, பின்பற்றாமல் விட்டாலோ அவர்கள் கழுதைகளைப் புணர்ந்த சாபத்தை அடைவார்கள் என்று கல்வெட்டுகளில் எழுதப்பட்டுள்ளன. மேலும் குற்றவாளிகளையும், பெண்களுக்கு எதிராக தவறிழைத்தோரையும் கழுதை மீது உட்கார வைத்து, அவன் முகத்தில் கருப்பு, சிவப்பு வர்ணங்களால் புள்ளிகளை வைத்து நகர் வழியாகக் கூட்டிச் செல்வர். இப்போதும் வட இந்தியாவில் இது நடக்கிறது. கழுதைகளை பாரம் சுமக்கவும், போக்குவரத்திற்கும் பயன்படுத்தும் வழக்கம் நீண்ட காலமாக உள்ளது. அக நானூறில் (89) மதுரைக்காஞ்சிப் புலவர் இது பற்றிப் பாடுகிறார். பதிற்றுப்பத்து, பெரும்பாணாற்றுபடையிலும் கழுதையின் புகழ் பாடப்பட்டுள்ளது.  இதுதவிர வெடிபொருட்களைச் சுமந்து செல்வதற்காக முதலாம் உலகப்போரிலும், வெடிகுண்டுகளைக் கட்டிய தற்கொலைதாரிகளாக இன்றளவும் நடைபெறும் ஆப்கானிஸ்தான், ஈராக், லெபனான், காஸா போர்களிலும் கழுதைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. போரின் போது இராணுவவீரர்களுக்கு உணவுப்பஞ்சம் ஏற்பட்டால் கழுதைகளின் இறைச்சியை உணவாக உட்கொள்ளமுடியும் என்பதும் இதற்கு மற்றுமொரு காரணமாகும்.

கழுதைகளின் பாலில் புரோட்டீன் மற்றும் கொழுப்பு குறைவாகவும் லக்டோஸ் செறிவுள்ளதாகவும் காணப்படுவதால் தாய்பாலை ஒத்த தன்மையைக் கொண்டவையாக அறிவியல் ஆய்வுகளின் மூலம் நிரூபணமாகியுள்ளது. இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பகாலம் வரை தாய்ப்பாலுக்கு இணையாக கழுதை பால் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. மேலும் இவை அழகியல் சாதனங்கள், சவர்க்காரம், தோலின் மென்மையைப் பேணும் களிகளின் (moisturizers) உற்பத்திகளில் மூலப்பொருளாகவும் உணவுத்தேவைகளை நிறைவு செய்வதிலும் பெருமளவு தாக்கத்தைச் செலுத்துகின்றன. எகிப்து நாட்டின் அரசியாகவும் உலகின் பேரழியாகவும் நம்பப்படும் கிளியோபாட்ரா, ரோம் நாட்டின் அரசன் நீரோவின் இரண்டாம் மனைவி பொபே சபீனா, மாவீரன் நெப்போலியன் போனபட்டின் தங்கை பெளலின் போனபட் (1780–1825) ஆகியோர் கழுதைப்பாலில் குளிப்பதன் மூலம் தமது உடலின் அழகையும் இளமையையும் பாதுகாத்து வந்ததாகக் குறிப்பிட்டுள்ளனர். ஒருமுறை குளிப்பதற்கு 700 கழுதைகளிடமிருந்து பால் பெறப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. முற்காலத்தில் கழுதைகளின் பதப்படுத்தப்பட்ட தோல் (parchment) எழுதுவதற்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது. சீனாவின் மரபார்ந்த மருத்துவமுறைகளில் கழுதைகள் இன்றளவும் பயன்படுத்தப்படுகின்றன. விசேடதேவையுடையவர்களை ஆற்றுப்படுத்தும் மருத்துவ முறைகளிலும் (DAT – Donkey Assiated Therapy) கழுதைகள் பயன்படுத்தப்படுகின்றன.

மருத்துவத்தின் தந்தை என அழைக்கப்படும் ஹிப்போகிரடிஸ் (Hippocrates 460 – 370 BC) கல்லீரல் பிரச்சினை, தொற்றுநோய் பாதிப்புகள், நீர்க்கோர்வை, மூக்கால் இரத்தம் வடிதல், விசமுறிவு, காய்ச்சல், அயர்ச்சி, கண்நோய், பல்ஈறுப்புண், வயிற்றுப்புண், ஆஸ்மா மற்றும் காயங்கள் என பல்வேறு நோய்களுக்கும் கழுதைப் பாலை மருந்தாகப் பரிந்துரைத்துள்ளார்.

கழுதைகளைப் பார்த்தால் யோகம் வரும் என்றும் , சகுனம் சிறப்பாக அமையும் என்றும் இன்றும் நம்பப்படுவதுடன் நாட்டுமருத்துவத்தில் கழுதைகளின் பாலும் பயன்படுத்தப்பட்டுவருகின்றது. கழுதைகளின் காய்ந்த விட்டையை நெருப்பிலிட்டு புகையை வீடுகளிற்கும், குழந்தைகளுக்கும் பிடிப்பதை இன்றும் நாம் காண்கின்றோம். கழுதைப் பால் குழந்தைகளின் நோய்தடுப்பாற்றலை அதிகரிக்கும் எனக் கூறப்பட்டாலும் மருத்துவ அறிவு வளர்ச்சியடைந்துள்ள இன்றைய காலப்பகுதியில் அவ்வாறான செயல்கள் குழந்தைகளுக்கு நோய்த் தொற்றுகளை ஏற்படுத்துமென மருத்துவர்களால் எச்சரிக்கக்கப்பட்டுள்ளன.

நிறைவுரை:

மாடு தன் எஜமானையும், கழுதை தன் ஆண்டவனின் முன்னணையையும் அறியும்; இஸ்ரவேலோ அறிவில்லாமலும், என் ஜனம் உணர்வில்லாமலும் இருக்கிறது என்கிறார் – (ஏசாயா 1:3) ஆண்டவர். இவ்வாறு மக்களை விட இறைவனை உணர்ந்த அதியுன்னத நிலையில் கழுதைகள் வைக்கப்பட்டன. பைபிளில் கழுதைகள் இறைபணியாற்றியிருக்கின்றன.  மரியாள் கற்பிணியாய் இருக்கும் போது கழுதையின் மேல் பயணித்தார் என்றும், இயேசு கிறிஸ்து கழுதையின் மேல் ஜெருசலேம் (மத்தேயு 21:1-11) நகருக்குள் ஊர்வலமாக சென்றார் எனவும் பைபிள் கதைகளில் கூறப்பட்டிருக்கின்றன. குருத்தோலை ஞாயிறன்று கிறிஸ்து கழுதையின் மேல் பயணித்ததால் கழுதைகளின் பின்பக்கமும், முதுகிலும் குருசு போன்ற அடையாளம் ஏற்பட்டதாக கிறிஸ்தவம் பரவிய காலப்பகுதியில் இருந்து இன்றுவரை நம்பப்படுகிறது. பைபிளைப் போலவே இஸ்லாமிய புனித நூலிலும், இந்துக்களின் நூல்களிலும் கழுதைகளைப் பற்றிக் கூறப்பட்டிருக்கின்றன. சுதனைச் சிலுவையில் அறைந்தவர்கள் மன்னிக்கப்பட்டார்கள். குருசு புனிதமடைந்தது. ஆனால் வாழ்க்கை முழுவதும் தனது மனிதர்களையும், ராஜாக்களையும், தீர்க்கதரிசிகளையும், எஜமானர்களை விசுவாசத்தோடு சுமந்த இந்த கழுதைகள் மட்டும் தமது ஆக்கினைகளில் இருந்து எவராலும் இரச்சிக்கப்படவில்லை. இவைகளின் விசுவாசமும் ஏக்கக்கதறலும் எந்த எஜமானனின் செவிகளையும் எட்டவேயில்லை. கர்த்தர் (எண்ணாகமம் 22: 28) பிலேயாமின் கழுதையின் வாயைப் பேசுமாறு திறந்த போது “நீர் என்னை இப்பொழுது மூன்று தரம் அடிக்கும்படி நான் உமக்கு என்ன செய்தேன்” , “நீர் என்னைக் கைக்கொண்ட காலமுதல் இந்நாள்வரைக்கும் நீர் ஏறின கழுதை நான் அல்லவா? இப்படி உமக்கு எப்போதாகிலும் நான் செய்தது உண்டா” (எண்ணாகமம் 22:29-30) என்று கேட்டது. இன்றைய சூழலில் கழுதைகளுக்கு பேசும் சந்தர்ப்பர்ப்பம் கிடைத்தால் அவை எம் பிரதேசத்தில் அனுபவிக்கும் துன்பங்களைக் கூறுவதற்கு நாம் அனுபவித்த 3 தசாப்தங்களும் காணாது எனும் வருத்தமே எஞ்சி நிற்கின்றது. காதுள்ளவர்கள் கேட்கக்கடவர்.

 

உசாத்துணை:

 1. பைபிள் / 2. புறநானூறு – 392, அவ்வையார் ; 15 – நெட்டிமையார் / 3.அகநானூறு – 89 /
 2. பதிற்றுப்பத்து – 25/ பெரும்பாணாற்றுபடை 78-80
 3. விலங்குபண்ணை – ஜார்ஜ் ஆர்வெல் (பி.வி.ராமசாமி)
 4. ஈழமண்டல புலவர் சரிதம்-ஆ.முத்துப்பிள்ளை
 5. Donkey Census Project Report – Mannar Town 2012
 6. Christine E.Berry Donkeys : Business As Usual
 7. Edwin Dharmaraju -1963- Coconut Research Institute, Lunuwlla, Sri Lanka – Donkeys And Beauty Contests In The Control Of The Black Beetle Of Coconut
 8. A. C. R. Perera -1978 – Coconut Research Institute, Lunuwlla, Sri Lanka, Coconut Pests In Sri Lanka—The Coconut Caterpillar Hippocrates (1843). The Genuine Work of Hippocrates. Vol. 1.
 9. Of Donkeys And Nomo Grams – Department Of Mathematics University Of Bristol
 10. A.Person, M.Ouassat –The Veterinary Record, March9, 1996- Estimation Of The Live Weight And Body Condition Of Working Donkeys In Morocco
 11. Edinburgh: Archibald Constable & Cie. 1823 -Encyclopædia Britannica: Arts, Science And Miscellaneous Literature.
 12. Pliny The Elder (1855). The Natural History. Book Xxviii. Remedies Derived From Living Creatures.
 13. Pushpa Narayan (2008-05-06). “Mothers Feed Newborn Babies Donkey Milk”. Times Of India.#மன்னல் 2015 #தீபம் 2015.11.22 & 2015.11.29
  “ஏழைகளின் குதிரை” வரவும் வரலாறும்  #மன்னார்_அமுதன்

ஒற்றை யானை

தலை கிறுகிறுக்க அருகில் இருந்த பிளாஸ்டிக் கதிரையை பிடித்தாள். கதிரையில் ஒட்டியிருந்த செலோடேப்பில் ஈரக்கைபட்டு வழுக்கியது. கதிரை சாய்ந்துவிட நெற்றி போய் சுவரில் மோதிக்கொண்டது. வலித்த நெற்றியைத் தடவிய போது விரலில் இரத்தம் பிசுபிசுத்தது. சுவரோடு சாய்ந்து கொண்டாள். கால்கள் வலுவற்று தரையில் நிலைகொள்ள மறுத்தன. அப்படியே இருந்துவிட்டால் சுகமாயிருக்கும் போலிருந்தது. அது ரணமாகவிருந்தாலும் வேறு வழியில்லை….. சிறிது நேரம் அப்படியே இருந்து தான் ஆகவேண்டும். உதவிக்கு ஆளில்லாத வீட்டில்  எவ்வளவு நேரம் அப்படியே இருந்திருப்பாள் என தெரியாது.  முழிப்பு வந்த போது பசித்தது. எழுந்து கொள்ள முடியாதபடி கால்கள் வலித்தன. பிளாஸ்டிக் கதிரையை நம்ப முடியாது. ஊன்றி எழும்பும் போது திரும்பவும் வழுக்கிவிடும். மெள்ளத் தவண்டு சாய்மானக் கதிரைக்கு கிட்ட போனால் ஊன்றி எழும்பி விடலாம். கோயிலுக்கு போன மூத்தவள்  வாறதுக்குள்ள எப்படியாவது எழும்பிரனும்.

முதுமைக்கென்றே இருக்கும் அழகில் ஒரு முறை முக்கியெடுக்கப்பட்ட தோற்றம் டெய்சியாச்சிக்கு. மலையிலிருந்து தலைவிரிகோலமாய் இறங்கும் ஆற்றின் வகிடினைப்போல சுருக்கங்கள் நிறைந்தது அவள் முகம். இடுங்கிய கண்களுக்குள் இன்னும் ஒளி இருந்தது. கண்களினடியில் பைவிழுந்துவிட்டது. செத்துவிட ஆசைப்படும் வயது. இரண்டு உலகப் போர்களையும் கண்டவள். அம்பத்தியாறாம் ஆண்டு மொழிப்பிரச்சினையில் புருசன் வேலையைத் தூக்கியெறிந்துவிட்டு வந்தபோது அய்ந்தாவது பிள்ளையாக அவரையும் ஏற்றுக்கொண்ட கருணை இன்னும் வடியாமல் இருந்தது. ஒவ்வொரு சனிக்கிழமையும் சுடுதண்ணீர் வைத்து முழுகிவிடுவாள். ஞாயிற்றுக்கிழமை ஏழுமணிப்பூசைக்கு அவள் போகும் போது அறுவதை நெருங்கும் ஆச்சிகளுக்கு அசிட் குடித்ததைப் போல வயிறு எரியும். சாகிறகாலத்துல சென்ட் அடிச்சிட்டு திரியுறா பாரென துப்பிக்கொள்வார்கள்.

ஊன்றி எழும்பிய போது தலை சுற்றுவதைப் போலிருந்தது. கைத்தடியை எடுத்துக்கொண்டால்  தேவலாம். கனடாவில் இருந்து வந்திருக்கும் மூத்தவள் வாங்கியனுப்பியது. கை பிடிக்கும் இடத்தில் ஒரு வாய் திறந்த யானை தும்பிக்கையை உயர்த்தி பிளிறிக்கொண்டிருந்தது. எண்பதாவது வயதுவரை கைத்தடியை பாவிக்கவில்லை.

ஆனால் வெளியில் எங்கும் போகும்போது தனது கையில் கொழுவிக்கொள்வாள். மகளை ஒத்த வயதுடையவர்கள் வரும் போது பெருமையாகக் காட்டுவாள்.  அவளுக்கு கைத்தடியை ஊன்றுவதும் கண்ணாடியைப் பாவிப்பதும் கெளரவக்குறைச்சல் தான். ஆனால் தனித்த இரவுகளில் கைத்தடியை அருகில் வைத்துக்கொள்வாள். அந்த யானை தன்னை தும்பிக்கையை உயர்த்தி ஆசிர்வதிப்பதைப் போல இருக்கும். சில இரவுகளிலும், நீண்ட பகலிலும் யானையின் பிழிறல்கள் கூட கேட்டதுண்டு. முன்வாசலில் இருந்து சாலையைப் பார்த்தபடி யானையின் தலையைத் தடவிக்கொண்டிருப்பதில் அவளுக்கு நிறைய விருப்பம். அது தனது கனடா பூட்டனின் முன் தலையத் தடவியதை ஞாபகப்படுத்தும்.

பாக்கு போட்டதைப் போல தொண்டை அடைத்துக்கொள்ள செருமிக்கொண்டாள். வழிந்த கண்ணீரை துடைக்கவில்லை. முகத்தைக் கழுவிக்கொண்டாள். இரத்தம் நின்றிருந்தது.

இரண்டு இடியப்பத்தை போட்டுக்கொண்டு குசினிக்குள் இருந்த கதிரையை இழுத்துப்போட்டு இருந்தாள். நேரத்தைக் கடத்துவதற்காக ஒவ்வொரு நாளும் சமைக்கிறாள். வர வர சாப்பாட்டில் நாட்டமில்லை. குசினிக்குள் வியர்த்து வடிந்தது. இரத்த அழுத்தம் கூடியிருக்கலாம். மனம் ஒரு இடத்தில் நின்றபாடில்லை. நடுசாலைக்குள் சென்றால் சுகப்படும் என அங்கு வந்து காற்றுப்படுமாறு அமர்ந்துகொண்டாள்.

கணவன் அரசாங்க வேலையிலிந்து விலகி அரசியலிற்குள் இறங்கிய போது குடும்பம் ஆட்டம் கண்டிருந்தது.நான்கு பிள்ளைகளையும் படிப்பிக்க அவள் தான் உடுப்பு தைக்கத் தொடங்கினாள். இனப்பிரச்சினை தொடங்கிய காலத்தில் பெரியவன் இந்தியாவிற்கும், ஒருத்தி கனடாவிற்கும் புலம்பெயர்ந்துவிட மற்றைய இருவரும் நகரத்துக்குள் முடித்துக்கொண்டு போய்விட்டனர்.

பேரப்பிள்ளைகள் பிறந்த போது கனடாவில் இருப்பவள் பிள்ளைகளை வளர்ப்பதற்காக கனடாவிற்குக் கூப்பிட்டாள். இரண்டு பிள்ளைகள் பிறந்த போதும் இவள் தான் போயிருந்து பத்தியம் பார்த்தாள். பேரப்பிள்ளைகளோடு இருப்பது கணவனின் சாவிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள வசதியாயிருந்தது.  மகனின் பிள்ளைகள் பிறந்த போது இந்தியாவிற்கும் சென்றாள். ஆனால் எங்கும் வசதிப்படவில்லை. கனடாவில் கறியைச் சூடாக்கி சாப்பிடவேண்டிருந்தது. கிழமைக்கு ஒருக்கா சுடுதண்ணி போட்டு தலைமுழுகிறவக்கு அங்க கிழமைக்கு ஒருக்கா சமைச்சு ஒவ்வொரு நாளும் சூடாக்கி சாப்பிடறது அரியண்டம் தான். அதைச் சொல்லி போகப்போறன் புள்ள டிக்கட் போடு என்ற போது மகள் பேசினாள்.  அடுப்பணைக்க மறந்த ஒருநாளில் சட்டியும் எரிந்து குசினிக்குள் புகை மூண்டபோது மகள் சொன்னாள் “எங்களைக் கொண்டிராதனை… நீ அங்கயே போயிரு”

அம்மா நாட்டுக்கு வந்த கொஞ்ச காலத்தில கனடாக்காரிக்கு மனசு கேக்கல… அம்மாவுக்கு ஏதாவது உபகாரம் செய்யணுமெண்டு நினைச்சு வருசா வருசம் ஏதாவது ஒரு பொருளை வாங்கிக் குடுங்கன்னு நாட்டுக்கு வர்ரவங்களிட்ட காசு குடுத்துவிடுவா…  இப்ப வீடு நிறைய சாமான்… ஒத்தயா டெய்சியாச்சி.

000

கனடாக்காரி நாட்டுக்கு வந்தா சகோதரங்களையும் கூப்பிடுறது வழமை.. இந்தியாவில் இருக்கும் தம்பிக்கு தானே டிக்கட் போடுவா… இவ கொண்டு வார சொக்லட்டுகள் டின்பால் குடிக்கிற மாதிரி இனிப்பும் கொஞ்சம் கசப்புமா இருக்கும். … உடுப்பும் நல்ல வாசம்… எப்பவுமே வராத சின்னவனும், சவுந்தரியும் கூட வருவாங்க…

வீட்டுக்கு வந்த இளைய மகனும், மகளும் சாமான்களை கண்டு திகச்சு போயிட்டாங்க… அம்மா செத்தா இதையெல்லாம் யாரு எடுக்கிறது… இளையவனின் மனுசி கராராக சொல்லிவிட்டாள், சாமான் தராட்டி “மாமி செத்தா, எங்கட வீட்டுல வைக்க முடியாது”.

மகளுக்கு அப்படி சொல்ல முடியல. “சீதனம் தந்த வகையில எனக்கு எல்லாமே கொறச்சல் தான்… அதனால மர அலுமாரி, ஆறுபிளாஸ்டிக்கதிரை, சாப்பாட்டு மேசை, சாய்மானக்கதிரை, தையல்மெசின், பிரசர் பொக்ஸ், கியாஸ் அடுப்பு, சிலிண்டர் எல்லாத்தையும் எனக்குத் தான் தரனும்.

வாய்த்தர்க்கம் கைக்குஎட்ட முன்ன கனடாக்காரி தான் சொன்னா, அம்மா சாகிற வரைக்கும் யாரும் ஒரு பொருளையும் எடுக்கக்கூடாது. அம்மா யாருக்கு குடுக்கனும் எண்டு விரும்புறாவோ அவங்களுக்கு குடுக்கலாம்.

சாப்பிட்டுவிட்டு ஆச்சி அறைக்குள் சென்றவுடன் இளையதம்பி தொடங்கினான்…  “அம்மாவுக்கு முன்னப்போல இல்லை… இப்ப எத்தன தரம் விழுந்துட்டா. போன முறை டொக்டர்ட கொண்டுபோன நேரமே சொன்னவர் ,“தொடர்ந்து தையல் மெசின்லயே இருந்ததால  காலில தேய்மானம் கூடவாம், நிக்க நடக்க கஷ்டமெண்டு.

எங்கட நாட்டுல ஒருத்தர் உழைச்சு ஒருத்தர் வாழுறதே  பெரும்பாடெண்டு உனக்கு நான் சொல்லியா தெரியனும் என்றவாறே சாப்பாட்டுக் கோப்பைக்குள் கையைக் கழுவினான் பெரியவன்.

இவ்வளவு காலமும் நீங்களா பாக்கிறிங்கள். உங்கட பிள்ளைகளையும் அம்மா வளத்துவிட்டவா தானே… உங்களுகளுக்கும் கடமை இருக்கெண்டுறத யாரும் மறக்காதிங்க. விளங்கிச்சோ… நீங்க செய்யாட்டியும் மாசாமாசம் நான் காசு அனுப்புவன்.

அம்மாவ வச்சிப்பாக்க எங்களுக்கு விருப்பம் தான் அக்கா. ஆனால் என்ற மனுசனை உனக்கு தெரியும் தானே… அவருக்கும், இவவுக்கும் ஒவ்வாமை கிடக்கு… ஆளில்லாத நேரத்துல அடிச்சு சாக்காட்டினா நாளைக்கு உனக்கென்ன பதில் சொல்றது..

அம்மா இருக்கிற மாதிரியே இங்க இருக்கட்டும். இந்த பாங்க் கணக்க மட்டும் என்னோட பேருக்கு மாத்திட்டுப் போ… இல்லாட்டி எண்ட கணக்குக்கு காசை போடு. நாளைக்கு செத்தா கனடாவிலருந்து வந்தா அடக்கம் செய்யப்போற. கையில காசில்லாம இங்க ஒரு வேலையும் செய்யமுடியாது.

சின்னவன்… பாங்க் கணக்கு அப்படியே இருக்கட்டும். அதுதான் அவக்கு சுகப்படும். உனக்கு கொஞ்சம் காசு தந்திட்டு போறன்.. இடையில எதுவும் நடந்தாலும் கடனை வாங்கியாவது செஞ்சு போடு. நானும், பெரியவனும் நினைச்ச உடன வரமுடியாதெண்டு உனக்கு தெரியும் தானே. பிறகும் காசு அனுப்புவன்…

“எல்லாரும் நிக்கிற நேரமே எதுவும் நடந்திட்டால் நல்லம் போலக் கிடக்கனை… காரியத்தை எல்லாரும் சேந்து செஞ்ச மாதிரி போயிருமே… இதேன் ஒராள ஒராள் பாத்துக்கொண்டு… கடைசி நேரத்துல முகம்பாக்க முடியாம நீயுமல்லா நொந்து சாகனும்… அம்மாவுக்கும் அதொரு கொடுப்பினையா போயிரும்… ”

            பெரியதம்பி நித்திரைக்கு போகமுதல் அக்காவிடம் கேட்டான் “அந்த டிஜிட்டல் பிரசர் பொக்சை மட்டும் நான் எடுத்துட்டுப் போகவா.”

ஆச்சிக்கு அன்றிறவு நித்திரையில்லை. கண்மூட முடியாமல் கண்ணீர் வழிந்து கொண்டேயிருந்தது. தன்னை யாரும் கூட்டிக்கொண்டு போவதாக சும்மா கூட ஒரு வார்த்தை சொல்லவேயில்லையே… ஏன் பிள்ளை…. உங்களுக்கு அவ்வளவு பாரமாவ போயிட்டன்  என தனக்குத் தானே சொல்லிக்கொண்டாள்.   அருகிலிருந்த யானையைப் பார்த்தாள். அது ரெளத்ரமாக பிளிறிக்கொண்டிருந்தது.

000

நாலு மணிக்கே கனடாக்காரி எழும்பிட்டா… அவவுக்கு நித்திரை போகலை… வாசலைதிறந்து படியில் இருந்தாள். நொஸ்டாலஜியாக இருந்தது. அப்பா மடிக்குள் வைத்துக்கொண்டு பல்லுத்தீட்டி விட்டதும், குளிப்பாட்டியதும் ஞாபகத்தில் வந்தது. அப்பா வேலைக்கு போகாத காலத்துல கூட அம்மா அப்பாவை எதற்கும் கோவித்துக்கொண்டதில்லை. அம்மா நல்ல வடிவு… சாயலில் அம்மாவைப் போலிருப்பதில் பெருமை தான். எதுவும் வேணுமெண்டு அம்மா கேட்டதில்லை..

இளம்பனியும் குளிரும் மனதை இலேசாக்கியது… புழுதி மணம்… வீட்டைச் சுற்றி நிறைய பூக்கள் பூத்துக்கிடந்தன. ஒரு பூவைக் கொண்டு வந்து அப்பாவின் படத்தின் முன் வைத்தாள். அப்பா சிரிப்பது போலிருந்தது. அப்பா உயிரோடு இருந்திருந்தால் அம்மாக்கு தனிமை இருந்திருக்காது. எங்களை நினைச்சு தான் வேதனைப்பட்டிருப்பார்.

அம்மாவின் அறை மங்கல் வெளிச்சத்தில் திறந்துகிடந்தது. உள்ளே நுழைகையில் மூத்திரவாடை அடித்தது. கதிரையை அருகில் இழுத்து தலகாணியில் கையூன்றி அமர்ந்தாள்… அம்மா அழுதிருந்தது தலகாணி ஈரத்தில் தெரிந்தது. கண்ணீரும் பீழையும் சேர்ந்து ஒரு வகிடாய் மூக்குவரை உறைந்து கிடந்தது. கைகளால் தலையை வருடினாள். உறைந்து போன பீழையைத் தடவி எடுத்தாள்… அம்மா முழித்துக் கொண்டாள். என்ன பிள்ள காத்தாடி இல்லாம நித்திரை போகலையோ… தேத்தண்ணி போடவா… என மெல்லிசாய் கேட்டபடி கண்களை மூடிக்கொண்டாள்.

மெல்லிய இரவுடையில் அம்மா வெறும் கூடாகத் தெரிந்தாள். கூன் உடம்பில் கழுத்து எழும்புகள் துருத்திக்கொண்டிருந்தன. மார்புகள் தொங்கி வயிற்றைத் தொட்டிருந்தன. மெல்லிய உடலிற்கு சம்மந்தமில்லாமல் வயிறு தனியாக சரிந்து கிடந்தது. மெல்ல வயிற்றைத் தடவிப்பார்த்தாள்… மிருதுவாக இருந்தாலும் பேறுகாலத் தழும்புகளை கையில் உணரமுடிந்தது. இந்த வயிற்றில் தானே எங்களைச் சுமந்தாள்….  எத்தனை ஆசைகளோடு வளர்த்திருப்பாள்….

 “வேலை முடிஞ்சதும் எழும்பிப் போயிருவீர்… நானல்லா சுமக்கனும்…” என இரண்டாவது கருவைக் கலைத்துக் கொண்டது ஞாபகம் வந்தது.  எழுந்து கண்ணாடியில் ஒரு முறை வயிற்றைப் பார்த்துக் கொண்டாள். அதுவும் வெளியில் தான் தள்ளிக் கிடந்தது.

படுக்கையறைக்குள் இருந்த மூத்திரவாளியை தூக்கிக்கொண்டு வெளியேறினாள். புழக்கடையில் பன்னாடைகளைப் போட்டு சுடுதண்ணி வைத்த அடையாளம் இருந்தது. எரிச்சல் பட்டாள்… கியாஸ் அடுப்பு இருக்க இவ ஏன் புகையில கிடந்து சாகிறா… சலித்தபடி வீட்டிற்குள் வந்தாள்..

அம்மா எழும்பியிருந்தாள்… அவளிடம் கதைத்து எதுவும் மாறிவிடப்போவதில்லை. தேத்தண்ணி போட்டாள். அம்மாவிடம் குடுக்கும் போது சுடுதண்ணி வைக்கிறன் … குளிக்கிறீங்களா… என்றாள்.

வேணாம் பிள்ளை… கஷ்டப்படாதை… என்றபடி நடுங்கும் கைகளுடன் தேத்தண்ணியை வேண்டிக்கொண்டாள்.

திருந்தாதி மணி அடித்தது. குருசு போட்டுக்கொண்டாள். பூசைச் சத்தம் மைக்செட்டில் தூரத்தில் கேட்டது. ஒரு கட்டு செபப்புத்தங்களை எடுத்துக்கொண்டுவந்து செபம் சொல்லத் தொடங்கினாள். அம்மாவின் பழக்கங்கள் எதுவும் மாறியிருக்கவில்லை. பெரியவளும் இங்கிருந்து போகும் வரை காலைச் செபம், மதியச் செபம், மூணு மணிச் செபம், இரவுச்செபம் என எல்லாம் சொன்னவள் தான்.

வெளிநாட்டிற்கு போனபிறகு காசிருந்தா காணும் என நினைத்துக்கொண்டாள். வருடத்திற்கு ஓரிரு முறை உல்லாசப்பிரயாணம் போல கோயிலுக்கு போறது தான்.  கோயிலுக்கு போனால் பழைய ஆக்களை எல்லாம் பார்க்கலாம் என நினைத்துக் கொண்டாள்.

விடிந்திருந்தது…. டோஸ்டரில் இரண்டு பாண் துண்டுகளைப் போட்ட படியே அம்மாவிடம் சொன்னாள் “பெரியவனோ, சின்னவனோ, சவுந்தரியோ யாரு கேட்டாலும் எதையும் குடுக்க வேணாம். ஆனா… யாருக்கு எதைக் குடுக்கலாம் என யோசிச்சு எழுதி வையுங்க.. வீட்டை மட்டும் யாருக்கும் குடுக்காதீங்க.. பிறகு நானோ, பெரியவனோ நாட்டுக்கு வந்தா ரோட்டுல தான் நிக்கனும்… வீட்ட இதுல வச்சுக்கொண்டு ஹோட்டலில தங்கினா நல்லாவா இருக்கும்… கேட்டீங்களோ அம்மா… அப்பாட பேருக்கு தான் மரியாதயில்லாம போயிரும். வீட்டை என்னட பேருல எழுதிவிடுங்கோ… யாரெண்டாலும் இருக்கட்டும். நாங்க வந்தாலும் தங்கலாம்..

எங்கட கடசிக் காலத்துக்கு நாங்க எப்படியும் இங்க தானம்மா வரனும்.. பிள்ளைகள் பாக்கும் எண்டு எதிர்பாக்கமுடியாது. வீடு கைமாறினா இந்தச் சந்ததி இருந்ததுக்கு அடையாளம் இருக்காதெண்டு தெரியும் தானே..

லோயர்ட கதைச்சிட்டன்… டொக்குமெண்ட்ஸ் எல்லாம் சரி… பின்னேரமா போய் கையெழுத்து போட்டா சரி என்றபோது டெய்சியாச்சி ஜன்னலைத்தாண்டி எங்கோ பார்த்துக்கொண்டிருந்தாள்.

000

டெய்சியாச்சி பிறந்து சில நாட்களில் அப்பா இறந்திருந்தார். பதிமூன்று வயதிருக்கும் போது அம்மாவும் இறந்துவிட திருமணம் முடித்த அக்கா தான் வளர்த்தாள். வீட்டிற்கு பின்புறமிருந்த காணியை அக்கா தந்த போது காடுமண்டிக்கிடந்தது. 18 வயதில் டெய்சியாச்சிக்கு ஆங்கில ஆசிரியையாக வேலை கிடைத்தது. முதல் மாத சம்பளமெடுத்து காடு திருத்தினாள். மாதச் சம்பளத்தை சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக வீட்டைக் கட்டினாள். அத்திவாரம் முடித்தபோது மழை கொட்டியது. அக்காவுடைய மேட்டுவீடே தண்னீருக்குள் மூழ்கி கிடந்தது. டெய்சியாச்சியின் அத்திவாரத்தைக் காணவேயில்லை. நிலம் காய்ந்தவுடன் அத்திவாரத்தை உயர்த்திக் கட்டினாள். ஆறடி உயரத்தில் அத்திவாரம் போட்டாள். வாசலில் நின்று பார்த்தால் நாலு ரோடும் தெரியும் உயரம். வீடு இரண்டு அறையும், குசினியும்,விறாந்தையும் பின்னுக்கு கக்கூஸ் என கட்டிக்கொண்டாள். அந்த நாட்களை நினைத்தால் ஆச்சிக்கு இன்னும் அழுகை வரும்.

00

கண்களைத் துடைத்துக்கொண்டாள். பெரிய மகளுக்கு வீடு எழுதியாச்சு.  மிச்சம் இருக்கிறதுகள சின்னவங்கள் ரெண்டு பேருக்கும் சரி பாதியா பிரிச்சா சரி. பேப்பரில் பேர் எழுதி விடுபட்ட பொருட்களில் செலோடேப் போட்டு ஒட்டினாள். பிரசர்பொக்ஸ்சில் பெரியமகனின் பெயரை ஒட்டினாள்.

நெஞ்சு கனப்பது போலிருந்தது. மூச்செடுக்கவும் முடியவில்லை. சுடுதண்ணி வைக்க நேரமில்லை.. குளித்தாள்.. தன் சின்ன சூட்கேசை எடுத்து கல்யாண சீலையை உடுத்திக்கொண்டாள். அதில் தன் கணவனின் வாசம் அடிப்பதைப் போலிருந்தது. முந்தானையை திரும்பத் திரும்ப மணந்து பார்த்தாள்… காலுறையும், கையுறையும் அணிந்து கண்ணாடியில் ஒருமுறை பார்த்தாள். மணக்கோலம் மனதில் நிழலாடியது. கையில் சுற்றிவிட ஒரு செபமாலை, வாசனைத் திரவியம் என அருகில் அருகில் எடுத்து வைத்துக் கொண்டு கட்டிலில் படுத்தாள்.

மார்போடு அணைத்திருந்த யானையைப் பார்த்தாள்… அதன் தலையைத் தடவினாள்…. கண்களில் இருந்து கண்ணீர் வழிந்துகொண்டிருந்தது… அதில் ஒட்டப்பட்டிருந்த துண்டில் எழுதிக்கிடந்தது “இன்றே அடக்கம் செய்யவும்”.

000

 • மன்னார் அமுதன்